Tuesday, February 13, 2024

தூத்துக்குடி அருகே, கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோயில்.

தூத்துக்குடி அருகே, கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோயில்தான் மிகச் சிறிய கோயில். கருவறை, கோபுரம், அர்த்தமண்டபம் என்று கோயிலுக்குரிய அனைத்து அம்சங்களுடன் 1200 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய கோயில் இது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை பேரூராட்சி. இந்த ஊரிலிருந்து சுமார் ஒரு கி.மீ பயணித்தால் கழுகுமலை என்று அழைக்கப்படும் 'அரைமலை'யை அடையலாம். இந்த மலைமீதுதான் மலைக் குடைவரைக்  கோயிலாக ஒற்றைப் பாறையில் (Monolithic rock temple) வெட்டுவான் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இக்கோயில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது.  தமிழகத்தின் 'எல்லோரா' என்று இந்தக் கோயிலை அழைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில்.

மலைமீதிருந்து பார்த்தால் இந்தக் கோயில் கண்ணுக்கே தெரியாது. கிடைமட்டத்திலிருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. முற்றுப்பெறவிட்டாலும்கூட, தெய்விகத் தன்மையுடன் பிரம்மா, திருமால், தேவகன்னியர்கள், பூத கணங்கள் என்று பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மங்களின் சிற்பங்கள் அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் கோயில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பம் பேரெழில் வாய்ந்தது. நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். 

இப்போது கோயில் கருவறைக்குள் சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற பாண்டிய நாட்டுப் படைகள் இந்த ஊரில் தங்கியிருந்தது பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. 

வெட்டுவான் கோயில் குறித்தும், இந்தப் பெயர் வந்ததற்கான காரணம் குறித்தும் சுவாரஸ்யமான கதையொன்று இந்தப் பகுதி மக்கள் மத்தியில் உலவி வருகிறது. 

பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். கல்லுக்கு உயிர் கொடுக்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். அப்போது அவரது மகன் கூட்டத்தில் தொலைந்து போய்விட்டான்.  தனது மகனைப் பல இடங்களில் தேடியும் சிற்பியால் கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் பல உருண்டன. மகனை இழந்த துயரத்தில் 'அரைமலை' என்று அழைக்கப்படும் இந்தக் கழுகுமலைக்கு வந்த சிற்பி இங்கேயே தங்கிவிட்டார். சமணத் துறவிகளுக்கு வேண்டிய சிலைகளைச் செதுக்கிக் கொடுத்து வந்தார்.

அப்போது  சிற்பியிடம் வந்த மக்கள், “இளஞ்சிற்பி ஒருவன் கற்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். நீ என்ன செதுக்குகிறாய்? அவன் எவ்வளவு நேர்த்தியாக சிலைகளைச் செய்கிறான் தெரியுமா?” என்று கூறினர்.  வருகிறவர், போகிறவர்கள் அனைவரும் அந்த இளஞ்சிற்பியைப் பற்றிப் பாராட்டிச் சொல்லவே,  அவருக்குக் கோபம் தலைக்கேறியது. இளஞ்சிற்பி மீது வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகியது. ஒருநாள் கோபத்துடன் இளஞ்சிற்பியை நோக்கிச் சென்ற சிற்பி, தன் கையில் வைத்திருந்த உளியால் அவரைத் தலையில் தாக்கினார். உடனே இளஞ்சிற்பி வலி தாங்கமுடியாமல், “அப்பா...” என்று அலறியபடி கீழே விழுந்தான். குரல் கேட்டதும் நடுங்கிப் போன சிற்பி ஓடிச் சென்று கீழே விழுந்தவனைத் தாங்கிக் கொண்டார். அப்போதுதான் இளஞ்சிற்பியின் முகத்தைப் பார்த்தார். ஒருகணம் துடித்துப்போனார். காரணம், திருவிழாவில் காணாமல் போன தனது  மகன் தலையைத்தான் உளியால் வெட்டியிருந்தார். 

தனது மகன் செதுக்கியச்  சிற்பங்களையும், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கோயிலையும் பார்த்து மலைத்துப் போனார்  சிற்பி. தலை வெட்டப்பட்டு இறந்த தனது மகனைத் தூக்கித் தனது மடியில் போட்டுப் புலம்பினார். இதனால்தான் இந்தக் கோயில் பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்று கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள். எனவே ‘வெட்டுவான் கோயில்’ என்று பெயர் பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு.

இது செவிவழிக் கதைதான் என்றாலும் கோயில் மீதான நம்பிக்கை இந்த ஊர் மக்களோடும், வாழ்வியலோடும், இந்தக் கோயிலோடும் இணைந்துவிட்டது. இந்தக் கதை இல்லாமல் வெட்டுவான் கோயில் இல்லை. அழகான சிற்பங்களையும், தந்தை - மகன் பாசத்தையும் தாங்கி இன்றும் உயிரோவியமாகப் பாறைமீது கம்பீரமாக நிற்கிறது இந்தக் கோயில். கழுகுமலையில் வெட்டுவான் கோயில் மட்டும் இல்லாமல் சமணச் சிற்பங்கள் நிறைந்த சமணப் படுகைகளும், முருகன் கோயிலும் இருக்கின்றன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சி யளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற 150 தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கழுகுமலை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக்  கோயிலாகும். கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் எழில்மிக்கத் தலம் இது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...