Saturday, August 5, 2023

சிவபெருமானும் உமையம்மையும்விவசாயியாக வந்து திருவிளையாடல் புரிந்த தலம்.

சிவபெருமானும் உமையம்மையும்
விவசாயியாக வந்து திருவிளையாடல் புரிந்து 
நாற்று நட்ட தலமான,
கரிகால சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற 
கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றான, 
தேவார வைப்புத் தலமான, காமதேனு முக்தி பெற்ற தலமான
நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
#கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#மேலைச்சிதம்பரம் என்ற #பேரூர் (#திருப்பேரூர்)
#பட்டீஸ்வரர்
#பச்சைநாயகி_அம்மன் திருக்கோவில் வரலாறு:

சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்பது பழமொழி. பிரபஞ்சத்தின் தொடக்கமும் முடிவுமாக சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் அனைத்து துயரங்களையும் போக்கும் தெய்வமாக நாடெங்கும் பல கோயில்களை கொண்டிருக்கிறார். அப்படியான ஒரு கோயில் தான் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற மற்றும் தேவார வைப்பு ஸ்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் பட்டீஸ்வரர் எனவும், அம்பாள் பச்சைநாயகி, மனோன்மணி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக புளியமரம் மற்றும் பனைமரம் இருக்கின்றன.

மூலவர் - பட்டீஸ்வரர்

தாயார் - பச்சை நாயகி, மனோன்மணி

தல விருட்சம் - புளியமரம், பனைமரம்

புராணப் பெயர்: மேலைச் சிதம்பரம்,திருப்பேரூர்

தீர்த்தம்: தெப்பக்குளம் மற்றும் நொய்யல் 

ஊர் - பேரூர்

மாவட்டம்: கோயமுத்தூர் 

மாநிலம் - தமிழ்நாடு

பாடியவர்கள்: 

அருணகிரிநாதர்

#பேரூர்_திருப்புகழ்:

"தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான

ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே

பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே

பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே"

__அருணகிரிநாதர்

இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

இத்தலம் பற்றி திருக் கயிலாயப் பரம்பரை திருவாடுதுறை ஆதீனத்து ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய மேலை சிதம்பரம் என்கிற திருப்போரூர் புராணம் விரிவாகப் புகழ்ந்துள்ளது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார் மற்றும் அருணகிரிநாதர் என பலரும் பாடிப் போற்றிய திருக்கோயில் என பல்வேறு பெருமைக்குறியது.

மற்ற கோயில்களைப் போல சிவலிங்கம் இல்லாமல், இங்குள்ள பட்டீஸ்வரர் சிவ லிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு இருப்பதை இன்றும் நம்மால் காண முடியும். கோயிலின் முன் ‘பிறவாப்புளி’ என்ற புளியமரம் உள்ளது. இந்த கோயிலில் உள்ள புளியமரத்தின் விதையை நாம் எங்கு எடுத்து சென்று விதைத்தாலும் அது முளைக்காது. இப்பகுதியில் உள்ள மாட்டு சாணத்தில் கூட புழுக்கள் வராது.

அப்பர் சுவாமிகள் தனது சேஷத்திக் கோவையில் ஆரூரார் பேரூர் என்னும் இடங்களே குறிப்பிட்டிருக்கிறார். கயிலாயத்தில் ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவி சமேதரமாக அமர்ந்திருக்கையில் நந்தி பகவான் அவரிடத்தில் சுவாமி தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களும் இந்த கயிலாயத்திற்கு நிகராக கருதக்கூடியது எது? என ஒரு சந்தேகம் கேட்டாராம் அதற்கு எம்மெருமான் பதில் கூறியபோது உத்ரகயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம் என மூன்று உள்ளன.

அவை ஒத்த சிறப்புடையவைதான் அனால் எளிய மனிதருக்கும் சென்று முக்தியடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்போரூர் என்கிற தட்சிண கயிலாயம் உண்டு என்றாராம்.இத்தலத்தில் சுவாமி சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது.

#பெயர் காரணம்:

ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.

அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.

பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித்
தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார். “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.

இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோயிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.

 இங்கு “நடராஜப்பெருமான்“ ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு. முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப் பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.
கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, . . .மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக் கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள், இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன.இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க ளைச் சொறிந்து கொண்டிருக் கின்றன. ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத் தன்ற கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு சுல்தான்.

இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான் அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கினறன. நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத் திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.

இங்குள்ள அம்மனின் பெயர் பச்சை நாயகியாகும்.பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.அன்னையின் அன்புமுகத்தைப்பார்த்து கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

#பாடல் பெற்ற தலம்:

இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

#வரலாறு:

இக்கோயில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.

#குறும்பு நடராஜர்:

எல்லா சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

இந்த கோயிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலைநயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்துள்ளது.

இங்குள்ள அமைந்துள்ள கனக சபையில் மகா விஷ்ணு, பிரம்மா, காளி தேவி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜன் தனது தாண்டவ நடன தரிசனத்தை காட்சி தரும் வகையில் அமைந்துள்ளார்.

இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து. என்ற ஐந்து அதிசயங்கள் கொண்டது பேரூர்..!.

#இறவாப்பனை

பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு நின்று கொண்டிருக்கும் பனை மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள்.  இறவாத பனை..
சதுர்யுகங்களாகவாழ்ந்துகொண்டிருக்கும்அதிசயத்தைக்காணலாம் பேரூரில்..!

பட்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆற்றங்கரை செல்லும் வழியில் அருள்மிகு வடகயிலாயநாதர் ஆலயத்தின் அருகில் ஆண்பனை ஒன்றும் பெண்பனை ஒன்றும் நான்கு யுகங்களாக செழித்து வளர்ந்திருக்கும் அதிசயத்தைக் காணலாம்.
பெண்பனை இன்றும் காய்த்து செழித்திருப்பதை காணலாம்.
இறைவன் மரம் என்று இந்த மரங்களில் ஏறமாட்டார்களாம்.

இங்குள்ள பனைமரத்தை தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிராத்தனை செய்துள்ளார். இக்கோயிலின் வடப்புறத்தில் உள்ள பனை மரம், பல நூற்றாண்டுகளாய் அழியாமல் உள்ளது. அதன் பட்டைகளைத் தின்றால் நோய், நொடிகள் நீங்குகின்றன. அதனால் இதற்கு ‘இறவாப்பனை' என்று பெயர்.

#பிறவா புளி

பிறவாதபுளி, என்றுபோற்ற‍ப்படும்  ஆலயத்தின் முன்புறம் இந்த புளியமரத்தின் விதைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.

புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முளைக்க‍வே இல்லை.

இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.

இத்தலத்தை சரணடைந்தோருக்கு பிறப்பு , இறப்பு இல்லை என்பதற்கு சான்றாக கோயிலின் முன்பாக பிறவாப்புளி என்ற புளியமரம் உள்ளது. இந்த மரத்தில் இருக்கும் விதைகள் மீண்டும் மரமாக முளைப்பதில்லை என்பது ஐதீகம். இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். பிறவா புளிய மரம் கோயிலின் முன்புறம், குளத்தின் குபேர மூலையில் உள்ளது.

#புழுக்காத சாணம்:

இத்தலத்து மாட்டு சாணத்தில் புழுக்கள் தோன்றுவதில்லை. இதுவும் ஒரு அதிசய நிகழ்வாகும். இத்தலத்தில் இறக்கும் உயிரினங்களுக்கு எல்லாம் இறைவனே நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை உபதேசம் செய்து தன்னிடம் சேர்த்துக் கொள்வதாக நம்பப்படுவதால் இங்கு இறக்கும் உயிர்கள் அனைத்தும் வலது காதை மேலே வைத்தபடி இறப்பதும் மற்றொரு அதிசயமாகும்.

மேலும் இத்திருத்தலத்தில் திருநீற்று மேடு என்ற பகுதி உள்ளது பிரம்மதேவன் யாகம் செய்த இடமாக இது கூறப்படுகிறது . இங்கு வெட்டி எடுக்கப்படும் வெண்ணிற மணலே ஆற்றங்கரை விநாயகர் ஆலயத்தில் திருநீறாக வழங்கப்படுகிறது.

#மனித எலும்புகள் :

கல்லாவது
 இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யல் ஆற்றில் விடுவார்களாம்.

அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்க‍ப்படும். அதிசயம்... அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.

ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து
 ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

#பங்குனி உத்திரம்:

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெறும். அப்பொழுது கோயில் தேர் அலங்காரப்படுத்தப்பட்டு வீதியில் உலா வரும். கோயில் தேரில் பட்டீசுவரர் - பச்சைநாயகி அம்மன் இருப்பர்.
மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் நான்கு வம்ச பட்டகாரர்கள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பார்கள்.

