Wednesday, January 31, 2024

திருமீயச்சூர் லலிதாம்பிகைஅம்மன் மேகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு

#பக்தையிடம் 
#கால்_கொலுசு_கேட்ட உலகப் புகழ்பெற்ற லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய தலமான, தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான ,
சூரிய பகவான் வழிபட்ட தலமான 
#திருமீயச்சூர்
#லலிதாம்பிகை_அம்மன் 
#மேகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு:

திருவாரூர் மாவட்டத்தில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்oகோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு. இத்தலம்  அமைந்துள்ளது.
மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் இக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் பாடல் பெற்றத் திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

திருமீயச்சூர்  திருத்தலத்தில் சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

பொதுவா, எல்லா கோவில்களிலும், ஆண்பால் தெய்வத்தை வணங்கிய பிறகே பெண்பால் தெய்வத்தை வணங்குதல் முறை., மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மாதிரி வெகுசில கோவில்களில் மட்டுமே இந்த நியதி மாறுபடும். அந்த வெகுசில கோவில்களில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலும் ஒன்று. 

ராஜகோபுரத்தை கடந்தால், நமக்கு வலப்பக்கத்தில்  வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும் தனிச்சன்னிதியினுள் வலது காலை மடித்து வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகையை தரிசிக்கலாம். இவளுக்கு சௌந்தரநாயகி, சாந்தநாயகின்ற வேறு பேர்கள் உண்டு. அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு   இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்து  அருளாட்சி செய்கிறாள்.  இதுப்போல மடித்து வைத்தை காலோடு அமர்ந்த கோலத்தில் இறைவியை காண்பது அரிதினும் அரிது.  அவள் அமர்ந்திருக்கும் கருவறை ஒரு ராஜ தர்பாரை நமக்கு நினைவூட்டும். 

லலிதாம்பிகையிடம்  உபதேசம் பெற்றவர் ஹயக்கீரிவர். ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பிகையை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொன்னால் மிகுந்த பலன் கிடைக்குமென  ஸ்ரீஹயக்ரீவர் கூறிளினார். அவ்வாறே அகத்தியரும், தன் மனைவி லோபமுத்ராவுடன்   இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து அன்னையின் தரிசனம் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், மரகதம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், நீலமென்ற நவரத்தினங்களை அம்பிகையாய் நினைத்து அவளை வர்ணித்து அழகு தமிழில்  பாடப்பட்டதே  லலிதா நவரத்ண மாலையாகும். 

இக்கோவிலில் இக்கோவிலில் விஜயதசமியன்று, லலிதாம்பிகைக்கு எதிரில் பெரிய வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் படையலாய் படைக்கப்படும்,  15 அடி நீளம், 4அடி அகலம், 1 1/2அடி ஆழத்தில் இருக்குமாறு தயார் செய்யப்படும் இந்த படையலின் நடுவே, பள்ளம் பறித்து இரண்டு டின் நெய் குளம்போல்  கொட்டப்படும்.  அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து திரை விலக்கப்படும்போது அம்மனின் உருவம் நெய் குளத்தில் தெரியும், இதைக்காண மக்கள் திரண்டு வருவர்.  லலிதாம்பிகை கோவிலின் தலவிருட்சம் வில்வம், தீர்த்தம் சூர்யபுஷ்கரணியாகும். 

#லலிதா சகஸ்ரநாமம்:

பொதுவா வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கேத்தி வழிபடும் நேரத்தில் சொல்லப்படும் துதிகளில் லலிதா சகஸ்ரநாமமும் ஒன்னு. ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’ என ஆரம்பிக்கும் இந்த அம்பிகை துதி, மற்றெல்லா துதிகளையும்விட  அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பே, ஒருமுறை சொல்லப்பட்ட அம்பிகையின் நாமம் இன்னொரு முறை சொல்லப்பட்டிருக்காது. இதில் மட்டும்தான் அம்பிகையின் அழகு, தோற்றம், வரலாறு, அவளை வழிபடவேண்டிய முறை, யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபடால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் வாக்தேவதைகளால் சொல்லப்பட்டிருப்பதால் இது நால்வகை வேதத்துக்கு ஒப்பானதாகும். 

பண்டாசுரனின் தொல்லை அதிகரிக்கவே அதை தாங்கமுடியாத தேவாதி தேவர்கள் யாகம் வளர்த்தி அம்பாளை வேண்டினர். அம்பிகை எதும் பதிலளிக்காமல் போகவே தங்கள் உயிரை யாகக்குண்டத்தில் அர்ப்பணிக்க தயாராகினர். அப்பொழுது ஞானமாகி குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் ஸ்ரீலலிதாவாக தோன்றினாள். லலிதாம்பிகை லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என மும்பெருந்தேவிகளும் இணைந்த அம்சம்.   பண்டாசுரனுடன் போரிட்டு அவனை அழித்து தேவர்களை காத்தாள். அசுர வதம் முடிந்தும் உக்கிரமாய் இருந்த அன்னையை சாந்திப்படுத்தும் பொறுப்பு சிவனிடம் வந்து சேர்ந்தது. உலக நலன் வேண்டி உக்கிரம் குறைய, அன்னையை, மனோன்மணின்ற  பெயருடன்  ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்ய பணித்தார். அன்னையும் இத்தலம் வந்து தவமிருந்து தன் உக்கிரம் குறைந்தாள். 

