செவிசாய்த்த விநாயகர் - அன்பில்
திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோர் பாடியுள்ள திருத்தலம், அன்பில் ஆலந்துறை. `அன்பில்’ என்பது தலத்தின் பெயர்.
`ஆலந்துறை’ என்பது கோயிலின் பெயர். சம்பந்தப் பெருமான் இங்கே எழுந்தருளியபோது, கொள்ளிட நதியில் வெள்ளம் கரை புரண்டோடியதால், தென்கரையிலிருந்தே சம்பந்தர் பதிகம் பாடினார் என்பார்கள்.
அதை இறைவன் ஆணையின்படி அங்கிருந்த விநாயகர் செவிசாய்த்துக் கேட்டார். இதனால் அவருக்குத் `தேவாரம் கேட்ட விநாயகர்’ என்ற பெயரும் உண்டு.
இதற்கு ஏற்ப இந்த விநாயகர் திருவுருவம் திருமுடியை வலதுபுறம் வளைத்து, செவிசாய்த்துக் கேட்கிற பாவனையுடன் அமைந்ததை நாமும் கண்டு ரசிக்கலாம்.
பராந்தகச் சோழன் வேத வேள்வியில் சிறந்த 108 அக்னிஹோத்ரிகளை அழைத்து வந்து, இந்தத் தலத்தில் குடியேறச் செய்தான்.
இந்த 108 குடும்பத்தார்களும் ஜைமினி சாமவேத வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய சாமவேத பாராயணத்தைக் கேட்டருளிய விநாயகர், சம்பந்தரின் பாடல்களையும் கேட்டதால் இவரை `சாமகானம் கேட்ட விநாயகர்’ என்றும் அழைப்பார்கள்.
`மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்றடையும் புனல் அன்பில் ஆலந்துறையே...’
என்பது சம்பந்தர் தேவாரம். `நிறைந்த பொழில் சூழ்ந்த அன்பில் ஆலந்துறையில் வேதம் ஓதும் சிறுவர்கள் கூட்டத்தில் ஒலி எழும்புகிறது.
அங்குள்ள கிளிகள் அந்த வேத ஒலியைச் சந்தத்தோடு இசைக்கின்றன. அங்கே வீற்றிருக்கும் சிவ பெருமான் சடைபொருந்தியவர்; சாமர்த்தியமுடையவர்; முற்றாத இளம் சந்திரனைச் சூடியவர்.
அவரே இடபக் கொடியுடையவராகிய எந்தை’ என்று சம்பந்தர் மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரியின் வடகரையில் உள்ள இந்தக் கோயிலுக்கு, திருச்சி மற்றும் லால்குடியிலிருந்து செல்ல வசதிகள் உள்ளன.
இங்கே இறைவன் `சத்யவாகீச்வரர்’, `பிரம்மபுரீச்வரர்’, `ஆலந்துறையார்’ என்றும் அம்பிகை, `சௌந்தர நாயகி’ என்றும் அழைக்கப் பெறுகிறார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்.
No comments:
Post a Comment