கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும், இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கும் வந்து வழிபடவேண்டிய தலம்...!
மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம்.
உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள்.
தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் தழுவலை ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் இறைவனுக்குத் ‘தழுவக் குழைந்த பிரான்’ என்றும் பெயர்.
சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம். சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த
தெய்வப் பதி.
தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
ஏகம்+ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்.
இம்மாவடியின் கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன் ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெயரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று.
மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை இன்றும் காணலாம்.
வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு
மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர். தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார்.
காஞ்சிபுர மண்டலம் முழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது.
எனினும் ஒவ்வொரு கோயிலிலும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும்.
கோயிலுக்கு முன்புள்ளது ‘திருக்கச்சி மயானம்’ கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும்.
ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன.
கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலம்.
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார்.
ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார்.
சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார்.
அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீஸ்வரர் திருக்கோயில் வந்தார் சுந்தரர்.
அங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.
பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார்.
சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து "நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார்.
தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார்.
சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார்.
அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது.
மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் (பூண்டி) ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம் (திருவூறல்) ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து,
"கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்'
என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம்.
குறிப்பு: இத்திருப்பதிகம், தமக்குக் கண் அளித்த இறைவரது திருவருளை வியந்து சுந்தரர் அருளிச்செய்தது.
No comments:
Post a Comment