Sunday, February 11, 2024

திருப்புகலூர் அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில்,

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர் அஞ்சல் PIN-609704. 
திருவாரூர் மாவட்டம். 
*இறைவன்: உத்திராபதீஸ்வரர்,
கணபதீஸ்வரர்.   *அம்பாள்: வாய்த்த திருகுகுழல் உமைநாயகி, சூளிகாம்பாள்.  

*இது சம்பந்தர், அப்பரால் பாடப் பெற்ற தலம்.      

*விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்த தலம் இது.  கஜமுகாசுரனைக் கொன்ற பழிதீர விநாயகர் இங்கு இறைவனை வழிபட்டார். கணபதி இறைவனை வழிபட்டதால் கணபதீச்சரம் என்று கோயிலுக்குப் பெயர்.     விநாயகர் அசுரனைக் கொன்றபோது அவனுடைய குருதி படிந்து இப்பகுதி முழுவதும் செங்காடாக காட்சியளித்ததால் இவ்வூர் செங்காட்டங்குடி என்று பெயர் பெற்றது.     

*இது சிறுத்தொண்ட நாயனார் இறையருள் பெற்ற தலம். 

*பல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதி,  வாதாபி படையெடுப்புக்குப் பின், சிவபக்தியில் நாட்டம்கொண்டு சிவனடியாராக மாறி, 'சிறுத்தொண்டர்' என்று அழைக்கப்பெற்றார். அடியார்க்கு அமுதூட்டுவதைத் தன் தொண்டாகக்கொண்ட இவரது சேவையின் மகிமையை உலகிற்கு உணர்த்த, சிவபெருமான் அடியார்போல வேடம்பூண்டு வந்தார். 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே உண்ணும் வழக்கம் உடையவன் யான். நான் உண்ண பிள்ளைக்கறி வேண்டும்' என்று கேட்டார். சிறுத்தொண்டர்  சற்றும் தயங்காது, தன் பிள்ளையான சீராளனைப் பலியிட்டு அடியாருக்கு அமுது செய்தார். ஆனால் அடியாராக வந்த இறைவனோ, அன்னம் உண்ணுமுன்பாக சீராளனையும் வரச் சொல்ல, சிவன் அருளால் மாண்ட சீராளன் மறுபடியும் எழுந்து வந்தான்.  இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த தலம் திருச்செங்காட்டங்குடி.  

*மூலவரின் வலதுபுறம் தனி சன்னிதியில் உத்தராபதீஸ்வரர்  உற்சவ மூர்த்தியாக உள்ளார். திருக்கரங்களில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் காணப்படுகிறார்.       

"உத்ராபதியார் திருமேனி உருவான  வரலாறு: பல்லவ மன்னன் ஐயடிகள் காடவர்கோன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்தில் தங்கி வழிபட்டு  உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர்.  கும்பாபிஷேக நாள் நெருங்க, வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகி வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமா?" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார்.
  
*இத்தலம் இறைவன், அடியார் பொருட்டு பூமியில், தம் பாதம் தோய நடந்து அருள் செய்த திருத்தலங்களில் ஒன்றாகும். இறைவன் உத்திராபதீஸ்வரராக, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதல் கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்தார்.     

*சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சிகொடுத்து முக்தியருளியதை  நினைவுகூரும் விதமாக, இங்கு ஆண்டுதோறும் சித்திரை பரணிப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும். 

இதன் ஓர் அங்கமாக
'பிள்ளைக்கறியமுது படையல் விழா நடைபெறும்.  சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் "சீராளங்கறி" எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும். மக்கட்பேறு இல்லாதவர்கள் உத்தராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.

அன்று, மதியம் 2 மணிக்கு இறைவன் பிள்ளைக்கறியமுது பெற உத்திராபதீஸ்வர சுவாமி சிறுத்தொண்டர் நாயனார் மடத்திற்கு எழுந்தருள்வார். இரவு 2 மணிக்கு, காண்போர் எல்லாம் மெய்சிலிர்க்க, பிள்ளைக்கறியமுது படையல் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு சிறுத்தொண்டருக்கு சிவபெருமான்,  காட்சிகொடுத்து முக்தியளிப்பார். இதைத் தரிசனம்செய்யும் பக்தர்களுக்கு சிவபதம் கிட்டும் என்பது ஐதீகம். *பொதுவாக சிவனடியார்களுக்கு உமையுடன் ரிஷபத்தின் மேல் அமர்ந்து ஈசன் காட்சி கொடுப்பார். ஆனால் இங்கு ஈசன் சிறுதொண்டருக்கு  முருகப்பெருமானுடன் சேர்ந்து காட்சி கொடுத்தார். 

*தன் பக்தை ஒருத்திக்காக பிரசவம் பார்த்த இத்தல அம்பாள் "வாய்த்த திருகுகுழல் உமைநங்கை"  ‘சூளிகாம்பாள்’ என்றும் போற்றப்படுகிறாள். இத்தல அம்பாளை வழிபட, தாய்மை அடைந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் அமையும்.   

*பி்ரம்மஹத்தி தோஷங்கள், கொடிய பாவங்கள், குலசாபம் முதலியன அகல இத்தல கணபதி, ஈசன், அம்பாள், பைரவர் ஆகியோரை வழிபடுவது சிறப்பு.    

*காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருச்செங்காட்டங்குடி. 
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்           

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...