Friday, February 2, 2024

திருப்பயற்று நாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர்

அ/மி திருப்பயற்றுநாதர் கோயில், திருப்பயற்றூர், திருப்பயத்தங்குடி,
திருவாரூர் மாவட்டம்,
PIN 610101        
*மூலவர்:
திருப்பயற்றுநாதர், முக்தபுரீசுவரர்

*தாயார்:
காவியங்கண்ணி, நேத்ராம்பிகை.

*தல விருட்சம்:
சிலந்தி மரம். 
*தீர்த்தம்:
கருணாதீர்த்தம். (பிரம்மதீர்த்தம்)

*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருநாவுக்கரசர்.   

*இது பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம்.

*முன்னொரு காலத்தில் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை  இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டு தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். அவர் வேண்டுகோளின்படி மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாயின. வணிகரும் மகிழ்ந்து வரியில்லாமல் சென்றார். பின் பயறு மிளகாகியது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார். 

*பஞ்சநதவாணன் என்பவனின் கண் நோய் நீங்கியதற்காக நிலம் கொடுத்த செய்தி இத்தலத்தின்  கல்வெட்டினால் அறியப்படுவதால்,  கண் பார்வையில் குறைபாடு  உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள கருணாதீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும் திருப்பயற்று நாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்பது  புலனாகின்றது.      
 
*மூலவர் - ஆவுடையார் நாற்கோண வடிவம்; பழமையான திருமேனி.

*எல்லா தேவ சக்திகளின் ஒரே இருப்பிடம் இந்த திருப்பயற்றுநாதர் கோயில்.

*கல்வியில் சிறப்புற விரும்புவோரும், மறதி தொல்லையிலிருந்து விடுதலை வேண்டுவோரும்  தொழவேண்டிய மூர்த்தி, திருப்பயற்றுநாதர். 

*இவர், முக்தி தரும் ஈசன் என்பதால் பொய்யாமொழி சித்தர், ‘‘முக்தபுரீசா” என்று இவரைப்போற்ற, இவருக்கு  முக்தபுரீஸ்வரர் எனும் பெயரும் தோன்றிற்று.

*அருள்மிகு காவியங்கண்ணி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கையில் அபயமுத்திரையுடனும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னைக்கு அபிஷேகம் செய்த பால் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை கண்களில் ஒற்றியபின் அருந்தினால் சகல கண் சம்பந்தப்பட்ட நோய்களும் பூரணமாக நீங்கும். எனவேதான் இந்த அன்னை நேத்ராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள்.
  
*இத்தலத்தில் வீரமாகாளி அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள்  வீரமாகாளி சன்னிதியில்வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது நம்பிக்கை.  

*தலமரமாகிய சிலந்தி  மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு; இலை, புன்னையிலைபோல இருக்கும்.
 
*அமைவிடம்:
 இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து  சூரக்குடி வழியாக நாகூர் செல்லும் சாலையில் 15.கி.மீ.   தொலைவில்  இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன.

ஓம் சிவாயநம 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...