ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ரிஷிவந்தியம்
நிறம் மாறும் லிங்கம் , நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம் , சாய்ந்த நிலையில் உள்ள லிங்கம் , வடு உள்ள லிங்கம் என பல லிங்கங்களை நாம் பார்த்திருப்போம் , அதுமட்டும் அல்லாமல் அர்த்தநாரீஸ்வரர் கோயில் என மிக குறைந்த கோயில்களே உள்ளன அதிலும் உமையவளோடு பாதி சேர்ந்த நிலையில் இறைவன் இருப்பதையே பார்த்திருப்போம் . ஆனால் இந்த தலத்தில் இறைவன் லிங்க திருமேனியின் மீது தேனாபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் இடைநெளிந்த கையில் கிளியுடன் அம்மன் காட்சி தரும் அதிசிய லிங்கம் வேறு எங்கும் காண இயலாது .
இருபுறமும் நகரத்தின் வளர்ச்சியில் சிக்காமல் இருபுறமும் அழகிய உயர்த்த நிழல் தரும் மரங்கள் , அவைகளுக்கு இடையே திரண்டு ஓடும் ஆற்றை போல் சாலைகள் , அதிகம் வளர்ச்சி அடையாத நடுத்தரமான எல்லா வசதிகளும் கொண்ட மிக அழகான ஊர். ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது .
கோயில் அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது , கோபுரத்தின் முன் சிறிய மண்டபத்தில் ரிஷபம் உள்ளது , இடது புறத்தில் தலத்தின் தீர்த்த குளம் உள்ளது . கோயிலின் உள் சென்றால் பலிபீடம் , கொடிக்கம்பம் மற்றும் நந்தியை காணலாம் . வலது புறத்தில் ஒரு வசந்த மண்டபம் உள்ளது , அந்த மண்டபத்தில் மிக அழகான நேர்த்தியாக யாளிகளை செதுக்கியுளார்கள் . அதில் ஒரு யாளியின் வாயில் ஒரு உருண்டை கல் உள்ளது , அதை நாம் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளேயே உருளும் படி மிக நுணுக்கமாக செதுக்கியுளார்கள் , நீங்களும் அங்கு போகும் போது இதை மறக்காமல் பாருங்கள் .
இடது புறத்தில் ஒரு வசந்த மண்டபம் உள்ளது , அதில் சிறிய சிறிய சிற்பங்கள் மற்றும் யாளியை செதுக்கியுள்ளார்கள் . இவ்மண்டபத்தில் இசை தூண் ஒன்று உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு விதமான ஓசையை வெளிப்படுத்துவது நமக்கு கண்டிப்பாக ஆச்சரியத்தை தரும் .
இப்போது நாம் கோயிலின் கருவறை மண்டபத்திற்கு செல்லலாம் , இக்கோயிலானது கருவறை, அந்தரலா, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் என அமைப்புடன் காணப்படுகிறது . கோயிலின் கருவறையானது இரண்டு அடுக்கு விமானத்துடன் காணப்படுகிறது .
இப்போது இறைவனை காண செல்லலாம் , இவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார் , விஜயநகர மன்னர் காலத்தில் விவசாயம் செய்வதற்காக மண்ணை தோண்டும் போது மண்வெட்டியால் வெட்டப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அவர்தான் இப்பொது இங்கு அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார் . இன்றும் கூட வெட்ட பட்ட கீறலை நாம் லிங்கத்தின் மீது காணலாம் . இங்கு தினமும் காலை 11 மணிக்கு நடக்கும் தேனாபிஷேகத்தில் லிங்கத்தின் மீது இடைநெளிந்த கையில் கிளியுடன் தாயாருடன் காட்சி கொடுப்பதை காணலாம் . இதற்கு Rs 100 தரிசனம் சீட்டு வாங்க வேண்டும் .
இத்தலத்தில் வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும் , அகத்தியருக்கு திருமண கோலத்தையும் , பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பண்புகளையும் , குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார் . அவர்கள் பெற்ற அருளை நாமும் பெற இறைவனை பிராத்தனை செய்வோம் .
நாம் இப்பொது உள் பிரகாரத்தை வலம் வருவோம் , கருவறை கோஷ்டத்தில் விநாயகர் , தக்ஷிணாமூர்த்தி , லிங்கோத்பவர் மற்றும் துர்கை ஆகியோர்கள் உள்ளார்கள் . வளம் வருகையில் நாம் 63 நாயன்மார்கள் , அகத்தீஸ்வரர் தன் மனைவியுடன் , நாகர் ,சண்டீகேஸ்வரர் , விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் , உண்ணாமலையார் உடனுறை அண்ணாமலையார் , வள்ளி தெய்வயானை சமேத முருகர், அர்த்தநாரீஸ்வரர் சுதை சிலை மற்றும் நவகிரக சன்னதி ஆகியோர்களை நாம் தரிசனம் செய்யலாம் . தாயார் முத்தாம்பிகை தனி சன்னதியில் உள்ளார் .
கோயிலானது கி . பி 1262 ஆம் ஆண்டு ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது . கி . பி 1269 இல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் புனரமைக்கப்பட்டுள்ளது .
கல்வெட்டுகள் :
ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் மேற்குப்புற வராண்டாவில் உள்ள ஒரு பலகையில் உள்ள கல்வெட்டில் பொன் பரப்பின பெருமாள் ஜடாவர்மன் என்கின்ற முதலாம் சுந்தர பாண்டியனால் கி பி 1269 இல் வைக்கப்பட்டுள்ளது . இரண்டாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் மேற்கு சுவரில் உள்ளது அதில் கோனேரின் மை கொண்டான் மாறவர்மன் மூன்றாம் விக்கிரபாண்டியனால் கி பி 1283 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது . அதில் இருவிசம் என்கின்ற ராஜநாராயண பட்டணத்தில் உறையும் என்று தொடங்கும் கல்வெட்டாகும் . மூன்றாம் கல்வெட்டு மகா மண்டபத்தின் தென்புற சுவரில் உள்ளது , அதில் நிலவரி செலுத்திய விவரம் உள்ளது , நான்காம் கல்வெட்டு நாடு மண்டபத்தின் மேல்புற சுவரில் உள்ளது , இதில் நிலம் பற்றிய செய்தி உள்ளது .
செல்லும் வழி :
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் இருந்து சுமார் 23 km தொலைவில் இக்கோயில் உள்ளது .கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருவம் சென்று அங்கிருந்து சுமார் 22 km இக்கோயிலை அடையலாம் .
#Arthanareeswarar #Rishivandiyam #tamilnadutemples #sivantemples #indiatempletour #ganesh_temple_review
No comments:
Post a Comment