Monday, January 1, 2024

இயற்பகை நாயனார் குருபூஜை மார்கழி உத்திரம் நாளில் கொண்டாடப்படுகிறது.

சிவனடியாருக்கு
தனது மனைவியை தானமாக அளித்தவரும்,
அதை தவறாக பேசுபவர்களை வாளால் வெட்டிய 63 நாயன்மார்களில் ஒருவரான
#இயற்பகை_நாயனார் குருபூஜை இன்று:
(#முக்தி_நாள்) 
(#மார்கழி_உத்திரம்)
இயற்பகை நாயனார் – மனைவி தானம்
இயற்பகை நாயனார், இறைவனால் கொடுக்கப்பட்ட அனைத்தும் இறையடியாருக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில், சிவனடியாருக்குத் தன் மனைவியை தானமாக அளித்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் முன்பு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் இயற்பகையார் என்பதாகும். அவர் சிவனிடத்தில் மாறாத அன்பு கொண்டிருந்தார்.
இயற்பகை நாயனார் குருபூஜை மார்கழி உத்திரம் நாளில் கொண்டாடப்படுகிறது.
பூம்புகார் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் இருந்த சிறப்பினை உடையது. இந்நகர் காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.

இயற்பகை நாயனார் தன்னுடைய வணிகத் திறத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார். இவர் சிவபெருமானிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார்.

சிவனிடத்தில் கொண்டிருந்த அன்பினால் சிவனடியவர்களைப் பேணுவதை பெரும் பேறாகக் கருதினார். இதனால் அவ்வடியார்கள் அவரிடம் இருக்கும் எதை வேண்டினாலும், அதை தயங்காது வழங்கி வந்தார்.

இயற்பகையாரின் மனைவியார் கணவனைக் கண் கண்ட தெய்வமாகக் கருதுபவர். கற்பில் சிறந்த அப்பெண்மணி, இயற்பகையாரோடு இணைந்து சிவனடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து வந்தார்.

பொதுவாக உலகில் உள்ளோர் நான், என்னுடையது என பற்று கொள்வது இயற்கை. ஆனால் இயற்கையான‌ பாச உணர்ச்சிகளில் பற்று கொள்ளாது, அவைகளுக்குப் பகையாய் இருந்தால் இவரை எல்லோரும் இயற்பகையார் என்றே அழைத்தனர். இவருடைய இயற்பெயரை அறிய முடியவில்லை. இயற்பகையார் என்ற பெயராலேயே இவர் அறியப்படுகிறார்.

சிவனார் இயற்பகையாரின் பற்றற்ற கொடை திறனை உலகுக்கு வெளிப்படுத்த விருப்பம் கொண்டார். ஆதலால் திருநீறு அணிந்த வேதியர் வேடம் கொண்டு இயற்பகையார் வீட்டிற்கு வந்தார்.

சிவனடியாரைக் கண்ட இயற்பகை நாயனார் அவரை அன்புடன் வரவேற்றார். உரிய ஆசனத்தில் அமர வைத்து வழிபாடு செய்து இன்னமுது படைத்தார். பின் சிவனடியார் தன்னுடைய வீட்டிற்கு வந்தது தான் செய்த பாக்கியம் என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.

அதனைக் கேட்டதும் “சிவனடியவர்கள் விரும்பும் பொருட்களை இல்லை எனாது நீ வழங்குவாய் என்பதைக் கேள்விப்பட்டே யாம் இங்கு வந்துள்ளோம். எம்முடைய விருப்பப் பொருளை நீ தர சம்மதித்தால் அதனைப் பற்றித் தெரிவிப்போம்” என்றார் வேதியர்.

“என்னிடத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் இறைவனின் கொடையே. அதனை நான் சிவனடியார்களுக்கு எப்போதும் மனநிறைவுடனே அளித்து வருகிறேன். ஆதலால் தாங்கள் தம்முடைய விருப்பத்தை தெரிவிங்கள்” என்றார் இயற்பகையார்.

“சரி, உன்னுடைய மனைவியை எனக்கு பணிவிடை செய்ய அளிப்பாயாக” என்றார் வேதியர்.

