Tuesday, November 28, 2023

இறைவன், வில்லேந்திய வேடுவனாக தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என வழங்கப்படுகிறது.

அருள்மிகு
திருமேனி அழகர் திருக்கோயில்,
திருவேட்டக்குடி - 609609
காரைக்கால். 
                 
*மூலவர்:
சுந்தரேஸ்வரர், திருமேனியழகர்

*உற்சவர்:
வேடமூர்த்தி

*தாயார்:
சௌந்தர நாயகி, சாந்தநாயகி

*தல விருட்சம்:
புன்னை.

*தீர்த்தம்:
தேவதீர்த்தம்.

 *இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகம் பாடிய தலமாகும்.  

*திருஞான சம்பந்தர் ‘சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக்குடியாரே’ என அவரது திருமேனி அழகில் லயித்து திளைத்துப் போகிறார்.  

*இத்தகைய எழில் வடிவம் கொண்ட இறைவன் ‘திருமேனி அழகர்’ என்று போற்றப்படுகிறார். 

*கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். 

*பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பாசுபத அஸ்திரம் என்னும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் ஒருவன் கலைத்தான். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தான். அந்த நேரத்தில் வேறொரு வேடன் அங்கு வந்து, தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமை கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தான். 

*சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பாசுபத அஸ்திரத்தை அளித்தார். 

*இறைவன், வில்லேந்திய வேடுவனாக தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என வழங்கப்படுகிறது.  

*இக்கோயிலில் உள்ள, வேடனாக வந்த தலமூர்த்தி - "வேடரூபர்", வேடுவச்சியாக வந்த அம்பாள் -  "வேடநாயகி",  ஆகிய இருவரின்  திருமேனிகளும் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார். 

*ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாமி வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது "கடலாடுவிழா " என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

*இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருவது மற்றுமோர் சிறப்பு.  

*இத்தல இறைவியின் பெயர் சாந்தநாயகி என்பதாகும். இவருக்கு சவுந்திர நாயகி என்ற திருநாமமும் உண்டு.  

*சிவபெருமான், தம்மை சோதித்து, உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்த பார்வதியை நோக்கி, “உயிர்களுக்கு துன்பம் விளையக் காரணமாக இருந்த நீ, பூலோகத்தில்  மீனவ குலத்தில் பிறந்து என்னை நினைத்து தவம் செய்து, மீண்டும் கயிலாயம் வந்தடைவாய்” என்றார். அதன்படி பார்வதிதேவி, புன்னை வனமாக இருந்த திருவேட்டக்குடி என்ற இத்தலத்தில், குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்த்தார். பருவ வயதை அடைந்த பார்வதி, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வந்தார். இறைவன் மீனவனாக வந்து அம்பிகையை ஏற்றுக்கொண்டார். 

*மேற்கு பிரகாரத்தில்புன்னை வனநாதர் சன்னிதி உள்ளது. சன்னிதியின் முன்புறம் இடது பக்கத்தில் சம்பந்தரும், வலது பக்கத்தில் சனி பகவானும் காட்சி தருகின்றனர். 

*இங்கு ஐயனார் தனது  மனைவியரான பூரணை, புஷ்களை இருவருடன் காட்சியளிக்கிறார்.  

*காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் திருவேட்டக்குடி உள்ளது. பொறையாறு - காரைக்கால் சாலையில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கிலோமீட்டர் சென்றால், திருவேட்டக்குடியை அடையலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...