Saturday, February 3, 2024

புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார் புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார் புராணம்.

63 நாயன்மார்களில் ஒருவரான, சிவனடியார்களுக்கு மண்ணில் திருவோடு செய்து சிவத்தொண்டாக செய்து,இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத், தன் வாழ்வின் இளமை மகிழ்ச்சியைத் தியாகம் செய்த குயவரான
#திருநீலகண்ட_நாயனார்
குருபூஜை இன்று:
முக்தி நாள் (#தை_விசாகம்)
திருநீலகண்ட நாயனார், இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத், தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்தவர். அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரின் வாழ்க்கைக் கதையை இப்போது பார்ப்போம்.
புகழ்பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார் என்பவர் ஒருவர். அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்துள்ளனர். இவர் குயவர் குலத்தில் அவதரித்து, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர். சிவபெருமானின் அதிதீவிர பக்தரான இவர், தில்லை நடராஜரைத் தினமும் வழிபட்டு, சிவனடியார்களுக்கு இலவசமாகத் மண்ணில் ஆன திருவோடு செய்துகொடுத்தும், திருவோடுகளில் அமுது படைத்தும் தொண்டு செய்வதையே வழக்கமாகக்
கொண்டிருந்தார். சிவபெருமானை திருநீலகண்டம் என்று எந்நேரமும் நெஞ்சம் உருகப் போற்றி வந்த காரணத்தால் இவரை திருநீலகண்டர் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்து வரலாயினர். இறைவனின் பெயர் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் சந்தோஷத்தைத் தியாகம் செய்தவர்.
திருத்தொண்டத் தொகையில் "திருநீலகண்டத்துக்குயவனார்க்கும் அடியேன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகிறார்.

அவர் எப்போதும் சிவனின் நீலநிறத் தொண்டையை நினைத்து ‘திருநீலகண்டம் திருநீலகண்டம்’ என்று உருகிக் கூறியபடியே இருப்பார். இதனால் அவரை எல்லோரும் திருநீலகண்டர் என்றே அழைத்தனர்.

#திருநீலகண்டக்குயவனார்:

தில்லை என்றழைக்கக்கூடிய நடராஜர் திருநடனம் புரியும்
பூலோகக் கையிலாயமான சிதம்பரத்தில், குயவர் குலத்திலே திரு அவதாரம் செய்தவர் திருநீலகண்ட நாயனார். பொன்னம்பலத்து ஆடுகின்ற அம்பலக் கூத்தரிடம் சிறுவயது முதலே சிவபக்தியில் திளைத்து வந்த இவர் தம் குடும்ப தொழிலான குயவர் பணியில் ஈடுபட்டு மண் பாண்டங்கள் செய்து விற்பனை செய்து வந்தார். அதுபோலவே, சிவனடியார்களிடம் எல்லையில்லா அன்பும், பக்தியும் உடையவர். இவர் தனது வருமானத்தில் ஒரு பகுதியை சிவனடியார்களுக்கு உதவி செய்தலையும், மற்றும் சிவனடியார்களுக்கு தான் செய்த மண்ணாலான திருவோடுகளில் சிறந்தவனவற்றை இலவசமாக செய்து கொடுத்தும், திருவோடுகளில் அமுது படைப்பதையும் வழக்கமாகக்
கொண்டிருந்தார்.
சிவனடியார்களுக்கு திருவோடுகள் கொடுக்கும்போது திருநீலகண்டம் எனச் சொல்லிக் கொடுப்பது இவரது வழக்கம். (ஆலகால விஷத்தை அருந்தி அவ்விஷத்தை தமது கண்டத்தில் நிறுத்தி உலகத்தை காத்த காரணத்தால் சிவபெருமானது கண்டம் (கழுத்து) நீல நிறமானது அதைக் குறிக்கும் வண்ணம் அடியார் திருநீலகண்டம் என்று ஈஸ்வரனை அழைப்பார்) இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயவனார் என்ற காரணப் பெயரிட்டு யாவரும் அழைத்தனர்.

“#திருநீலகண்டத்தின் மீது ஆணை”:

திருநீலகண்ட நாயனார் திருமண வயதை அடைந்ததும் திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது. அவரது குணநலனுக்கு ஏற்றபடி நல்ல மனைவி அமைந்தாள். திருநீலகண்டரின் மனைவியும் சிவனிடத்தும், அடியவர்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கணவனும், மனைவியும் அடியவர்களுக்கு தொண்டு செய்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.
இருவரும் சீரும், சிறப்புமான வாழ்ந்து வரும் காலத்தில், ஒருநாள் முற்பிறவி பாவத்தின் பயனாக, அவ்வூரில் வசித்த நடன மங்கையிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது, இந்த செய்தி அவர் மனைவிக்கு தெரிந்தவுடன், வருத்தமுற்று அவருடன் கருத்து மாறுபட்டு வாழத்தொடங்கினார். திருநீலகண்ட நாயனாரிடம் பேசுவதை நிறுத்தினார். எனினும் இல்லாளின் பணிகளைச் செய்து வந்தார். திருநீலகண்டரைத் தீண்டுவதைத் தவிர்த்தார்.
ஒருநாள் திருநீலகண்டர் தன்னுடைய மனைவியைத் தொட‌ முற்பட்டபோது “நீங்கள் என்னைத் தொட்டால் உயிரோடு இருக்க மாட்டேன். திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று அவர் மனைவி கூறினார். திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், இனி மனைவியை மட்டுமல்லாமல் எப்பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று திருநீலகண்ட நாயனார் சபதம் ஏற்றார். அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தாம் கொண்ட விரதம் பிறர் அறியா வண்ணம் வாழ்ந்து வந்தனர். இப்படியே வாழ்ந்து தம்பதியர் இருவரும் முதுமைப் பருவம் எய்தினர். முதுமைப்பருவம் அடைந்தும் சிவபெருமான் மீது கொண்ட பக்தி மட்டும் குறையாமல் பெருகி கொண்டே வந்தது.

#சிவபெருமானின் திருவிளையாடல்:

திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியும் கொண்ட மனஉறுதியினை உலகுக்கு எடுத்துக்காட்டி, அவர்களுக்கு அருள் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
சிவபெருமான் வயது முதிர்ந்த சிவனடியாராக வேடம் பூண்டு, திருநீலகண்ட நாயனாரின் வீட்டிற்கு வந்தார். திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியும் சிவனடியாரை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
சிவனடியார் திருநீலகண்ட நாயனாரிடன் திருவோடு ஒன்றினை கொடுத்து “இந்த ஒடு மிகவும் புனிதமானது. இதற்கு ஈடுஇணை ஏதும் இவ்வுலகத்தில் இல்லை.” நான் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் இந்த ஓட்டை பத்திரமாக தாங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். நான் திரும்பி வரும்போது உங்களிடம் பெற்றுக்கொள்கிறேன் என்றார். திருநீலகண்ட நாயனாரும் அதனைத் தன்னுடைய பாக்கியம் என்று கூறி பெற்றுக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.
சிறிது காலத்திற்குப்பின் சிவனடியார் வந்து திருவோட்டை கேட்டவுடன் திருநீலகண்ட நாயனார் திருவோட்டை தான் வைத்த இடத்தில் தேடினார். திருவோடு வைத்த இடத்தில் இல்லாததால் குழம்பினார். மனைவியாரிடமும் விசாரித்தார், வீட்டின் எல்லா இடத்திலும் தேடியும் திருவோடு கிடைக்கவில்லை. சிவனருளால் ஏற்கனவே அது மறைந்திருந்தது. வீடு முழுவதும் தேடி சிவனடியாரிடம் நீங்கள் கொடுத்த திருவோட்டைக் காணவில்லை அதற்கு மாறாக வேறு திருவோடு தருகிறேன் ஏன்றார். “என் திருவோட்டிற்கு மாற்றாக நீ எதையும் எனக்கு தர வேண்டாம். என்னுடைய திருவோட்டின் பெருமைகளை அறிந்து கொண்டதால், நீ அதனை உன் வசம் வைத்துக் கொள்ளப் பார்க்கிறாய், என்னுடைய திருவோட்டை கொடுத்தால் கொடு இல்லை யென்றால் திருவோட்டை உண்மையில் காணவில்லையென்றால், நான் கூறுவது உண்மை என உன் மகன் மேல் சத்தியம் செய்” என்றார் சிவனடியார்.

