Saturday, February 3, 2024

மாமல்லபுர சங்ககால முருகன் கோவில் என்பது மாமல்லபுர கடற்கரையில் சாளுவன்குப்பம்.



சாளுவன்குப்பம் முருகன் கோயில்
சாளுவன்குப்பத்தின் சங்க கால முருகன் திருக்கோவில் (Murugan Temple, Saluvankuppam) அல்லது மாமல்லபுர சங்ககால முருகன் கோவில் என்பது மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் சாளுவன்குப்பம் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இது சைவ சமயக் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். இங்கே தான் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. சங்ககால முருகன் கோவில் சென்னைக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற மாமல்லபுரத்திலிருந்து சில கல் (5 கிமீ) தொலைவில் சாளுவன்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் அப்போதைய பெயர் திருவிழிச்சில். புலிக்குகையிலிருந்து நூறு மீட்டர் தள்ளி இந்த முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர். எனினும் இந்திய அகழ்வாய்வாளர் ஆர். நாராயணசாமி இக்கருத்துடன் உடன்படவில்லை. அந்தக் காலத்துக்குரிய பிரபல இலக்கியங்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படாததுதான் அவருடைய ஐயத்திற்குக் காரணமாக உள்ளது.
பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது. தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவ காலத்துக்கு முந்தைய கோவில்கள் இரண்டில் இக்கோவில் ஒன்று. மற்றொன்று வேப்பத்தூரில் அமைந்துள்ள வீற்றிருந்த பெருமாள் கோவிலாகும்.

கண்டுபிடிப்பு

இந்தியப் பெருங்கடல் சுனாமியால் வெளிப்பட்ட ஒரு பாறையில் காணப்பட்டக் கல்வெட்டுக் குறிப்புகளைக் கொண்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்ஆய்வாளர்கள் தி. சத்தியமூர்த்தி மற்றும் சத்தியபாமா பரணீநாத் ஆகியோர்களால் 2005-06 மற்றும் 2006-07ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்து இக்கோவிலைக் கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் 8 ஆம் நூற்றாண்டின் பல்லவ கால கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் மேலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வால் சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. மாமல்லபுரம் சங்ககாலத் துறைமுக நகரமாகக் கூறப்படும் நீர்ப்பெயற்று என்று சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. 22 செப்டம்பர், 2005ல்  இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் கடல் அகழாய்வுப் பிரிவினர் ஆழிப்பேரலையால் வெளிவந்த சில கட்டிடச்சிதைவுகளை முழுவதுமாக வெளிப்படுத்தினர். இவை மாமல்லை கடற்கரை கோவிலுக்கு 270 அடி தொலைவில் இருக்கிறது. இதன் அமைப்பு மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்போல் உள்ளது.

முருகன் கோவிலின் முன்தோற்றம்
2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் எழுந்த ஆழிப் பேரலைகள் குறைந்த பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் சுனாமி அலைகளால் வெளிப்பட்ட பாறைகளில் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தனர். யுனஸ்கோவால் மகாபலிபுரத்தின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட சாளுவன்குப்பத்தில் இவை கண்டெடுக்கப்பட்டன. ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், சோழ மன்னர்கள் முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் (தற்போதைய சாளுவன்குப்பம்) என்ற இடத்தில் அமைந்த முருகன் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டன. இந்திய தொல்லியல் ஆய்வகத்தைச் சேர்ந்த கல்வெட்டியலாளர் எஸ். ராஜவேலு, அருகில் காணப்பட்ட மேட்டினை அம்முருகன் கோவிலாக அடையாளம் கண்டார். 2005 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் அம்மேட்டின் அடியிலிருந்து 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ காலத்திய கருங்கல் அமைப்பான கோவிலை அகழ்ந்தெடுத்தனர். இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் உதவி தொல்லியல் ஆய்வாளர் ஜி. திருமூர்த்தி, தமிழ் நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பழமையான முருகன் கோவிலாக இதைக் கருதுகிறார். மகாபலிபுரத்தின் ஏழு பகோடாக்களில் ஒன்றாக இந்த இடம் இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.