உக்கிரம் குறைந்த அன்னை, தன் அழகிய முகத்திலிருந்து  வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு ‘வசின்யாதி வாக் தேவதைகளை உண்டாக்கி, 1008 தனது திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளை இட்டாள்.   ஸ்ரீ மாத்ரே எனத் தொடங்கும் லலிதா சகஸ்ரநாமம் உண்டானது. இதை அன்னை, ஞானக்கடவுளாம்  ஹயக்கீரிவருக்கு அன்னை கொடுத்தருளினார்.  சக்திகளுக்குள் ஸ்ரீலலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லைன்னு  சொல்வாங்க. மந்திரங்களில், வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீபுரம் போல், வித்யை உபாசகர்களில்  சிவனைப்போல், சகஸ்ரநாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் என மேன்மையானவைகளை பட்டியலிட்டிருக்காங்க.  இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

நமது முதுகுத்தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும்பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் தூண்டிவிடுகிறது. தூண்டப்பட்ட சக்தியானது, மேலெழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிர்தம் இருக்கு. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும்போது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிர்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில்  மூழ்கிய பலன் கிடைக்கும். காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டை செய்த பலன், சூரிய, சந்திர கிரகண  காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்த பலன்,  பஞ்சக்காலங்களில்  கிணறு வெட்டுதல், தவறாது அன்னதானம் செய்ததன் பலன், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது அர்த்தம் உணர்ந்து, சரியான உச்சரிப்போடு லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது. அவத்தை நீக்கும். 

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படித்துவர  நோய்கள் நீங்கும். தீய சக்திகளின் உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

#லலிதாம்பிகை:
லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். திருமீயச்சூர் தலத்தில், லலிதாம்பிகை, மிகுந்த கலை அழகுடன், தன் வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டவாறு, ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இப்படி வலது காலை மடித்த அம்பிகையை  வேறெங்கும் காண்பது அரிது.

#பக்தையிடம் கால் கொலுசு கேட்ட லலிதாம்பிகை அம்மன்:

லலிதாம்பிகையின் அலங்காரத்திற்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களும் இருந்தன. அம்பிகை தனக்கு வேண்டிய கால் கொலுசை பெற்றுக் கொண்டது ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகும்..

பெங்களூரில்  வசித்து  வந்த ஒரு பெண்மணி மிகுந்த இறை பக்தி உடையவர். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்தான், தன் அன்றாட பணிகளை மேற்கொள்வார. 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எனக்கு காலில் அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து  தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. அப்பெண்மணி கனவில் வந்த அம்பிகை யார் என்று அறிந்து கொள்ள முயன்றார். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை. வைணவக்  குலத்தைச் சேர்ந்த அப்பெண்மணி, திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் தாயார்தான் தன் கனவில் வந்தவராக இருக்குமோ என்று அறிந்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவர்கள் எவரும் கனவில் வந்த உருவத்தோடு ஒத்து போகவில்லை. ஒருநாள் தற்செயலாக ஆன்மீக மாத இதழ் ஒன்றில் லலிதாம்பிகையின் உருவப்படத்தை பார்த்தார. தன் கனவில் வந்தது இந்த அம்பிகைதான் என்றுணர்ந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததால்தான் தனக்கு இந்த பாக்கியம் என்று மகிழ்ந்தார். உடனே அம்பிகைக்கு கொலுசை காணிக்கையாகத் தர விரும்பினார. திருமீயச்சூர் கோவிலுக்கு  வந்து விவரங்களை தெரிவித்தார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் கால் பீடத்தில் ஒட்டி இருப்பதால், கொலுசு அணிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் அப்பெண்மணியோ, கொலுசை கேட்டது அம்மன்தான் என்றும், எனவே அதை அவள் கண்டிப்பாக அணிந்து கொள்வாள் என்றும் வற்புறுத்தினார்.

அர்ச்சகர்கள் மீண்டும் கொலுசை அம்மனுக்கு அணிவிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அம்மனின் கணுக்காலலுக்கும் பீடத்துக்குமிடையே முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதையும், அதனை இத்தனை காலம் அபிஷேகப் பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் பகுதியை சுத்தம் செய்து கொலுசையும் அம்மனுக்கு அணிவித்தனர். அப்பெண்மணி அம்மனின் உத்தரவை நிறைவேற்றியதை எண்ணி ஆனந்தமடைந்தார். அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

 
#அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் - லலிதாம்பிகை அம்மனின் நெய் குள தரிசனம்:

லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், நவராத்திரி விஜயதசமியிலும், மாசி மாத அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. இந்த வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் மூன்று மூட்டை அரிசியில் சமைத்த சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் மற்றும் அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இந்த நைவேத்திய பொருட்கள் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப்பொங்கலை ஒரு பெரிய பாத்தியாக அமைத்து, அதில் இரண்டரை டின் நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும்போது, தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் பிரதிபலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

#புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே தரிசிக்கக் கூடிய தலம்:

காஞ்சி மகாபெரியவர் இதலத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இத்தலம் மிகவும் புண்ணியமான க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களே இத்தலத்திற்கு வர முடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஸ்ரீலலிதாம்பிகை, ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்’ என அருளினாராம்.

#திருத்தல வரலாறு:

காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி, இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்து, இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைகிறார்.

ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விடுகிறது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று அவள் ஈஸ்வரனிடம் வருந்தி கேட்க, அதற்கு முக்கண்ணன் ”நான் கூறியது போலவே அவன் மகா விஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்” என்று  கூறுகிறார்.

இதனிடையே, விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்க்கிறாள் கர்த்துரு. அவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்தக் குழந்தை பிறக்கிறது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, சிவபிரானும் அவளை மன்னித்து, ”நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்” என்று கூறுகிறார்.

கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டுகிறாள். இறைவனின் ஆணைப் படி அருணன் சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். ஒருமுறை அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்க, சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான். மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான்.

இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ”என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்” என்று சாபமிட்டார். இதனால் இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டதே, சூரியன் இன்றி உலகம் இயங்காதே என கேட்க, கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார்.

ஏழு மாதங்கள்  எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. உனது பாவம் தீரும்’ என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார்.

ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, ‘என்ன இது… இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ என்று  அலற…

சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து,  ‘உரிய ‍‌‌‍‌நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன்  சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். பதறிப்போன சிவனார் அம்பாளின் முகவாயைப் பிடித்து ‘ஏற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  

தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று அம்பாளிடம் கூறிவிட்டு, உரிய காலம் வந்ததும், சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார். சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத்திருத்தலம் மீயச்சூர் என அழைக்கப்படுகிறது.

அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார்.

ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார்.

வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பாடல்:

வேட முடைய பெருமான் உரையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே !!

#சேத்திர புராணேஸ்வரர் சிற்பம்:

கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் தெற்கு தேவகோட்டத்தில் உள்ள சிற்பம், சிற்பக் கலையின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள மூர்த்தியின் வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் புன்னகைத் தவழும் சாந்தமாகவம் தெரியும்.

உலகில் கணவன் – மனைவிக்கான இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

புராண காலத்தில் இங்கு பிறந்தோர் :

கருடன்
அருணன்(சூரியனின் தேரோட்டி)
வாலி
சுக்ரீவன்
எமதருமர்
சனீஸ்வரன்

#திருமீயச்சூர் இளங்கோயில்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் இளங்கோயில், திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலின் உள்ளே அமைந்து உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 57ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 120 வது தேவாரத்தலமாகும்.

திருமீயச்சூர் கோயிலின் உள்ளேயே இளங்கோவில்  அமைந்துள்ளது.சோழர் கால கோயில்களான இந்த இரு கோயில்களும் இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை.மூலவர் மேகநாதசாமி சுயம்பு லிங்கம். இக் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், லலிதாம்பிகையை விட்டு செல்ல மனமில்லாமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத்திறனாளியான சூரியனினின் தேரோட்டி அருணன் அந்த பதவியைப் பெற முயன்ற போது, சூரியன் அவன் உடல் குறைபாட்டை சுட்டி
கேலி செய்ததால், சிவபெருமான் சூரியனை ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறை உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து, சிவபெருமான் அருளால் கருமை நிறம் மறைந்து ஒளி பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்ட சூரியன் ஊர் ’மீயச்சூர்’. கருவறை தேவ கோக்ஷ்டத்தில் உள்ள சிற்பம் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர். இச்சிற்பத்தில் அம்பாளில் முகத்தில் கணவன் மனைவி இணக்கத்தை விளக்கும் விதமாக வலது புறம் கோபமாகவும், இடது புறம் புன்னகைத் தவழும் நிலையிலும் இருப்பதைக் காணலாம்.கருத்து வேற்றுமையால்,பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால், ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து, சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு மருந்தாக அருந்துகின்றனர்.

மேகநாதர் சன்னதியின் இடது புறமாக, சகலபுவனேஸ்வரர் சன்னதி உள்ளது. அச்சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர், மின்னும் மேகலை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. சகலபுவனேஸ்வரருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. நடராஜர், பைரவர், சூரியன், ஆகாசலிங்கம், வாயுலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

#செல்லும் வழி:

தமிழ் நாடு, மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்


No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...