Saturday, January 27, 2024

கடவுள் பரம சிவம் எப்படிப்பட்டவர்

கடவுள் பரம சிவம் எப்படிப்பட்டவர்
   
         கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
          தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
          பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் 
          என்று *இவை இறைபால் இயற்கை அல்லவே*  (திருமூலர்) 

என்ற திருமந்திரப் பாடல் இறை  கடவுள்  சிவம்  எப்படிப்பட்டது என்று கூறுகிறது.     

   *கோபப்படுதல்*  (கன்றல்)   சிந்தித்தல் (கருதல்)  சாதகமாகவோ பாதகமாகவோ செயல்கள் செய்தல்   (கர்மம்),   
பசியினால் உண்ணுதல்  (தின்றல்),
 ருசிக்காக  ஆசையினால் உண்ணுதல் (சுவைத்தல்), 
தீமை செய்தல், பின்வாங்குதல் (பின்றல்),
 *பால்யம் இளமை முதுமை உயர்வு தாழ்வு சிவத்தல் கருத்தல் வெம்மை  குளுமை சோர்வு தளர்ச்சி உள்ளிட்ட மாற்றங்களை அடைதல்* (பிறங்கல்), 

*தற்பெருமை பேசுதல் (பெருமை கூறல்) ஆகியவை*
இறை இயல்பு அல்ல  *கடவுள்  இயல்பு  அல்ல*  *சிவ இயல்பு அல்ல* என்று  மண்ணிலே பிறக்காமல் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து சென்ற சிவ கண  நாதரான திருமூலர் தெரிவிக்கிறார். 
         
  *கோபம் இயலாமையின் வெளிப்பாடு.  பிறப்பு உள்ளவர்களின் குற்றம் குறை*.
        
ஈசன் எல்லாம் வல்லவர்.  எல்லாம் கடந்த கடவுள். தோன்றாத பிறவாத பெருமையன்.  பிரம்மன் விசுணு ருத்திரன்  சக்தி லட்சுமி சரசுவதி முதலாக எல்லோரையும்  படைத்து காத்து அழித்து ஐந்து தொழில் புரியும்  முழுமுதற் பரம்பொருள்.   

   செந்தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சி  சிறிதும் இல்லாமல்,  செந்தமிழ்ப் பாடல் மரபு தெரியாமல்,  
ஆன்மீக ஞானம் கடுகளவும் இல்லாமல், அசுரர்களோடும் பிறரோடும் சேர்க்க வேண்டிய கன்றல் முதலிய உயிரினச் சார்புச் சொற்களை ஈசனோடு சேர்த்து மனம் போனபடி  நாத்திகப் போக்கில் தேவாரம் முதலிய   திருமுறைகளுக்குப் பொருள் உரைப்பவர்கள்  சிவபெருமான் பற்றி பேசுகின்றவர்கள் எழுதுகின்றவர்கள் எல்லோரும் பரம சிவம் இப்படிப்பட்டது அல்ல என்று கூறும்  இப்பாடல் பொருளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   

*கோபம் உள்ளவர்க்குப் பரம சிவனது  திருக் காட்சியும் பேரருளும்  கூடக் கிடைக்காது*. 

ஈசனது பேரருளும் திருக் காட்சியும் பெற்ற சித்தர்களுக்கு  ஜீவன் முக்தர்களுக்குக் கூட கோபம் இல்லை என்பதை அருளாளர் நாயன்மார் வரலாறு காட்டுகின்றது. 

தவ முனிவர்  மணமகளின் கூந்தலைக்  கேட்ட போது மானக்கஞ்சாறர் கோபப்படவில்லை. 

மனைவியை உடன் அனுப்புமாறு கேட்ட போது  இயற்பகை நாயனார் கோபப்படவில்லை.  

பாண்டியன்  மாணிக்க வாசகர் மேல் வீண் பழி சுமத்திப் பழித்துத் தூற்றி  மரண தண்டனை விதித்தபோது அவர்  கோபப்படவில்லை.   

நூற்றுக் கணக்கான அடியார்களுடன்  திருஞான சம்பந்தரைக் கொல்வதற்காக  மடத்தில் சமண குருமார்கள் தீ வைத்த போது சம்பந்தர் கோபப்படவில்லை. 

வானத்து நிலவு பூமியில் வந்துள்ளது போல்  ஈசன் புகழ் பாடி ஞானத்து உருவாய் இசையின் வடிவாய்  இருந்தார் என்று சேக்கிழார் விளக்குகிறார். 

 சமண குருமார்கள் பல்வேறு வகையில் கொல்ல முயன்று விடம் கொடுத்த போதும்  கொதிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் போட்ட போதும் கொல்லும் மத யானையை  ஏவிய போதும்  கல்லோடு கட்டிக் கடலில் தள்ளியபோதும்  திருநாவுக்கரசர் கோபப்படவில்லை. 

*ஈசன் நாமம் சொல்லி வாழும்  அடியார்களுக்கே   அவன் காட்சி கண்ட அருளாளர்களுக்கே  கோபம்  முதலிய தீமை இல்லாத போது* உருவமே இல்லாமலும் அம்மை  அப்பன்   அம்மையப்பன்  பஞ்ச பூதம் என்று எல்லாமாகவும்   விளங்குகின்ற  எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட *நெருப்பே   மேனியான எல்லாம் வல்ல  காம தகன  சர்வேசுவரனைப் பற்றி பேசும்போது* மொழி அறிவு கூட இல்லாமல்  சாபம் தோசம்   கோபப்பட்டார்   கோபத்தால் கண் சிவந்தார் 
  வெகுண்டார்  ஆசைப்பட்டார்  மயங்கினார்
 வெம்மை அதனால் வில்வம் சந்தனம்    என்றெல்லாம் பேசி இழிவுபடுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் சிவ  வடிவம் பற்றி சிவாலயங்கள் பற்றி  நாத்தழும்பேற நாத்திகம் பேசிப் பாவத்தைச் சுமக்கின்றனர்.  

ஈசன் படைத்த  பிரம்மனது  ஐந்தாம் சிரம் கொய்து அவனை நான்முகன் ஆக்கிய  சிவ மைந்தரான நாய் வாகன  பைரவருக்கும் சிவ பெருமானுக்கும் வேறுபாடு தெரியாமல் இழிவுபடுத்துகின்றனர்.  

பிரம்மன் கொல்லப்படவில்லை ஒரு தலை மட்டுமே குறைக்கப்பட்டான்,  அதனால் சிரம் அகற்றிய  பைரவருக்குக் கூட பிரம்மஹத்தி தோஷம் இல்லை.

 *ஊழி முடிவில் பிரம்மன் திருமால் சக்தி உட்பட எல்லோரையும்  முடிப்பவர் பரம சிவன்* என்று தெரியாமல் சிவனுக்கு பிரம்மஹத்தி  இவரால்  தீர்ந்தது அங்கு  தீர்ந்தது  என்று நாத்திகக் கற்பனைக்  கோட்டை கட்டுகின்றனர். 

இவ்வாறு அனுசூயா சுருட்டப்பள்ளி  பழநி சுவாமி மலை போன்ற கட்டுக்கதை  பேசி எழுதி  கொடிய  பாவம் எல்லாம்,  சிவ நிந்தனை எல்லாம் செய்து விட்டு  துன்பம் வரும்போது  நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இந்த நிலை என்று அப்பாவி போல்  புலம்புகின்றனர்.  

*சிவன் சொத்து மட்டுமல்ல சிவ நிந்தனையும் சர்வ நாசமே*

.  சிவப்பிரியா

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...