#நாற்று நடவுத் திருவிழா:

தமிழ் உழவர்கள் இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கும் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா தமிழர் திருவிழாவாகும். திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்ட வரலாறு பின்வருமாறு:

சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளியாகவும் பெண்ணாகவும் நாற்று நடச் சென்றனர். தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்தி தேவரை எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயானார், கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். (இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.

சுந்தரரிடமிருந்து  அற்புதமான பாட்டு வருகிறது 

"பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள் 
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன் 
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில் 
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச் 
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!

சுந்தரருக்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன்
அதைக்க ண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர்.

#சிறப்பு:

கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.

அருள் நிரம்பிய ஆலயத்தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரி ஷி,கோமுனி, பட்டி முனி
போன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். 

இக்கோயிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. இக்கோயிலின் மண்டபம் ஒன்றில் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளன.

இக்கோயிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் (சிவபெருமான்) சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் பிறவாப்புளி (புளியமரம்) மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது.

#கோயில் சிறப்புகள்:

பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கோயிலாக பட்டீஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. சிவாலயங்களில் நடராஜர் ஆடும் நிலையில் இருக்கும் வடிவங்களையே நாம் வழிபடுவோம் ஆனால் ஆடி முடிக்கும் நிலையில் இருக்கும் நடராஜ பெருமானை இக்கோயிலில் நாம் தரிசிக்கலாம். இங்குள்ள கனகசபையில் தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோர்களுக்கு ஆனந்த தாண்டவ நடராஜ தரிசனத்தை சிவபெருமான் வழங்கினார்.

சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் திருவாதிரை விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால் இந்த கோயிலை “மேலைச்சிதம்பரம்”. இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது காமதேனு பசுவின் கால் குளம்புகள் படிந்துள்ளதை இன்றும் நாம் காண முடியும். அம்பாள் பச்சைநாயகி அம்மனுக்கும்,மனோன்மணி அம்மனுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. பச்சை நாயகி அம்மனின் சந்நிதி சதுர வடிவில் இருக்கிறது.

இக்கோயிலை தரிசிப்பவர்களுக்கு முக்தி தரும் தலமாக இருப்பதால், இங்கு நாய் வாகனம் இல்லாமல் பைரவர் அருள்புரிகிறார். அம்மன் சந்நிதிக்கு வெளியே வரதராஜ பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான ஆஞ்சநேயரும் அருள் புரிகின்றனர். ஆதிசங்கரர் இங்குள்ள சிவபெருமானை மறைந்த தனது தாய்க்கு முக்தி தர வேண்டி வழிபட்டுள்ளதாக கூறுகிறார்கள். இக்கோயிலிலுள்ள பனைமரம் இறவா பனைமரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முன்பு பிறவாப்புளி என்கிற புளியமரம் இருக்கிறது. இப்புளியமரத்தின் விதைகளை வேறு எங்கு விதைத்தாலும் அவை முளைப்பதில்லை என்பது ஒரு அதிசயமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

இங்கே இறப்பவர்கள் காதில் சிவபெருமானே நமசிவாய மந்திரத்தை ஓதி முக்தி பேற்றை அருளுவதால் இப்பகுதியில் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் வலது புற காது மேலே இருக்கும் படி வைக்கின்றனர். இப்பகுதியில் பசுக்கள் இடும் சாணத்தில் கூட புழுக்கள் இருப்பதில்லை என்பது ஆன்மீக அதிசயமாக இருக்கிறது. இப்பகுதிக்கு அருகே இருக்கும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கும் பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், இந்த நதியில் இறந்தவர்களின் எலும்பை போட்டால் அது வெண்கற்களாக மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது. மிகுந்த புகழ் பெறவும், நினைத்த காரியங்கள் நடைபெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

#கல்வெட்டு செய்தி:

பேரூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் தண்ணீர் பிரச்சனையில் உடைக்கப்பட்ட கரையை சீராக்கும் செலவை யார் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும்.

#திருவிழாக்கள் :

பட்டீஸ்வரம் திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நிகழ்வு முக்கிய விழாவாகும்.

பங்குனியில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆணியில் நாற்று நடும் உற்சவம்.

#கோயில் அமைவிடம்

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பேரூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

#கோயில் நடை திறப்பு:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...