ஆலயதரிசனம்🚩🚩
வில்லேந்திய வேலவர் அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்..
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலம் மிகப்பழைய சிவாலயம். காசிக்கு சமமாக சொல்லப்படும் 6 தலங்களுள் இதுவும் ஒன்று.
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான்.
அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோவிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.
கோவிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு “குயிலினும் இனிமொழியம்மை’ என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, இந்திரா! இந்த கோவிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.
இத்தலத்திற்கு தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர். ‘சாய்” என்றால் கோரை என்று பொருள். பசுமையான கோரைகள் மிகுந்திருந்த தலமாதலால் இத்தலம் ‘சாய்க்காடு” எனப்பட்டது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயாவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
மாடக்கோவில் என்றால் ‘யானையால் புக முடியாத கோவில்” என்பதாகும். இல்லை என்று சொல்லாத இயற்பகை நாயனார் பிறந்து, முக்தி அடைந்த தலம். இங்குத் தனியே வைக்கப்பட்டுள்ள வில்லேந்திய வேலவர் பஞ்சலோகத் திருமேனி மிகச்சிறப்புடையதும், தொழுது நிறைவு பெறத்தக்கதுமாகும்.
நான்கு கரங்களுடன் வில்லையேந்திக் கம்பீரமாக வேலவரும், உயர்ந்த மயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்குப் பெரு விருந்தாகின்றன. இவை நெடுங்காலம் முன்பு கடலில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு அருகில் பூம்புகார் காவல் தெய்வமாகிய சம்பங்கி அம்மன் கோவில் உள்ளது.
சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு விழா, சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல், மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா, அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்....
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி சிறிது தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாலையோரத்திலேயே கோவில் உள்ளது.
நமசிவாய வாழ்க
No comments:
Post a Comment