திருஐயாறு -திருவையாறு தஞ்சையம்பதிக்கு வடக்கே 10.கி.மீ. தூரத்தில் உள்ளது.
தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய - வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையதால் , ஐயாறு என பெயர் பெற்றது என்பர் .
சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு - என்றும் கூறுவர்.
இத்திருக்கோயில் தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் விளங்குகின்றது.
ஈசனின் திருப்பெயர் - ஐயாறப்பர், பஞ்சநதீசுவரர். அம்பிகையின் திருப்பெயர் - அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி. அம்மனின் சக்தி பீடங்களில் இது தர்ம பீடமாகும்.
காசிக்கு நிகரான திருத்தலம். தல விருட்சம் - வில்வம். தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி என்பன. சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற திருத்தலம்.
சிலாத முனிவரின் திருமகனாக அவதரித்த நந்தியம்பெருமான், சுயசாம்பிகை தேவியை மணந்து, சிவ பூஜை செய்து சிவசாரூபம் பெற்ற திருத்தலம்.
மஹாலக்ஷ்மி பூஜித்த திருத்தலம். மஹாலக்ஷ்மிக்கு இரண்டாம் திருச்சுற்றில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை தோறும் மஹாலக்ஷ்மி திருச்சுற்று வலம் வருகின்றாள்.
கயிலை மலைக்குச் சென்ற அப்பர் பெருமானுக்கு - ஈசன் திருக்கயிலைக் காட்சியினை இங்குதான் காட்டியருளினர்.
மூன்றாம் பிராகாரத்தில் - தென் புறம் உள்ள கற்கோயிலில் ஈசன் திருமணக் கோலத்துடன், வீற்றிருந்து அப்பர் பெருமானுக்கு அருளுகின்றார். ஆடி அமாவாசை அன்று அப்பர் சுவாமிகளுக்கு ஈசன் கயிலாயக் காட்சியருளும் திருவிழா நடைபெறுகின்றது.
சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கி, திருவையாற்றுக்கு வந்த பொழுது காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
கரையிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் ''ஐயாறுடைய அடிகளோ'' எனத் திருப்பதிகம் பாடிய போது விநாயகரும் ''ஓ'' என பெருஞ்சப்தமிட்டார். அந்த அளவில், காவிரியின் வெள்ளப் பெருக்கு வழிவிட்டு விலகியது. சுந்தரருக்காக ஓலமிட்ட விநாயகர் தெற்குக் கோபுர நுழைவாயிலில் - தென்மேற்கு மூலையில் வீற்றிருக்கின்றார்.
தெற்குக் கோபுர நுழைவாயிலில் தான், சிவ வழிபாடு செய்த சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட, ஆட்கொண்டார் சன்னதி உள்ளது. சன்னதியில் சுவாமிக்கு எதிரில் நந்தியம் பெருமானும் அமர்ந்திருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு யமபயம் கிடையாது. எனவே இது மோட்ச தலமாக போற்றப்படுகின்றது.
காவிரி - புஷ்ய மண்டப படித்துறை
இந்த சன்னதியின் நேர் தெற்கே தான் காவிரிக் கரையில் முன்னோருக்கும், பித்ருக்களுக்கும் தர்ப்பணங்களை நிறைவேற்றும் புஷ்ய மண்டபப் படித்துறை உள்ளது.
ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக் கலய நாயனாரால் தூபம் இடப்பட்ட ''குங்கிலியக்குண்டம்'' உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இதில் மக்கள் குங்கிலிய தூபம் இட்டு வழிபடுகின்றனர்.
இத்தலத்தில் இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற செய்தியை சம்பந்தரும், அப்பர் பெருந்தகையும் தேவாரத் திருப்பதிகங்களில் அருளிச் செய்துள்ளனர்.
இத்தலத்தில் திருக்கோயில் பணி செய்த ஒருவர் காசிக்குச் சென்றார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவரால் திரும்பிவர இயலவில்லை. அதனால் பூஜை முறை தவறியது. அப்பொழுது ஈசன் அந்த அன்பருடைய வடிவில் பூஜை முறைகளை நிறைவேற்றினார். இதனை ''ஐயாறதனில் சைவனாகியும் '' என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருள்கின்றனர்.
இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழாவும், சித்திரைப் பெருந்திருவிழாவும் குறிப்பிடத்தக்கவை.
பங்குனி மாதத்தில் ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் மணமகனாகிய நந்தியம் பெருமானை வெட்டிவேர் பல்லக்கில் அழைத்துக் கொண்டு, கொள்ளிடக் கரையில் உள்ள திருமழபாடிக்கு எழுந்தருளி,
அங்கே வியாக்ரபாதருடைய புதல்வியான சுயசாம்பிகை தேவியை நந்தியம் பெருமானுக்குத் திருமணம் செய்வித்து, விருந்து உபசாரங்கள் முடிந்தபின் ஐயாற்றுக்குத் திரும்புவர்.
இதன் பின் - நந்தியம் பெருமானின் திருமண விழாவின் தொடர்ச்சியாக - சித்திரைப் பெருந்திருவிழாவில் சித்ரா பெளர்ணமி அன்று,
ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் அலங்கார கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியம் பெருமான் சுயசாம்பிகை தேவியுடன் வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளி -
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் திருத்தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த தலங்களின் இறைவரும் தனித்தனிப் பல்லக்குகளில் மணமக்களை எதிர்கொண்டு வரவேற்று உடன் தொடர, மறுநாள் ஐயாற்றுக்கு அனைவரும் எழுந்தருளுவர்.
இதனை சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்ற வேறு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி ஏழு ஊர்களையும் சுற்றி வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாகும்.
திருக்கோயிலில் பிற்கால - மன்னர்களான முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜ சோழன், விக்கிரம சோழன், மூன்றாங்குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுக்களும், அச்சுதப்பநாயக்கர் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவைகள் திருக்கோயிலில் நந்தாவிளக்கு ஏற்ற , நிவந்தங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளை உணர்த்துபவை.
இத் திருக்கோயிலைக் கற்றளியாகக் கட்டியவர் இஞ்சிசூழ் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழமண்டலத்தை - கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை ஆட்சி செய்த பேரரசன் இராஜராஜ சோழனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமாதேவியாராவர். இவரால் திருப்பணி செய்யப் பெற்றதால் ஒலோக மாதேவீச்சரம் என்று பெயர் பெற்றது. இச்செய்தி -
''ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியாரான
ஒலோக மாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோக மாதேவீச்சரமுடையார்க்கு'' எனும் கல்வெட்டினால் அறிய முடிகின்றது.
( நன்றி:- கல்வெட்டு செய்திகள் தருமபுர ஆதீனத்தின் '' பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்'' பதிப்பில் இருந்து பெறப்பட்டவை.)
அறம் வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் திருவடிகளே சரணம்!...
திருச்சிற்றம்பலம்
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment