குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட,
நடுநாட்டு தேவார வைப்புத் தலமான, சிவபெருமானை திண்டி வழிபட்ட தலமான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திண்டிவனம் (திந்திரிணிவனம்)
#திண்டீச்சரம்
#திந்திரிணீஸ்வரர் (திண்டீச்சரமுடையார்)
(திண்டிவனேஸ்வரர்)
#மரகதாம்பிகை_அம்மன் திருக்கோயில் வரலாறு:
எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.
எங்கும் நிறைந்த ஈசன் இந்த மண்ணில் புரிந்த லீலைகள் எண்ணிலடங்காதவை. தானாய்த் தோன்றி தரணியைக் காக்கும் சிவபெருமான் அருள்புரியும் அருள் மிகுந்த தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது, திண்டிவனம். சங்ககாலத் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் திருமுனைப்பாடி என்னும் நடுநாட்டின் ஒருபகுதி ‘‘ஒய்மாநாடு” என்று அழைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் தென் பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்த அன்றைய ஒய்மாநாடே இன்று திண்டிவனம் என்றழைக்கப்படுகின்றது. ஆதியில் இவ்விடம் புளிய மரக்காடாக இருந்ததால் திந்திரிணிவனம் [புளியங்காடு] என வழங்கப்பட்டது. மேலும், முப்புர அசுரர்களை வதம் செய்தார் பரமேஸ்வரர். அவர்களில் இருவர் இறைவனை சரணடைந்து நிற்க... சிவபெருமான் அவர்களை தனது சிவ கைலாய வாயில் காவலர்கள் ஆக்கினார். அவர்களே இப்பூவுலகில் அனைத்து சிவாலயங்களையும் பாதுகாக்கும் திண்டி மற்றும் முண்டி என்னும் இரண்டு துவார (வாயில் காப்பாளர்கள்) பாலகர்கள் ஆவர். இவர்களில்திண்டி இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இவ்விடம் ‘‘திண்டீஸ்வரம்” ஆனது. முண்டி வழிபட்ட தலம் இந்த திண்டிவனத்திற்கு தெற்கே திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே அமைந்துள்ள முண்டீஸ்வரம் ஆகும்.
ஒய்மா நாட்டின் தலைநகராகக் கிடங்கில் கோட்டை திகழ்ந்துள்ளது. இதில் ஓவியர் குடியில் பிறந்த மன்னர்களான ஒய்மான் நல்லியநாதன், ஒய்மான் வில்லியாதன் இந்த ஒய்மா நாட்டை சிறப்புடன் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். இவர்களின் வழித் தோன்றலான கொடையில் கடையேழு வள்ளல்களையும் மிஞ்சியவனான, புலவர் பலரால் பாராட்டப்பெற்றவன் நல்லியக்கோடன். இவனது ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூல் இந்த மன்னனைப் போற்றிப் புகழ்கின்றது. சங்ககாலப் புலவர்களான காவிதி சீரங்கண்ணனாரும், பெரும்புலவர் குலபதி நக்கண்ணனாரும் நல்லியக்கோடன் காலத்தில் இங்கு வாழ்ந்தவர்களாவர்.ஒய்மான்கள் ஆண்ட நிலப்பகுதியே ஒய்மாநாடாகும். இதை........
‘‘கிளை மலர் படப்பைக் கிடங்கில் கோமான் தளையவிழ் தெரியல் தகையோன்” என சிறுபாணாற்றுப்படை அறிவிக்கின்றது. இந்த ஊர் திண்டிவனம், கிடங்கல், மும்முடிச் சோழநல்லூர், ராஜேந்திரச் சோழநல்லூர் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ராஜராஜ வளநாட்டின் ஓய்மாநாடு என்றும், இடக்கை நாட்டுக் கிடங்கில் என்றும் வழங்கப்பட்டுள்ளது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருவதிகை ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதியாக திண்டிவனம் இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் ஆட்சிக்கு வந்த விக்கிரமசோழன் காலத்தில்தான் (கி.பி.1118 - கி.பி. 1135) திண்டீஸ்வரம், திண்டிவனம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தினை பல்லவர்கள், சோழர்கள், காடவராயர்கள், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் என பலர் ஆண்டுள்ளனர்.
வால்மீகி, வியாசர், கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் இத்தலப் பெருமானை பூஜித்துள்ளனர். திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்தது இந்த நடுநாடு என்பது குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் ‘‘திண்டீசுரம்” என்று குறிப்பிட்டு வைப்புத்தலமாக இத்தலத்தை இரண்டு பாடல்களில் நினைவுகூர்ந்து பாடியுள்ளார். புகழ்பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் இத்தல இறைவனை புகழ்ந்து பாடியுள்ளார். அப்பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் திருவாமாத்தூர் கௌமார மடத்தில் உள்ளன.நகரின் மையத்தில் ஆலயம், கிழக்கு பார்த்த வண்ணம் பிரம்மாண்டமாக திகழ்கின்றது.
திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.
இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.
கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது. இத்தல இறைவனை வால்மீகி, வியாசர், திண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் பூஜித்துள்ளனர்.
இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
இத் திருத்தலம் திந்திரிணீசுவரர், பக்த பிரகலாதீசுவரர் ஞானபுரீசுவரர் கரகண்டேசுவரர் சுயம்புமூலநாதர் ஆகிய ஐந்து லிங்கங்கள் (பஞ்சலிங்கங்கள்) உள்ள சிறப்புடைய திருக்கோயிலாகத் திகழ்கிறது.
இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
*மூலவர்: திந்திரிணீஸ்வரர்
*அம்மன்: மரகதாம்பிகை
*தல விருட்சம்: புளிய மரம்
*புராண
பெயர்: திண்டீச்சரம் (திந்திரிணிவனம்)
*ஊர்: திண்டிவனம்
*மாவட்டம்: விழுப்புரம்
*பாடியவர்கள்:
அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரம் (வைப்புத் தலம்)
#திண்டீச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம் :
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 8-வது பாடலிலும், 6-ம் திருமுறை 70-வது பதிகம் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
1.தேவாரப் பாடல்:
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் (6-7-8)
திண்டீச்சரமும் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும்
குரங்கணின் முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
காரோணம் தம்முடைய காப்புக்களே.
பொழிப்புரை :
பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார்
உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர்,
இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா,
திருவடி ஞானம் பெறச் சத்திநி பாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும்
நாகை குடந்தைக் காரோணங்கள் என்பனவாகும்.
2.திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி (6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.
பொழிப்புரை:
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை,
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு,
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம்,
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.
#புராண வரலாறு:
*திந்திரிவனேஸ்வரர்:
திண்டிவனம் ஆரம்பத்தில் திந்திரிவனம் (புளியின் காடு) என்று அழைக்கப்பட்டது, இங்கு திந்திரி என்றால் புளி மற்றும் வனம் என்றால் தமிழில் காடு. புளியமரத்தடியில் லிங்கம் கிடைத்தது. எனவே இக்கோயிலின் இறைவன் திந்திரிவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
*திண்டீஸ்வரம்:
திண்டி சிவனை வழிபட்ட தலம் திண்டீஸ்வரம் (திண்டிவனம்) என்றும், முண்டி இறைவனை வழிபட்ட இடம் முண்டீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
*வேத வியாசர் இக்கோயிலின் ராஜகோபுரத்தைக் கட்டினார்:
இக்கோயிலின் ராஜகோபுரத்தை வேதவியாசர் கட்டியதாக நம்பப்படுகிறது.
#தல வரலாறு:
இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
#கோவில் அமைப்பு:
7 கலசங்களும், 6 நிலைகளும் கொண்ட அற்புதமான இராஜகோபுரம் பிரமிப்பூட்டுகின்றது. உள்ளே பலிபீடம், ஓங்கி நிற்கும் கொடிமரம் மற்றும் அளவில் பெரிதாகத் திகழும் சற்றே தென்புறமாக ஒதுங்கியுள்ள நந்தியின் திருவுருவம். எல்லாமே கலைப்படைப்புகள். நேராக மகாமண்டபம் அடைந்திட வலப்புறம் கணபதியும், இடப்புறம் கந்தனும் நம்மை வரவேற்கின்றனர். அவர்களை வணங்கி, துவாரபாலகரான திண்டியின் அனுமதியும் பெற்று, [இரு துவாரபாலகர்களில் திண்டி மட்டுமே இங்கு உண்டு. முண்டியின் சிற்பம் இங்கு கிடையாது. அதை திருமுண்டீஸ்வரத்தில் காணலாம்.] அந்தராளம் எனப்படும் இடை மண்டபத்தில் நின்று ஐயனை வணங்கிப் பரவசமடைகின்றோம். கருவறையுள் கருணை வடிவாய், சுயம்பு மூர்த்தமாக, சுமார் ஐந்தரை அடி உயரத்தில் அற்புதமாக அருட்காட்சியளிக்கின்றார் ஸ்ரீதிந்திரிணீஸ்வரர். அருள் சுரக்கும் திருமேனி ஆனந்த தரிசனம்.
