Thursday, August 31, 2023

குறுமாணக்குடி திருத் தலம் மயிலாடு துறைக்கு அருகே உள்ளது. கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளை வாமனன் (குறளன்) வழிபட்டு நலம் பெற்றதால் குறுமாணக் குடி என்று பெயர்.

⚜️  *குறுமாணக்குடி (கண்ணார் கோயில்) கண்ணாயிர நாதர் திருக்கோயில்*                                                                                                                                
🙏 *வழிபட்டவர்கள்* .  வாமனன், இந்திரனுக்காக தேவர்கள், இந்திரன்  மற்றும் பலர்.                                                                                                                                

💥 குறுமாணக்குடி திருத் தலம் மயிலாடு துறைக்கு அருகே உள்ளது.

 கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளை வாமனன் (குறளன்) வழிபட்டு நலம் பெற்றதால் குறுமாணக் குடி என்று பெயர். 

வாமனனுக்கு அருளிய பரமேஸ்வரனுக்கு வாமனேஸ்வரர் என்று திரு நாமம். 

இந்திரனுக்கு ஈசன் *ஆயிரம் கண் வழங்கி அருளியதால் கண்ணார் கோயில்*  என்று தலப் பெயர் அமைந்தது. 

 ஆயிரம் கண் பெற்ற இந்திரன் தீர்த்தம் உண்டாக்கி  வாமனேஸ்வரரைப்  பூஜித்து வழிபட்டதால் ஈசனுக்குக் கண்ணாயிர நாதர் என்று அருள் நாமம்.
       
🌳 *மூவடி மண் தருக என்று வாய் திறப்ப* ---- *மாவலியை வஞ்சித்து*   (திருமங்கை ஆழ்வார்), 
      
🌹 *மறு மாண் உருவாய்* மற்றிணை இன்றி வானோரைச் 
         *செறு மாவலி பால் சென்று உலகு எல்லாம்  அளவிட்ட* 
           *குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்* 
             *கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே*
     
  🔯 *நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்* 
          *சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன்*  (சம்பந்தர்)  
    
 என மகா பலியிடம்  *மூன்று அடி மண் வேண்டும்*   என்று கேட்டு  *வானத்தையும் மண் என்று அளந்த குற்றத்தினாலும்  தானம் கொடுத்த மகா பலிக்கு துரோகம் செய்த பாவத்தினாலும்  உண்டான துன்பம்  தீர்வதற்காகக்*  குறு உருவம் உடைய வாமனன் தினமும் நியமத்துடன் சித்தம் சிவ மயமாய் சிவ பூஜை செய்து வாழ்ந்தான். குறு மாணி தங்கி சிவபூஜை செய்ததால் குறுமாணக் குடி என்று பெயர்.         

இந்த ஊழியில் திரேதா யுகத்தில்  வாழ்ந்த ஒரு இந்திரன்  கௌதம முனிவரை வஞ்சகமாக வெளியேற்றிய பின் அவரது மனைவி அகல்யையுடன் உறவு கொண்டான். 

நடந்ததை அறிந்த கௌதமர் இந்திரனது உடல் முழுவதும் ஆயிரம் பெண் குறியாகுமாறு சாபம் இட்டார். 

தெரிந்தே துரோகம்  செய்த அகல்யையிடம் யார் கண்ணிலும் படாமல் *அஞ்ஞாத வாசம் செய்து வாழுமாறும் விஸ்வா மித்திரர் வரும் காலத்தில் அவரை வரவேற்று உபசரிக்கும் போது மீண்டும் வந்து சேர்ந்து கொள்வதாகவும்*  கூறிய கௌதம முனிவர் இமய மலைக்குச் சென்று தவம் புரிந்தார். *வால்மீகி இராமாயணம் கூறுவதற்கு மாறுபட்டு அகல்யை கல்லானாள் என்பது பிற்காலக் கற்பனை* . 

பல வருஷம்  கூடி வாழ்ந்த, தவறு செய்யாத *மனைவி தூய சீதையே களங்கம் உள்ளவள் என்று இராமனால் அரண்மனை யிலிருந்து வெளியேற்றப்பட்ட போது*  தெரிந்தே *குற்றம் புரிந்த அகல்யை இராமனது கால் தூசு பட்டே சுத்தமானாள்*  என்பது வடி கட்டிய பொருந்தாப் பொய். 
        
வெளியில் வர முடியாமல் மறைந்து வாழ்ந்த இந்திரனைத் தேடித் திரிந்த தேவர்கள் நடந்ததை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்தனர். 

*படைக்கும் தெய்வம் பிரம்மனால் இந்திரனுக்குப் புதிய உடலைப் படைத்துக் கொடுக்க முடியாது, காக்கும் தெய்வம் நாராயணனால் கௌதமரின் சாபத்திலிருந்து இந்திரனைக் காக்க முடியாது, அழிக்கும் தெய்வம் ருத்திரனால் இந்திரனின் தோற்றத்தை அழிக்க முடியாது*  என்பதால் மும்மூர்த்திகளும் பிற தெய்வங்களும் தேவர்களும்  *படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில் புரியும் எல்லாம் வல்ல  ஒரே  கடவுளான சிவபெருமானைக்* குறுமாணக் குடியில் பூஜித்தனர்.  

இந்திரனது தோற்றத்தை மாற்றி யருளுமாறு தொழுது வழிபட்டு வேண்டினர்.  கும்பிடுவோர் குறை தீர்க்கும்  *எல்லை யில்லாத மாபெரும் ஒரே  தூய சக்தியான கருணா சாகரன் இந்திரன் உடலில் இருந்த ஆயிரம் குறிகளையும் ஆயிரம் கண்களாக்கி அருள் புரிந்தார்* .       குறியொன்றும் இல்லாத முக்கண் கூத்தன் தேவேந்திரனுக்கு ஆயிரம் கண் வழங்கியதால் குறுமாணக் குடிக்குக் கண்ணார் கோயில் என்று பெயர். 
       
🔯 *முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்* 
       *பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்தப் பெயர்வு எய்தித்*  
         *தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்* 
            *கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே*  (சம்பந்தர்) 
     
 என விண்ணவர் செய்த சிவ பூஜையினால்  ஈசன் அருளால் ஆயிரம் கண் பெற்றுக் *கண்ணாயிரம் ஆன இந்திரன் பெரு மகிழ்ச்சியுடன் கண்ணாயிர நாதரைப் பூஜித்து வழிபட்டு* ஆனந்தம் அடைந்தான். 

சிவப்பிரியா

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...