ஸ்ரீஆஞ்சநேய ரக்ஷமாம்! ஸ்ரீராம தூதனாகவும், ருத்ர அம்சத்தினனாகவும், வாயு மைந்தனாகவும் திகழும் அனுமனை வழிபடுவதால், எண்ணற்ற கீர்த்திகள் உண்டாகும். சரி, அனுமனை எங்ஙனம் வழிபடுவது? நம்பிக்கைதானே பக்தியின் அடிப்படை! அந்த வகையில், ஸ்ரீஅனுமன் வழிபாட்டிலும் சில நம்பிக்கைகளைக் கடைப்பிடிக் கிறார்கள் பக்தர்கள்.
மார்கழி மாதம் மூல நட்சத்திரம்- அனுமன் அவதரித்த திருநாள். உலகில் ஸ்ரீராம அவதாரம் நிகழ்ந்தபோது, ராமனுக்கு உதவியாக தேவர்கள் யாவரும் வானரர்களாக அவதரிக்க, ஸ்ரீருத்ரரின் அம்சமாக அனுமன் தோன்றியதாகச் சொல்கின்றன புராணங்கள்.
ஆக, ஸ்ரீராம தூதனாகவும், ருத்ர அம்சத்தினனாகவும், வாயு மைந்தனாகவும் திகழும் அனுமனை வழிபடுவதால், எண்ணற்ற கீர்த்திகள் உண்டாகும். சரி, அனுமனை எங்ஙனம் வழிபடுவது? நம்பிக்கைதானே பக்தியின் அடிப்படை! அந்த வகையில், ஸ்ரீஅனுமன் வழிபாட்டிலும் சில நம்பிக்கைகளைக் கடைப்பிடிக் கிறார்கள் பக்தர்கள்.
வெற்றிலை வழிபாடு: அசோக வனத்தில் இருந்த சீதா பிராட்டியாரை ஸ்ரீராமனின் தூதனாக அனுமன் சந்தித்தபோது, வெற்றிலைகளை எடுத்து அவர் தலையில் வைத்து ஆசீர்வதித்தாராம் சீதா தேவி. இதன் அடிப்படையில், அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவார்கள்.
செந்தூரக் காப்பு: ஸ்ரீராமன் நலமாக இருப்பதாகவும், அவர் சீதாதேவியின் நினைவிலேயே லயித்திருப்பதாகவும், விரைவில் வந்து அவளை மீட்பார் என்றும் அனுமன் கூறியதும், சீதாதேவி மகிழ்ந்து, அருகிலிருந்த செந்தூரத்தை எடுத்து, நெற்றியில் திலகமாக இட்டுக்கொண்டாள். அது மங்கலத்தின் அடையாளம், பெண்களுக்கு மாங்கல்ய பலம் சேர்க்கும் என்று அனுமனுக்கும் விளக்கினாள். ‘என் ராமனுக்கு நலம் சேர்க்கும் என்றால், என் மேனியெங்கும் பூசிக்கொள்வேன்’ என்று அனுமன் செந்தூரத்தை அள்ளி, தமது உடம்பு முழுக்கப் பூசிக்கொண்டாராம். இதன் அடிப்படையில் செந்தூரம் அவருக்கு உகந்ததாயிற்று.
ஸ்ரீஆஞ்சநேய ரக்ஷமாம்!
வெண்ணெய்க் காப்பு: ராவண வதத்துக்குப் பிறகு, வேறு அசுரர்கள் இருவர் தேவர்களுக்கு மீண்டும் தொல்லை கொடுத்தார்கள். இறை ஆணைப்படி அவர்களை வதம் செய்யப் புறப்பட்டார் அனுமன். தேவர்கள் எல்லோரும் அனுமனுக்குத் தங்களின் ஆயுதங்களை வழங்கினார்கள். பெருமாளிடமிருந்து வெண்ணெய் கிடைத்தது. அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அசுரர்களை வெற்றிகொண்டார் அனுமன் என்றொரு செவிவழிக் கதை உண்டு. வெண்ணெய் எளிதில் உருகும் தன்மை கொண்டது. நாமும் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு செய்து, ராம நாமம் ஜபித்து வழிபட்டால், மனம் உருகி அருள்செய்வார் அனுமன். வெண்ணெய் உருகுவதற்குள் நம் வேண்டுதல் பலிக்கும்.
வடை மாலை: உளுந்து ஊட்டச்சத்து மிகுந்தது. சதாசர்வ காலமும் ராம கைங்கரியத்தில் இருக்கும் தன் மகன் அனுமன் சோர்வுறாமல் இருக்க, வடை செய்து தந்தாளாம் தாய் அஞ்சனா தேவி. அதன்பொருட்டு அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பிக்கப்படுகிறது என்பார்கள். ராம பட்டாபிஷேம் முடிந்ததும், எல்லோருக்கும் பரிசளித்தனர் ராமனும் சீதையும். அப்போது, அனுமனுக்கு முத்துவடத்தைப் பரிசளித்தாள் சீதாதேவி. அனுமன் அதை வாங்கிக்கொண்டு போய் ஓர் ஓரமாக அமர்ந்து, ஒவ்வொரு முத்தாக கடித்துத் துப்பத் தொடங்கினார். இதைக் கண்ட சீதாதேவி துணுக்குற்று, 'ராம பிரசாதமான பரிசை இப்படி அவமதிப்பது தகுமா?’ என்று கேட்டாள். உடனே அனுமன், ''தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டீர்கள். ராமநாம ருசி இந்த மாலையின் முத்துக்களிலும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறேன்...'' என்று பதிலளித்தாராம்.
