Sunday, December 31, 2023

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா? காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.!

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...