ஐயா தாங்கள் சொல்லியவாறு உறுதி செய்ய எனக்கு புத்திரப் பாக்யமில்லை என்றார். அப்படியானால் உன் மனைவியின் கையைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார். “அடியவரே எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சபதத்தால் என் மனைவியை தீண்டி உடன் மூழ்க முடியாது. நான் வேண்டுமானால் தனியே மூழ்கி உறுதி செய்கிறேன்” என்றார். “நீ வேண்டுமென்றே ஓட்டை ஒளித்து வைத்துவிட்டு சத்தியம் செய்ய மறுக்கிறாய். இந்த அக்கிரமத்தை தில்லைவாழ் அந்தணர்களுடைய தரும சபையில் நான் முறையிடுவேன்" என்று கூறி திருநீலகண்ட நாயனாரையும் அழைத்துக் கொண்டு சென்று, அவையினர் முன் தான் திருவோட்டைக் கொடுத்தது, அது காணாமற் போய்விட்டது என சொல்லியதால் மகன் அல்லது மனைவி உடன் சத்தியம் செய்யச் சொன்னது அதற்கு அவர் கூறும் காரணம் ஆகியவற்றை சிவனடியார் எடுத்துரைத்தார். தில்லை வாழ் அந்தணர்களும் சிவனடியார் சொல்வது போல சத்தியம் செய்து கொடுப்பது தான் நீதி என்று கூறினர். இதனைக் கேட்டதும் கலங்கிய திருநீலகண்ட நாயனார் மனைவிக்கும் தனக்கும் பிணக்கு உள்ளதால், அவரின் கரம் பற்றி சத்தியம் செய்ய இயலாத நிலையை வெளியே கூற முடியாமல் மூழ்கித் தருகிறேன் என்று மட்டும் கூறினார். தில்லை வாழ் அந்தணர்களும் சம்மதித்தனர்.
திருநீலகண்ட நாயனார் வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு 'மூங்கில் தடியொன்றில்' ஒரு முனையைத் தாமும் மறுமுனையையும் மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அதனைக் கண்ட சிவனடியார் மனைவியின் கரம் பற்றியே குளத்தில் மூழ்க வேண்டும் நிபந்தனை விதித்தார். இந்த நிலையில் தம்முடைய விரதத்தை யாவரும் கேட்கச் சொல்வதைத்தவிர வேறு வழியில்லை எனக் கருதி , திருநீலகண்ட நாயனார் அந்த வரலாற்றை ஆதிமுதல் கூறிவிட்டுக் குளத்தில் மூழ்கினார். இருவரும் குளத்தை விட்டு எழும்போது, சிவனருளால் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதத்தைக் கண்ட தில்லை அந்தணர்கள் அதிசயத்தில் உறைந்தனர், அருகில் இருந்த சிவனடியாரைத் தேடிய‌ போது அவரைக் காணவில்லை. அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் இடபாரூடராய் காட்சியளித்து, “புலனை வென்றோர்களே, இளமைப் பொலிவுடன் எம்மை நீங்காதிருப்பீர்களாக” என்று வாழ்த்தினார். அவர்களை திருநீலகண்டநாயனாரும் அவரது மனைவியாரும் பூமியிலே விழுந்து நமஸ்கரித்தனர். பின்பு, திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும், பலகாலம் இந்தபூமியில் சிவத்தொண்டு புரிந்து, இறுதியில் சிவனடியைச் சேர்ந்தனர்.

#குருபூஜை நாள்:

சிவபெருமானின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் சந்தோஷத்தைத் தியாகம் செய்த, திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை தை மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று
அவர் அவதாரம் செய்த ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன கடலூர் மாவட்டம், திருப்புலீஸ்வரம் அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோயிலில்(இக்கோயில் நடராஜர் கோயிலுக்கு மேற்கு திசையில் ஐந்து நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ளது)
மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குருபூஜை நாள் அன்று திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் சிவனடியார் வடிவில் நீலகண்டருக்கு திருவோடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் சிறப்பாக நடக்கும். இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இளமை தீர்த்தம் உள்ளது. இக்கோயில் பிரகாரத்தில் மனைவியுடன் திருநீலகண்டர் உருவசிலை அமைந்துள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...