வையகம் காக்கும் வைரவன்பட்டி பைரவர்...
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் ஈசன். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இந்த நாமகரணம். இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக்கோயில் நகரத்தார் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள் செட்டிநாட்டு மக்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.
தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).
பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம்!
ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்றுகின்றார்கள்.
No comments:
Post a Comment