அப்பனை வணங்கி, உட்பிராகாரத்தில் சுற்றுகையில் சிவகோஷ்ட தெய்வங்களோடு, கரைகண்டேஸ்வரர், ஞானபுரீஸ்வரர், பிரகலாதீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. துர்க்கை இங்கு சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். வெளிப்பிராகார வளம் தொடங்குகையில் இராஜகோபுரத்தையொட்டி உட்புறமாக சந்திர பகவான் காட்சி அளிக்கின்றார். அருகே மடப்பள்ளி அமைந்துள்ளது. தென் பிராகாரத்தில் வன்னிமரமும், அதனடியில் சனிபகவானும் அருட்காட்சியளிக்கின்றனர். நிருதி மூலையில் கணபதி சந்நதியும், மேற்கில் வள்ளி-தெய்வானையுடனான கந்தன் சந்நதியும், பக்கத்தில் திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. இங்கே வில்வமரமும், அதனடியில் விநாயகப் பெருமான் சிலையும் உள்ளன. சுவாமி சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் வடபுறத்தில் தனிச்சந்நதியுள் தான்தோன்றிய லிங்கமாக ஸ்ரீமூலநாதர் வீற்றருளுகின்றார். உடன் கணபதியும், திரிபுரசுந்தரியும் உள்ளனர். இறைவன் சந்நதிக்கு இடப்புறத்தில் வாமபாகம் என்று சொல்லப்படும் வாயு திசையில் அம்பாள் சந்நதி தனியாக அமைந்துள்ளது. கருவறையில் அழகே உருவாய் எழுந்து அருள்பாலிக்கின்றாள், அன்னை ஸ்ரீமரகதாம்பிகை. ஈசனுக்கு நிகராக யோகபீடத்தின் மீது நின்ற வண்ணம் சுமார் 5 அடி உயரத்தில் அற்புதமாக அபயமளிக்கின்றாள். அன்னையின் சந்நதிக்கு நேரே அனுமனும் சந்நதி கொண்டுள்ளார். இங்கே நவகிரகங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீகாலபைரவரும் உடனிங்கு அருள்புரிகின்றார்.
வடகிழக்கு என்று சொல்லப்படும் ஈசான்ய திசையில் யாகசாலை அமைந்துள்ளது. பக்கத்தில் வினை தீர்க்கும் விநாயகரும் குடிகொண்டுள்ளார். அருகே சிவசூரியனும் இடம் பெற்றுள்ளார். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் வடக்குப்புறத்தில் நந்தவனமும், தீர்த்தக் கிணறும் காணப்பெறுகின்றன. ஐந்து லிங்கங்களை தரிசிக்கும் பாக்கியம் இங்கே நமக்கு கிடைக்கப்பெறுகின்றன. பக்தர்கள் இத்தலத்தை பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். மிகப் பழமையானதொரு ஆலயம், புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. தல தீர்த்தமாக விளங்குகிறது திருமூலர் தீர்த்தம்.தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய முதலாம் இராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் இங்கு ஆலய பிரகாரச் சுவர்களில் காணப்பெறுகின்றன. காடவராயர் காலக் கல்வெட்டு ஒன்றும், விஜய நகர அரசர் காலகல்வெட்டு ஒன்றும் கூட இங்கு காணப்படுகின்றது.
இத்தல ஈசர் திண்டீச்சுரமுடையார்,
திருத்திண்டீஸ்வர மகாதேவர், திண்டிவனமுடையார் என பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக இங்கு நடத்தப் படுகின்றன. அதில் எட்டாம் நாள் திருக்கல்யாண உற்சவமும், ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் தீர்த்தவாரியும் நடக்கின்றது. மகா சிவராத்திரியின் நான்காம் கால பூஜையில் சூரியனின் ஒளிக்கதிர்களும், சித்ரா பௌர்ணமியில் சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றையும் அம்பாள் மீது படர்வது சிறப்பாகும். நவராத்திரியில் அம்பாளுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். கேதார கௌரி நோன்பன்று இங்கு இறைவன் இறைவியை வழிபட...தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.இத்தலம் செவ்வாய்க்கு உரிய தலமாகும். மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகார தலமாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலத்தில் துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செண்பகமலர் மாலை மற்றும் எலுமிச்சம்பழ மாலையும் அணிவித்து, சித்ரான்னம் நிவேதித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிட்டும்.ஏழரைச் சனி நடப்பவர்களுக்கும் இது சிறந்த பரிகார தலமாகும்.இந்த திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் ஆலயத்தோடு இங்கு கிடங்கில் கோட்டையில் திகழும் வரலாற்றுப்பெருமை கொண்ட அறம் வளர்நாயகி உடனுறை அன்பநாயகேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்பது சிறப்பாகும்.
நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
#கோவிலின் சிறப்பு
திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.
#அம்மனை வழிபடும் சூாியன்:
மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.
ஏழு ராஜநிலைக் கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயிலுக்குள் சென்றால் லிங்கமாகக் காட்சி தருகிறார் திந்திரிணீஸ்வரர்.
கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்கள், சனிபகவான், துர்கை அருள் பாலிக்கின்றனர். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக வைணவம் சார்ந்த சிற்பங்கள் இத்திருத்தலத்தில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மரகதாம்பிகை அம்மனுக்குப் பச்சை புடவை சாத்தி மனம் உருகி வேண்டினால் குடும்ப வாழ்வு செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் மகாசிவராத்திரி அன்று நான்காவது கால பூஜைகள் கருவறையில் சிவபெருமானின் தலையிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் விழும் அதிசயத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
கோயிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதே போல் ஆனித்திருமஞ்சனம், மாசி மகம், ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
#முக்கிய திருவிழாக்கள்
சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் தனித் தாலுகாவாகத் திகழும் திண்டிவனம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment