அப்போது சிவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்று இருந்த காலம்! நான் திருவனந்தபுரம் சென்றபோது அனந்த பத்மநாபசுவாமி மேற்கு கோபுரவாசலில் ஒரு மேன்சனில் தங்க இடம் கிடைத்தது! அப்போது கோவிலில் இவ்வளவு பொக்கிசம் இருக்கிறது என்று வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது!
நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு ஐயரும் தங்கியிருந்தார். வக்கீலான அவர் தினமும் பத்மநாபசுவாமியை காணச்செல்வார். பலமுறை என்னை தரிசனத்திற்கு அழைப்பு விடுத்தார், நான் சென்றதில்லை!
அவர் அழைக்கும்போதெல்லாம் நான் "சிவபெருமானைத்தவிர யாரையும் வணங்க மாட்டேன்" எனக்கூறிவிடுவேன்!
ஒருமுறை ஐயர் " நீங்கள் ஒரே ஒரு முறை வந்து அனந்த பத்மநாபனை வணங்கிப்பாருங்கள் தம்பி" என்றார்! மேலும் சிவபெருமான் முழுமுதற் கடவுள் என்றாலும், நம்மை காக்கும் கடவுள் திருமால்தான், எனவே அவருடைய அருளும் வாழ்விற்கு அவசியம், எனவே நீங்கள் அவரையும் வணங்க வேண்டும், அப்பொழுதுதான் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.! எல்லா பிரச்சனைகளிலிருந்தும் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு நம்மை காப்பார் என்றார்!
மேலும், ஐயர், 'சிவனை வணங்கும் குலத்தில் பிறந்த தான் விஷ்ணுவை வணங்குவதாகவும், அனைத்தையும் ஈஸ்வர சொரூபமாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்!
ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு ஸ்பெசலிஸ்ட் மருத்துவர்கள் இருப்பது போல, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வணங்குவது ஒரு மனிதனின் வாழ்வின் பாதுகாப்புக்கு அவசியம் என்றார்!
இதனால் மனமாற்றம் அடைந்த நான், முதன்முறையாக பத்மநாபசுவாமியை தரிசிக்க சென்றேன், நடை அடைத்துவிட்டார்கள்!
மீண்டும் ஒருவாரம் கழித்து 2வது முறையாக சென்றேன்! நான் போய் நிற்கவும் சரியாக நடை அடைத்து விட்டார்கள்!
பின் வேறொருநாளில் 3வது முறையாக சென்றேன்! ஸ்ரீரங்கம் கோவிலில் போல அனந்த சயனத்தில் படுத்திருக்கும் பெருமாள், என் கண்ணிற்கு தெரியவில்லை! இருட்டாகவும் கருப்பாகவும் இருந்ததால்! ஆனால் பெருமாளிற்கு முன்பு இருந்த சிறிய உற்சவ மூர்த்தி சிலையே தெரிந்தது!
அன்று மாலை ஐயரிடம் "என்ன இவ்வளவு பெரிய கோவிலில் இவ்வளவு சிறிய சிலை உள்ளது, பெரிய பெருமாள்சைிலை எங்கே? எனக்கேட்டேன்?"
அதன் பிறகுதான் அனந்த பத்மநாபன் விக்கிரகம் 3 வாசல்களில் தரிசிக்கும் அளவிற்கு மிகப்பெரியது என்பதை விளக்கினார்!
நான்காவது முறை சென்றபோது அனந்த பத்மசுவாமி என்னை மன்னித்து காட்சி கொடுத்தார்!
அன்றுமுதல் இன்றுவரை சிவபெருமானோடு சேர்ந்து மகாவிஷ்ணுவையும் வணங்கி வருகிறேன்!
எனக்கு மகாலட்சுமியின் அருளால் அவசியமான எல்லா செல்வங்களும் படிப்படியாக வந்து சேர்ந்தது!
நம்மில் பலர் சிவனை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குவதில்லை! அல்லது விஷ்ணுவை வணங்குபவர்கள் சிவபெருமானை வணங்குவதில்லை! அது தவறானது!
இருவரும் வேறு வேறு சக்தி உள்ளவர்கள் என்றாலும் நம்முன்னோர்கள் சிவன் கோவில்களுக்குள் விஷ்ணு கோவில்களையும் காரணம் இல்லாமல் கட்டி வைக்கவில்லை!
சிதம்பரம், திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற பல கோவில்களில் பெருமாள் சன்னதி உள்ளது!
நமது இந்து தர்மத்தில் கூறியபடி தெய்வங்களுக்குள் பிரிவினை பார்க்காமல் வணங்குவோம்!
No comments:
Post a Comment