“என்னிடம் இல்லாத பொருளை கேட்பீர்களோ என்ற அச்சம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அவ்வாறு இல்லாமல் என்னிடம் உள்ளதையே நீங்கள் கேட்டுள்ளீர்கள். தாங்கள் விரும்பியபடியே அதனை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

மனைவிடம் சென்று நடந்தவைகளைக் கூறினார். அதனைக் கேட்ட அப்பெண்மணி அதிர்ச்சியடைந்தாலும், கணவனின் வார்த்தையைப் பின்பற்றுவதே தனது கடமை என்று எண்ணி அவ்வேதியருடன் உடன் செல்ல சம்மதித்தார். வேதியருடன் புறப்படத் தயார் ஆனார்.

அப்போது வேதியர் இயற்பகையாரிடம் “உன்னுடைய மனைவியை நீ எனக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைக்க சம்மதித்துவிட்டாய். ஆனால் உன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் நான் உமது மனைவியுடன் இவ்வூரைக் கடக்கும் வரை எமக்கு பாதுகாப்பு அளிப்பாய்” என்றார்.

“அவ்வாறு செய்வது என்னுடைய பாக்கியம்” என்று கூறி கையில் வாளினைக் கொண்டு போர்க்கோலம் பூண்டார் இயற்பகையார்.

வேதியரும், மனைவியாரும் முன்னே செல்ல அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார் இயற்பகை நாயனார்.

நடந்தவைகளை அறிந்த இயற்பகையார் மற்றும் அவருடைய மனைவியின் உறவினர்கள், ஊர்மக்கள் வேதியரை தடுத்தனர்.

அப்போது அவர்கள் “உன்னுடைய மனைவியை இக்கிழவேதியருடன் அனுப்பி அவர்களுக்கு காவலாக வேறு உடன் செல்கிறாயே. உனக்கு புத்தி கெட்டுப் போய்விட்டதா?” என்று கேட்டனர்.

“யாரேனும் சிவனடியாரைத் தாக்கினால் அவர்களின் உடலில் உயிர் இருக்காது. ஆதலால் எல்லோரும் விலகிச் செல்லுங்கள்” என்று கோபத்துடன் கத்தினார்.

“நீ செய்யும் செயலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றபடி வேதியரைத் தாக்க முன்னோக்கி விரைந்தனர்.

இயற்பகையார் அவர்களை எல்லாம் வாளால் வெட்டி வீழ்த்தினார். சிலர் இயற்பகையாருக்கு பயந்து அவ்விடத்தில் இருந்து ஓடினர்.

பின்னர் இயற்பகையார் வேதியர் மற்றும் தன் மனைவியோடு திருச்சாய்க்காடு என்னும் இடத்திற்கு வந்தார்.

அப்போது சிவனடியார் இயற்பகையாரிடம் “இனி உன் துணை எனக்குத் தேவையில்லை. நீ திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார்.

இயற்பகையார் சிவனடியாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி விடைபெற்றார்.

சிறிது தூரம் சென்ற பிறகு “இயற்பகையே, காப்பாற்று காப்பாற்று” என்று வேதியர் கத்தும் சத்தம் இயற்பகையாருக்குக் கேட்டது.

“ஆபத்து ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா? இதோ வந்துவிட்டேன்.” என்றபடி கையில் வாளை உயர்த்தியவாறு சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடினார்.

அவ்விடத்தில் வேதியரைக் காணவில்லை. இயற்பகையாரின் மனைவியார் மட்டுமே நின்றிருந்தார். இருவருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. அப்போது காளை வாகனத்தில் உமையம்மையுடன் சிவனார் காட்சியளித்தார்.

“இயற்பகையாரே, உம்முடைய கொடைத்திறத்தை உலகிற்கு உணர்த்தவே வேதியர் வடிவில் வந்தோம். ஊர்மக்கள் உம்மை தூற்றினாலும் உம்முடைய கொள்கையில் உறுதியாக இருந்தீர். இருவரும் எம்மை வந்து அடைவீர்களாக.” என்று அருளினார்.

இயற்பகையாரும், அவரது மனைவியும் பிறவிக்கடல் கடந்து சிவனடியில் சேர்ந்தனர். இயற்பகையாரின் வாளுக்கு இரையானவர்களும் சிவலோகத்தை அடைந்தார்கள்.

இயற்பகை நாயனார் குருபூஜை மார்கழி உத்திரம் நாளில் கொண்டாடப்படுகிறது.

இவரை இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் வியக்கிறார் சுந்தரர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...