Tuesday, September 26, 2023

கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்...!

தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் சிவபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்...!
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கொண்டாபுரம். ஆமாம், சிவபுரத்துக்கு தற்போது வழங்கப்படும் பெயர் இதுதான்.

சிவபுரம் யார், என்ன காரணத்துக்காக இந்தப் பெயரை இந்தத் தலத்துக்கு வழங்கினார்களோ தெரியவில்லை; ஆனால், மிகப் பொருத்தமான திருப்பெயர்.

பின்னே… நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களுக்கும் நாயகனான ஈசன், ஐந்து லிங்கங்களாய் அருளோச்சும் தலம் ஆயிற்றே!

மேலும், பன்னிரு ராசிகளையும் நால்வகை யாகப் பிரித்து, ஒவ்வொரு வகைக்கு ஒரு  லிங்கம் என்றும், தன்னுடைய ராசி எதுவெனத் தெரியாதவர்கள் வணங்க ஐந்தாவதாக ஒரு லிங்கம் எனவும் நியதிகள் வகுத்து, முன்னோர் வழிபட்டு வரம்பெற்ற  புண்ணிய க்ஷேத்திரம் அல்லவா இது!

அதுமட்டுமா? இங்கு, ஐந்து லிங்கங்கள் உள்ளபடியால், முறையே ஐந்து பிரதோஷங்கள் விரதம் இருந்து, இங்கு வந்து வழிபட்டால் சகல வரங்களும் கைகூடுகிறது.

இப்படி, சிவ சாந்நித்தியம் செழித்தோங்கும் இந்தத் தலத்துக்கு சிவபுரம் எனும் திருப்பெயர் மிகப்பொருத்தம்தான் இல்லையா?

சிவ சாந்நித்தியம் மட்டும்தானா? அம்பிகையின் அருளும் பொங்கிப் பெருகும் தலம் இது. சொல்லப்போனால்… அந்த ஸ்ரீபுரத்து நாயகி மனது வைத்ததாலேயே இங்கு இந்தச் சிவபுரம் உருவானது. 

அதென்ன திருக்கதை?

ஒருமுறை, அறங்கள் குறைந்து அல்லல்களால் நிறைந்து தவித்தது பூவுலகம். ஜகன்மாதா கலங்கினாள். உலக உயிர்களின் துன்பம் தீர்க்க பூலோகம் செல்வது என்று முடிவெடுத்தாள்.

அருளாடலைத் துவங்கினாள். ஒருநாள், விளையாட்டாக தன் கரங்களால் தன் நாயகனின் கண்களைப் பொத்தினாள். அதனால் அண்டசராசரங்களிலும் இருள் சூழ்ந்தது. அந்த இருளின் கருமை அன்னையின் மேனியிலும் படர்ந்தது. 

தன் கரிய நிறம் மாற, கயிலைநாதனிடமே வழிகேட்டாள். சிவம் சிரித்தது.

அம்பிகையின் எண்ணம் எதுவோ அதுவாகத் தானே சிவ சிந்தையும் இருக்கும். ”பூலோகம் சென்று தவம் இயற்று. உன் மேனியின் கருமை நீங்கும்; பூமியின் கவலையும் தீரும்” என்று  உலகம் உய்ய, உமையாளுக்கு வழிசொன்னது சிவம்.

தேவியும் பூலோகத்தின் பத்ரிகாச்ரமத்துக்குக் குழந்தையாய் வந்தாள்; காத்யாயன முனிவரிடம் வளர்ந்தாள்.

குறிப்பிட்ட பருவம் வந்ததும், அவளிடம் சில பொருட்களைத் தந்த முனிவர், ‘காசிக்குச் சென்று சில காலம் அறம் நிகழ்த்தும்படியும், ‘பின்னர் தெற்கு திசை வரும்போது, ஓரிடத்தில் தான் கொடுத்த பொருட்கள் மாற்றம் அடையும்; அங்கே சிவனருள் கைகூடும்’ என்றும் கூறி, வழியனுப்பிவைத்தார். 

அதன்படி, அன்னை வடக்கே காசிக்குச் சென்று அன்னபூரணியாக அறம் வளர்த்து, நலம் சேர்த்தாள். தக்க காலம் வந்ததும் தெற்கே வந்தவள், மாங்காட்டில் பஞ்சாக்னியின் நடுவில், ஊசி முனையில் தவமியற்றினாள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சியை அடைந்தாள். அங்கே முனிவர் அவளிடம் கொடுத்த பொருட்கள் மாற்றம் அடைந்தன.

புலித்தோல் சோம விருத்தமாக; குடம் குட தீபமாக; ருத்ராட்சம் வில்வ மாலையாக; குடை நாகாபரணமாக; யோக தண்டம் திரிசூலமாக; மணல் சிவலிங்கமாக மாறின.

அங்கே, சிவ பூஜை செய்த அம்பாளுக்குப் பல சோதனைகளுக்குப் பிறகு சிவ தரிசனமும் கிடைத்தது. ஆனால், அன்னை எண்ணிவந்த காரியம் இன்னும் முழுமை பெறவில்லையே! அதைப் பூரணமாக்கும் விதமாக சிவகட்டளை பிறந்தது.

”ராவண வதம் முடிந்து, நமது திருக்கல்யாணக் காட்சியை தரிசிக்க வேண்டி தகடூரில் காத்திருக்கிறான் ராமன். நீ அங்கு செல்” என்று பணித்தார் சிவனார்.

அதன்படி, தகடூருக்கு (தற்போதைய தர்மபுரி) அவள் வரும் வழியில் ஓரிடத்தைக் கண்டாள். உலகை உய்விக்க உகந்த இடம் அதுவே என்று உணர்ந்தாள்.

உலகின் மாற்றங்களுக்கும், உயிர்களின் துயரங்களுக்கும் பஞ்ச பூதங்களின் முரண்பட்ட செயலாற்றல்களே காரணம் அல்லவா? 

ஆகவே, ஐம்பூதங்களையும் ஆற்றுப்படுத்தும் விதமாகவும், அவர்களால் நல்லன மட்டுமே விளையும் படியாகவும் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள் மீண்டும் அவளுக்கு சிவதரிசனம் கிடைத்தது. 

”பஞ்சபூதங்களின் பேராற்றலால் பூமியும் உயிர்களும் செழிக்கும்படி, தாங்கள் இங்கேயே கோயில் கொண்டருள வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். அதை ஏற்று சிவனாரும் பஞ்சலிங்கேஸ்வரராக அங்கே கோயில் கொண்டார்.

கோவில் அமைப்பு

வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது திருக் கோயில். உள்ளே நுழைந்தால், முதலில் பிள்ளையாரைத் தரிசிக்கிறோம். உருவில் மட்டுமல்ல, அருள்வதிலும் பெரியவரான இவரை வணங்கி, பஞ்ச லிங்க தரிசனத்துக்குத் தயாராவோம்.

அப்பு லிங்கம்: இந்தக் கோயிலில் உள்ள ஐந்து லிங்க மூர்த்தியரையும் பஞ்சலிங்கேஸ்வரர் என்றே வழிபடு கின்றனர். 

முதல் தரிசனம் அப்பு (நீர்) மூர்த்தம்:

வாமதேவ அம்சமாக அருள் கிறார் இவர். மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய அப்பு தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவது சிறப்பு!

இவர் சந்நிதிக்கு அருகிலேயே நடராஜர் சந்நிதியும், காமாட்சி அம்பிகை சந்நிதியும் உள்ளன. இந்தத் தலத்தில் இரண்டு காமாட்சிகள்.

மூலவருக்கான காமாட்சி, பிரதான மூலவர் சந்நிதிக்கு அருகில் சந்நிதி கொண்டிருக்கிறாள். அதேபோல், இந்தக்கோயிலில் கோஷ்டத்திலும் பிராகாரத்திலுமாக இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்கின்றனர்.

ஆகவே, இத்தலம் குரு வழிபாட்டுக்கு உகந்தது. தவிர, தேவியருடன் முருகன், பைரவர், நவகிரக மூர்த்தியரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இரண்டாவது தரிசனம்
வாயு லிங்கம்: 

தத்புருஷ அம்சமாக அருளும் இந்த மூர்த்தியை மிதுனம், துலாம், கும்பம் ஆகியவாயு தத்துவ ராசிக்காரர்கள் வழிபடுவது விசேஷம்!

மூன்றாவது தரிசனம்
அக்னி லிங்கம்: 

அகோர அம்சத்தினராக அருளும் லிங்க மூர்த்தி இவர். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய அக்னி தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதால், வாழ்க்கை சிறக்கும்.

நான்காவது தரிசனம் 
ப்ருத்வி லிங்கம்: 

சத்யோஜாத அம்சமாக அருளும் இவரை ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்கள் வழிபட்டு வளம் பெறலாம்.

ஐந்தாவது தரிசனம் ஆகாய லிங்கம்: 

ஈசான அம்சமாக அருள்கிறார் ஆகாயத்துக்கான லிங்க மூர்த்தி. இவரே இக்கோயிலின் பிரதான மூலவர். அனைத்து ராசி அன்பர்களும் இவரை வழிபட்டு வளம் பெறலாம். ராசி இன்னதென்று தெரியாத அன்பர்களும் இவரைப் பிரதானமாக வழிபடுகிறார்கள்.

சிறப்புப் பரிகார பூஜைகள்:

இந்தக் கோயிலில் நட்சத்திர தீப வழிபாடு சிறப்பம்சம். இங்கு வந்து பஞ்சலிங்க சந்நிதிகள் ஒவ்வொன்றிலும் 27 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட, எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறும்.

அதேபோல், இங்கே ஐந்து சிவலிங்க மூர்த்திகள் அருள்வதால், தொடர்ந்து ஐந்து பிரதோஷங்களுக்கு இங்கு வந்து பிரதோஷ பூஜையில் பங்கேற்று வழிபட்டுச் சென்றால், சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் பெருகும் .

தேடி வருவோருக்கு கோடி நன்மைகளை அள்ளி வழங்கும் பஞ்சலிங்கேஸ்வரரை நாமும் தரிசித்து செல்வோம்; சிவனருளால் சிந்தை மகிழும் வாழ்வைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...