செங்கல் அடித்தளத்தின் மீது அமைந்துள்ள கல்லால் ஆன வேல்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வால் இந்தப் பல்லவ கால கருங்கல் கட்டுமானம் அதற்கும் பழமையான செங்கல் கட்டுமானத்தின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. திருமூர்த்தியின் கருத்தின்படி செங்கலால் ஆன பழைய கருவறை மண்ணால் நிரப்பப்பட்டு, கருங்கல் பலகைகளால் மூடப்பட்ட பின்னர் அதன் மேல் புதுக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தற்காலக் கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருப்பது போலல்லாது, செங்கலால் ஆன பழைய கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால் அது சங்ககாலத்தைச் சேர்ந்ததாக இருக்குமெனக் கருத்துத் தெரிவிக்கிறார். கோவில்கள் அமைக்கப்பட வேண்டிய ஆகமநெறிகளை விளக்கும் "சிற்ப சாஸ்திரங்கள்" எழுதப்படுவதற்கு முன்னமேயே கட்டப்பட்டதாக, அதாவது கிபி 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இப்பழைய செங்கல் கோவில் இருக்க வேண்டும். செங்கல் கோவில் 1700 ஆண்டுகள் முதல் 2200 ஆண்டுகள் வரையிலான பழமையானது.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புயல் அல்லது ஆழிப் பேரலைகளால் இந்தச் செங்கல் கோவில் அழிந்து போயிருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் கருத்து. அதேபோலப் பின்னர் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டக் கருங்கல் கோவிலும் ஆழிப் பேரலைகளால் அழிந்து போயிருக்க வேண்டும். இக்கோவிலைப் பற்றிய குறிப்புகளைத் தரும் கல்வெட்டுகள் 1215 ஆம் ஆண்டினதாக இருப்பதால் கருங்கல் கோவிலை அழித்த ஆழிப்பேரலைகளின் காலம் 13 ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

வரலாற்றுப் பின்னணி

7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரம் நகரை நிர்மாணித்தபோது அங்கு ஒரு சிறு துறைமுகம் செயல்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிறித்துவ யுகத்தின் தொடக்ககாலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பெருங்கல் புதை பாத்திரங்கள் மகாபலிபுரத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்ககால நூலான பெரும்பாணாற்றுப்படை நீர்ப்பெய்யாறு என்றதொரு துறைமுகத்தைப் பற்றிக் கூறுகிறது. சில வரலாற்று அறிஞர்கள் இத்துறைமுகத்தைத் தற்போதைய மகாபலிபுரமாகக் கருதுகின்றனர். மகாபலிபுரத்துக்கு அருகிலுள்ள சதுரங்கப் பட்டினம் செங்கடல் செலவில் குறிப்பிடப்பட்டுள்ள சொப்டமா துறைமுகமாக அடையாளம் காணப்படுகிறது.

கல்வெட்டுகள்

இக்கோயில் அகழப்படும் முன் இதைச்சுற்றி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளான கன்னரத்தேவர் 26ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இரண்டு, இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் 12ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கம்பவர்ம பல்லவனின் 17ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இரண்டு, முதலாம் இராசராசச் சோழன் கல்வெட்டு மற்றும் சில பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு ஆகியவற்றில் திருவிழச்சு என்னும் ஊரிலுள்ள முருகன் கோவிலுக்குச் சிலர் தானம் அளித்ததாக உள்ளது. அதைக் கொண்டே அக்கோவிலை தேட இப்பகுதிகளில் அகழாய்வு செய்யப்பட்டு இக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இம்முருகன் கோவிலைச் சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுப் பாறைகள் காணப்படுகின்றன. இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட மான்யங்களைப் பற்றிக்கூறும் மூன்று கருங்கல் தூண்களின் கண்டுபிடிப்பே கோவிலைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. ஒரு தூண், 858 இல் கீரர்பிரியன் என்பவரால் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட 10 பொற்கழஞ்சுகளைக் குறிப்பிடுகிறது. மற்றொரு தூண், 813 இல் கோவிலின் தீபத்தின் பராமரிப்புச் செலவிற்காக வசந்தனார் என்ற பிராமணப் பெண்ணால் அளிக்கப்பட்ட 16 கழஞ்சுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[6] மூன்றாவது தூண் முதலாம் ராஜராஜ சோழனால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.