ஆக, வடம் என்பதே வடை என்றாயிற்று என்பார்கள். முத்து வடமோ, வடைமாலையோ... ராம சாந்நித்தியம் நிறைந்த பொருளே அனுமனுக்கு மிக உவப்பானது. பக்தர்களும் தூய பக்தியுடன் ராமநாமம் ஜபித்தபடி வடைகள் தயாரித்து மாலையாகக் கோத்து, அனுமனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இதுபோன்ற வழிபாடுகள் ஒருபுறம் இருக்க, அனுமன் மிக விரும்பி ஏற்கும் வழிபாடாகத் திகழ்வது ஸ்ரீராமநாம ஜபம். தாரக மந்திரம் நிறைந்திருக்கும் இடத்தில், அனுமன் நீக்கமற நிறைந்திருப்பார்.
இலங்கையின் மன்னனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்த பிறகு, அவனுக்கு சிரஞ்ஜீவி வரம் தந்தார் ராமபிரான். அதன் பிறகே ஒரு விஷயம் அவர் நினைவுக்கு வந்தது. 'ஏற்கெனவே அனுமனுக்கு சிரஞ்ஜீவி வரம் அளித்திருந்தோம். தனக்கு மட்டுமே அந்த வரம் கிடைத்திருக்கிறது என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அனுமன், இப்போது விபீஷணனுக்கும் அந்த வரம் கிடைத்தில் வருத்தம் கொள்வானோ?’ என்று யோசித்தார் ஸ்ரீராமன். ஆனால், அனுமன் வருந்தவில்லை; மகிழவே செய்தார்.
காரணம் கேட்டபோது, ''நான் மட்டுமே சிரஞ்ஜீவி என்றால், உலகம் அழிந்தபின்பு நான் மட்டும் தனித்திருப்பேன். அப்போது, ஸ்ரீராம நாம ஜபத்தை செவிகுளிரக் கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது அப்படி இல்லை. என்னுடன் விபீஷணனும் இருப்பார். அவர் ராம நாமம் ஜபிக்க, அனவரதமும் அதைக்கேட்டு அகமகிழ்ந்திருப்பேன்'' என்றாராம்.
ராமநாமம் அனுமனுக்கு அந்த அளவுக்கு உவப்பானது!
ராம நாமம் ஜபித்து அனுமனை வழிபடுவோம். ராமாயணத்தில் முக்கியமாக மூவரின் உயிரைக் காத்த ஆஞ்சநேயக் கடவுள் நம்மையும் காத்தருள்வார்.
ஆமாம்... ராமனைப் பிரிந்ததால் துக்கம் அடைந்த சீதாதேவி அசோகவனத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, ராம நாமத்தை உச்சரித்தபடி சீதா தேவியின் முன் தோன்றி, அவரைக் காத்தார் அனுமன். அடுத்து, போர் தருணத்தில் சஞ்ஜீவினி மலையைச் சுமந்து வந்து லட்சுமணன் முதலானோரைக் காத்தார். மூன்றாவதாக, ராமன் திரும்ப வரமாட்டான் எனும் அவநம்பிக் கையில், பரதன் அக்னி வளர்த்து, அதில் பாய்ந்து உயிர்விடத் துணிந்த நிலையில், விரைந்து சென்று ஸ்ரீராமனின் வரவைச் சொல்லி, அவனைக் காப்பாற்றினார். அத்தகைய அனுமன் நம்மையும் காத்தருள்வார். நம் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்.
'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்றொரு வேடிக்கையான சொல் வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அதைத் துவங்கும்போது பிள்ளையாரையும், அது வெற்றிகரமாக நிறைவடைய அனுமனையும் வழிபடவேண்டும் என்பதே இதன் உட்பொருள். நாமும் அனுமனைப் பிரார்த்தித்து, அவர் அருள் பெற்று உய்வடைவோம். அதற்கு, ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய, 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்’ எனும் அற்புத ஸ்தோத்திரப் பாடல்கள் நமக்குப் பேருதவி செய்யும்.
முதலில், அனுமனைத் தியானிக்கும் ஸ்தோத்திரம். 2வது பாடல், அவரைத் தரிசிக்கும் விருப்பத்தைச் சங்கல்பிக்கிறது. 3வது பாடல், அவரைச் சரணடைகிறது. 4வது பாடல், அவர் தரிசனம் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறது. 5வது பாடல், அனுமனின் தரிசனம் கிடைத்து மகிழ்வதாகச் சிலாகிக்கிறது. 6வது பாடல், இதைப் படிப்பதனால் கிடைக்கும் பலன்களை விவரிக்கிறது.
அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக!
ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்
வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.
ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே
கருத்து: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.
தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி
கருத்து: சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்
கருத்து: வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.
ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி
கருத்து: பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
No comments:
Post a Comment