காளிப்பட்டி கந்தனை வணங்கினால், நம் கவலையெல்லாம் பறந்துபோகும் என்கின்றனர் பக்தர்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து 22 கி.மீ. தொலைவில், திருச்செங்கோடு சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோயில்.
பழநிக்குச் சென்று ஸ்ரீதண்டாயுதபாணியைத் தரிசனம் செய்வோம். அந்தப் பழனியாண்டியே இந்த ஊருக்கு வந்து தரிசனம் தந்தாராம்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியம்பதி நோக்கிப் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதேபோல், காளிப்பட்டியைச் சேர்ந்த அன்பர்களும் பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தபடியும் வருடந்தோறும் வருவார்கள்.
ஒருமுறை, காளிப்பட்டியில் இருந்து பழநி நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள், ஓரிடத்தில் இளைப்பாறினார்கள். அனைவரும் அயர்ந்து தூங்க, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், 'உங்கள் ஊருக்கே நான் வருகிறேன். அங்கே கோயில் கட்டி வழிபடுங்கள்’ என அருளினாராம்.
பிறகு, பழநிக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பியபோது, ஊரில் ஓரிடத்தில் மயில் நிற்பதைப் பார்த்து அதிசயித்துப் போனார்கள். அதையடுத்து மயில் நின்ற இடத்திலேயே முருகனுக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கினார்கள் ஊர்மக்கள்.
காளிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் எவரையேனும் பாம்பு கடித்துவிட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, சந்நிதியில் படுக்கவைக்கின்றனர். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பருகக் கொடுத்து, விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுவிட... விஷமானது முறிந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
இங்கு, பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று, திருத்தேரில் வீதியுலா வரும் கந்தன், கொள்ளை அழகுடன் திகழ்வான்! சஷ்டி, கிருத்திகை, அமாவாசை என மாதந்தோறும் பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
தைப்பூச நாளில், ஏராளமான பக்தர்கள் வந்து பாலபிஷேகம் செய்வதுடன், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்து வேண்டிக் கொள்கின்றனர். அந்த நாளில் இந்த முருகனை தரிசித்தால், கல்யாண வரம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழ்வர் என உறுதியுடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment