Wednesday, November 15, 2023

அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட திருஈங்கோய்மலை திருத்தலம்

அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட திருஈங்கோய்மலை திருத்தலம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ளது திருஈங்கோய்மலை என்ற திருத்தலம். நெல், வாழை, மா, பலா போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் மலையின் மீது அமைந்துள்ளது மரகதாசலேஸ்வரர் திருக்கோவில். 

பல்வேறு சிறப்புகளை பெற்ற திருத்தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான மரகதாசலேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் மலையின் பெயரே, ஊரின் பெயராகவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் தல வரலாற்றை காண்போம். 

அம்பாளை தவிர்த்தார் : 

பிருகு முனிவர்– இவர் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வழிபடாதவர். ஈசனின் அருகில் வீற்றிருக்கும் அம்பாளைக் கூட தரிசனம் செய்ய மாட்டார். அருகில் இருப்பவரை கண்டுகொண்டால்தானே தரிசனம் செய்வதற்கு. பிருகு முனிவருக்கு எப்போதும் சிவபெருமானின் தோற்றமே  முன் நிற்கும். 

அவரைத் தவிர வேறு எவரையும் அவர் பார்ப்பதும் இல்லை, தரிசிப்பதும் இல்லை. தனது சக்தியே, அம்பாள் தான் என்றிருக்கும்போது, பார்வதி தேவியை பிருகு முனிவர் தரிசனம் செய்யாமல் செல்வது சிவபெருமானுக்கு ஏமாற்றம் அளித்தது. பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று கருதிய சிவபெருமான், பிருகு முனிவரின் மீது அம்பாளை கோபப்படும்படி செய்தார். 

இந்த திருவிளையாடலுக்கு கட்டுப்பட்ட பார்வதிதேவி, பூலோகம் வந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள ஈங்கோய்மலைக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். தவத்தின் வலிமையை மெச்சி, அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். 

மேலும் தனது உடலின் இடப்பாகத்தையும் தருவதாக இத்தலத்தில் அம்பாளுக்கு ஈசன் உறுதி அளித்தார். சிவனுடன் சக்தி இரண்டற கலந்ததால் ஈசனை வலம் வந்து வழிபடும்போது பிருகு முனிவரால் அம்பாளை தவிர்க்க முடியாமல் போயிற்று. 

சிதறிய பாகத்தின் ஒரு பகுதி : 

ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என போட்டி வந்தது. வாயு பகவான் தனது பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச் செய்தார். உடனே ஆதிசேஷன் மந்திர மலையை இறுகச் சுற்றிக்கொண்டார். அப்போது அந்த மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒரு பகுதிதான் இந்த திருஈங்கோய்மலை என்று கூறப்படுகிறது. 

சிவபெருமான், ஆதிசேஷனையும், வாயு பகவானையும் சமாதானம் செய்து இந்த மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில்(மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இவருக்கு திரணத் ஜோதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. 

அம்பாளுக்கு சிவபெருமான் தனது இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இந்த மலையை சக்தி மலை என்றும் அழைக்கிறார்கள். இதனை உணர்த்தும் விதமாக முன் மண்டபத்திலும் மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. 

அம்பாளின் திருநாமம் மரகதாம்பிகை என்பதாகும். நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்று மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்றாகும். 

‘ஈ’ வடிவில் அகத்தியர் : 

ஒரு சமயம் தென்திசை வந்த அகத்தியர் சிவபெருமானை வழிபட இந்த கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கோவில் நடை அடைக்கப்பட்டு விட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவபெருமானை அகத்தியர் வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என்று அசரீரி சொன்னது. 

அதன்படி அகத்தியர் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபோது, ‘ஈ’ வடிவம் பெற்றார். பின்னர் இந்த மலை மீது பறந்து வந்து கோவில் சன்னிதி கதவின் சாவித் துவாரம் வழியாக உள்ளே நுழைந்து சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு மீண்டும் தனது பழைய வடிவம் பெற்று திரும்பினார் என்பது தல புராணம் சொல்லும் கதை. 

அகத்தியர் ‘ஈ’ வடிவில் வழிபட்ட தலம் என்பதால் ‘திருஈங்கோய்மலை’ என்றும், சிவனுக்கு ‘ஈங்கோய்நாதர்’ என்றும் பெயர் உண்டு. அகத்தியர் வழிபட்டதற்கு பின்னர் திருஞானசம்பந்தர் இங்கு நேரில் வந்து வழிபட்டு ‘திருஈங்கோய்மலையாரே’ என்று ஆரம்பிக்கும் 10 பாடல்களையும், நக்கீரர் 70 பாடல்களையும் பாடியுள்ளனர். 

இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் காலை 6 மணியில் இருந்து 6.35 மணிக்குள் 5 நிமிடங்கள் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவர் மரகதாசலேஸ்வரர் மேல் பட்டு பொன்னிற மேனியாக காட்சி அளிப்பதை பார்க்கலாம். 

ஆடிக் கிருத்திகை அன்று படி பூஜையும், ஆடிப் பெருக்கு விழாவும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மலை அடிவாரத்தில் மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சுவாமி கைலாசநாதர் என்றும், தாயார் கரணகடாட்ஷாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்கு உற்சவங்கள், தேர்த்திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

ஆவணி மாதத்தில் வரும் புட்டுக்கு மண் சுமந்த லீலை  புட்டு திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இந்த கோவிலுக்கு வந்து இறைவனை பிரார்த்தித்து செல்பவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம். 

அமைவிடம் : 

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள தொட்டியத்திற்கும், முசிறிக்கும் நடுவில் அமைந்து உள்ளது திருஈங்கோய்மலை திருத்தலம். இந்த கோவிலுக்கு தொட்டியத்தில் இருந்தும், முசிறியில் இருந்தும் சென்று வரலாம். 

முசிறியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு முசிறியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு. ரெயில் மூலம் இந்த திருத்தலத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் குளித்தலை ரெயில் நிலையத்தில் இறங்கி, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் மலை அடிவாரம் வரையில் செல்லலாம்.

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், ...