இம்மூன்று தூண்களைத் தவிர மேலும் ஐந்து தூண்கள் கீழ்க்காணும் அரசர்களால் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன.

கட்டடக் கலை

சாளுவண்குப்பம் முருகன் கோவில் கருவறை. மேற்புறத்தில் உள்ள மெல்லிய செங்கல் பலகைகள் பல்லவர்களால் செய்விக்கப்பட்டவை. அதற்கும் அடியிலுள்ள பெரிய செங்கற்கள் சங்க காலத்தியவை.
சைவ சமயக் கடவுள் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டக் கோவில் இது. இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் கருவறை 2 மீட்டர் நீளமும் 2.2 மீட்டர் அகலமும் கொண்டு 27 செங்கல் அடுக்குகளாக அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் புகார், உறையூர், மாங்குடி மற்றும் அரிக்கமேடு ஆகிய சங்க கால இடங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்களைப் போன்றே உள்ளன. கோவிலின் நுழைவாயிலின் முன் கல்லால் ஆன வேல் ஒன்று உள்ளது. அகழ்வாய்வில் முதலாம் நூற்றாண்டு காலத்துக்குரிய நடன வகையாக சிலப்பதிகாரம் கூறும் குரவைக் கூத்தினைச் சித்தரிக்கும் சான்றும் கிடைத்துள்ளது. சதுரக் கருவறை மிகவும் சிறியதாக உள்ளமையால் அதனுள் எந்தவொரு கடவுளுருவமும் இருந்திருக்க முடியாது என்பது சத்தியமூர்த்தியின் கருத்து. சங்க காலத்தில் கோவிலைச் சுற்றியொரு பிரகாரமோ அல்லது சுற்றுச் சுவரோ இருந்திருக்க வேண்டும். பல்லவ காலத்துக்கும் முந்தைய காலத்தின் மிகப்பெரிய செங்கல் கோவில் வளாகமாக இக்கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது திருமூர்த்தியின் கருத்து.

வண்டல் மண் நிரம்பிய ஒரு மேடான அடிப்பரப்பின் மீது மனிதனால் செய்யப்பட்ட செங்கற்களை அடுக்கி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. செம்புரைக் கற்களால் (laterite) ஆன நான்கு அடுக்குகளால் பிரிக்கப்பட்ட நான்கு செங்கல் அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் இரண்டு வகையாய் உள்ளன.

சங்க கால பெரிய செங்கற்கள்
அதற்கும் பிற்கால மெல்லிய செங்கல் பலகைகள்
சுண்ணாம்பைக் கொண்டு செங்கற்கள் ஒன்றுக்கொன்று இணைத்துப் பூசப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்

சாளுவன்குப்ப முருகன் கோவில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டச் சில்லுகள் மற்றும் கருங்கல் பலகைகள். சில மட்பாண்டச் சில்லுகள் சங்க காலத்தைச் சேர்ந்தவை.
இப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய தொல்பொருட்கள்:

ஓர் பெண்ணின் மண்டையோடு
சுடுமண் விளக்குகள்
பச்சைக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கம்
மட்பாண்டங்களின் சில்லுகள்
சிவனுக்குரிய நந்தியின் சுடுமண் சிலை
இங்கு கிடைத்த சுடுமண் பொருட்களில் முதலாவதாகக் கிடைத்தது நந்தியின் சிலை. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அகழ்ந்தெடுக்கப்பட்டப் பெரும்பாலான பொருட்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் சோழர் காலத்து செப்பு நாணயம் உட்பட வேறுபல பிந்தைய காலப் பொருட்களும் கிடைத்துள்ளன.

உறுதிப்படுத்தல்
தொகு
இதைச் சங்ககாலக் கோவில் என்று இதைக் கட்டப்பட்ட செங்கற்கள்களின் அமைப்பு மற்றும் அளவுகளைக் கொண்டே உறுதிப்படுத்தினர். கிபி ஆறாம் நூற்றாண்டில் கடற்கோளால் அழிவுற்ற இக்கோவில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கற்றளிகள் மூலம் புணரமைக்கப்பட்டது. மீண்டும் இயற்கைச் சீற்றங்களால் புதைந்து 2004ல் சு. இராசவேலு என்றவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...