Monday, November 27, 2023

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்

படித்ததில் பிடித்தது

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்
 

தஞ்சை மாவட்டம்
திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமா நல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.

மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

“”யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்” என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி.

நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், “”நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

“”என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்று கேட்டாள். சனி பகவான், “”நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்” என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, “”ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக் காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “”ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், “”இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார்.

“”பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...