‘கருப்பையில் பிறவாதிருக்க இலுப்பையூரை நினை மனதே’ என்று வட இலுப்பை திருத்தலத்தைப் போற்றுகின்றது அருணகிரிநாதரின் திருப்புகழ். ‘மாதூக க்ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருத்தலம். காஞ்சிபுரம்- ஆற்காடு சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரிநாதர், தபோவனம் ஞானானந்த சுவாமிகள், பூண்டி மகான் போன்றவர்கள் விஜயம் செய்து, பூஜித்து இருக்கின்றனர்.
காஞ்சி மகா பெரியவா சுமார் 350 முறைக்கு மேல் இங்கே வந்து தங்கி இருந்து, பூஜைகள் செய்து வழிபட்டிருக்கிறார். மஹா ஸ்வாமிகள் இந்த ஊருக்கு வரும்போதெல்லாம், ‘வேதத்தின் அத்தாரிட்டி’ என்று அவரால் போற்றப்பட்ட குமாரஸ்வாமி தீட்சிதரின் இல்லத்தில் தங்கி, பூஜைகள் செய்வது வழக்கம். அந்த இல்லத்துக்கு எதிரிலேயே மிகப் பழைமையான சிவாலயம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. பரமாசார்ய சுவாமிகள் வட இந்தியாவுக்குப் பாத யாத்திரை சென்றபோதும், பல வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே திரும்ப வந்தபோதும் அவருக்கு இங்கே காமாட்சி தேவியின் தரிசனம் கிடைத்தது. அப்படி இரண்டு முறை அம்பிகையின் பரிபூரண தரிசனம் பெற்ற சுவாமிகள், இந்த இடத்தில் அம்பிகையின் சாந்நித்தியம் பூரணமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அம்பிகையின் திருவுள்ளப்படி, தற்போது இந்தக் கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, ஏற்கெனவே இருந்த தெய்வ மூர்த்தங்களுடன் தேவி சமேதராக இருக்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்ற இன்னும் சில தெய்வ மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே பரமாசார்ய சுவாமிகளால் பெரிதும் போற்றப்பட்ட குமாரஸ்வாமி தீட்சிதரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment