ஸ்ரீராமஜெயம்
*கோபுர தரிசனம் பாப விமோசனம்*🌹... -
“கோ” என்றால் இறைவன். “புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள்.
“கோபுர தரிசனம் பாப விமோசனம்” என்பது பழமொழி...
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அப்படி ஒவ்வொரு ஊருக்கும் அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும். கோயில் வாசலில் அமைக்கப்படும் ராஜகோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும் . இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்று சொல்வது ஐதீகம்.
கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படும்.
கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு.
“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந் திருவீதியை வணங்கி………..”
கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து
வணங்க வேண்டும் என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
“கோலக் கோபுரக் கோகரணஞ்
சூழா கால்களாற் பயனென்” என அப்பர் சுவாமிகள்
கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்”
என்று கோபுர பெருமையை சொல்கிறார் திருமூலர்...
கோபுர அமைப்பு:
கோபுரம் என்பது சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்து நிற்கின்றன. கோபுரத்தில் தேவகணங்கள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக் காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும்.
நமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக்கோபுர அமைப்புக்கு ஒத்ததாக அவ்வமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். நமது சக்திக்கு மேற்பட்டவர் இறைவன் என்பதையும், அவரை அடைவதற்கு நமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.
முதலாவது கோபுரம் துவார சோபை எனவும், இரண்டாவது கோபுரம் துவாரசாலை எனவும் மூன்றாவது கோபுரம் துவாரப் பிரசாதம் எனவும், நான்காவது கோபுரம் துவார ஹர்மியம் எனவும், ஐந்தாவது கோபுரம் மஹாமர்யதை எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வைந்தாவது கோபுரமே மஹா கோபுரம் எனவும், ராஜ கோபுரம் எனவும் சிறப்புப் பெயர் பெறுகிறது. பொதுவாக மஹா கோபுரம் எனப்படும் ராஜ கோபுரமே சில கோவில்களில் காணப்படும்.
ராஜகோபுரத்தின் உள்ள நிலைகள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்பனவாகயிருக்கும்.
மூன்று நிலைகள் - ஜாக்கிரத், ஸ்வப்பன, சுஷுப்தி என்பவற்றைக் குறிக்கும்.
ஐந்து நிலைகள் - ஐம்பொறிகளைக் குறிக்கும் .
ஏழு நிலைகள் - ஐம்பொறிகளோடு மனம், புத்தி என இரண்டும் சேரும்.
ஒன்பது நிலைகள் - அந்த ஏழினொடு சித்தம், அங்காரம் என இரண்டும் சேரும் .
இந்தியாவில் உள்ள உயரமான 10 கோவில் கோபுரங்கள்:
1.முருதேஸ்வரர் கோயில் - 249 அடி
முருதேஸ்வரர் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும். இங்கு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிவன் சிலை உள்ளது. இது 249 அடி உயரத்தில் 20 அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மிக உயரமான கோபுரமாக உள்ளது. இது கர்நாடகா மாநிலத்தில் பட்கல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
2. ரங்கநாதசுவாமி கோவில் - 239.5 அடி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதஸ்வாமி கோயில் தென்னிந்தியாவின் வைஷ்ணவ கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது, 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ரங்கநாதஸ்வாமி கோவிலின் கோபுரம் 239.5 அடி உயரம். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரம் ஆகும்.
3. அண்ணாமலையார் கோவில் - 216.5 அடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இக்கோவிலின் இராஜ கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும்.
4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் - 193.5 அடி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். கோவிலின் கோபுரம் 193.5 அடி உயரம்.
தமிழ்நாடு அரசின் சின்னமாக இக்கோவிலின் கோபுரமும், அதன் முன்னர் இந்திய தேசிய இலச்சினையில் உள்ள நான்கு சிங்க முகம் காணப்படுகிறது. இதன் பின்னணியில் இருபுறமும் இந்திய தேசியக் கொடிகள் காணப்படுகிறது. வாய்மையே வெல்லும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.
5. உலகளந்தபெருமாள் கோவில், திருக்கோவிலூர், விழுப்புரம் - 192 அடி
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இதன் கோபுரம் 192 அடி உயரம்.
6. ஏகாம்பரேஸ்வரர் கோயில் - 190 அடி
திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். கோவிலின் கோபுரம் 190 அடி உயரமுடையது.
7. அழகர் கோவில், மதுரை - 187 அடி
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இந்த கோவில் கோபுரத்தின் உயரம் 187 அடி..
8. மீனாட்சி அம்மன் கோவில், மதுரை - 170அடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. கோயிலின் வடக்கு கோபுரம் 170 அடி உயரம் உடையது.
9. சாரங்கபாணி கோவில், கும்பகோணம் - 164 அடி
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இதன் ராஜகோபுரம் 164 அடி உயரம் உடையது.
10. ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி - 154 அடி
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஒரு வைணவக் கோயில் ஆகும். இந்த கோயிலில் 16 கோபுரங்கள் உள்ளன. ராஜ கோபுரம் 154 அடி உயரம் கொண்டது.
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று முன்னோர்கள் கூறினர்.
கோபுர தரிசன பலன்கள்:
கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறைவனின் பிரதிபிம்பம் தான் கோபுரங்கள், கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள். கோபுரத்தைத் தரிசித்தாலே போதும், உள்ளேயிருக்கக்கூடிய எல்லாத் தெய்வங்களையும் வணங்கிய முழ பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
காலை கோபுர தரிசனம் – நோய் நீக்கும்
மதியம் கோபுரதரிசனம் – செல்வ வளம் பெருகும்
மாலை கோபுர தரிசனம் – பாவம் போக்கும்
இரவு கோபுர தரிசனம் – வீடு பேறு கிடைக்கும்.
நாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது கோபுரங்களும். கோபுர கலசங்களும் தான் நம் கண்ணுக்குத் தெரியும், மேலும் கோபுரத்தின் உள்ளேயிருந்து வரக்கூடிய காற்று மருத்துவ குணம் மிக்கதாக இருக்கும்,
கோபுர தரிசனம் பாப விமோசனம் தரக் கூடியது. நாளும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழுவோம்! இயலாத நேரங்களில் கோபுர தரிசனம் செய்து நன்மைகளைப் பெறுவோம்.🌹
No comments:
Post a Comment