Friday, August 25, 2023

எல்லாம் சிவன். எதிலும் சிவன். எங்கும் சிவன். அப்படியிருக்கையில் அவனது பூர்வீகம் கேட்கப்பட்ட கதை.

எல்லாம் சிவன். எதிலும் சிவன். எங்கும் சிவன். அப்படியிருக்கையில் அவனது பூர்வீகம் கேட்கப்பட்ட கதை.
சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான். 

அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..? 

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர். 

இது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே. 

அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர். 

சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. "சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?" என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர். 

ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. 

 பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார். 

சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது. 

முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார். 

உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர். 

அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை... இதுதான் உங்கள் பதிலா?" என்று இரைந்தார். 

நாரதர், "அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை," என்றார். ராஜன் வினவினான், "அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?" நாரதர், "இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்," என்று சொன்னார். 

இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், "தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?" 

நாரதர் சொன்னார், "அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார். 
பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது " ஈசன் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி" என்று. 

சிவாயன நம என சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. ஓம் நமசிவாய!!!!!

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...