சனி - சனீஸ்வரர் ஆன கதை! சிவனையே பிடித்த சனி...!
சிவன் சனிக்கு பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சனி திசையில் பிடிக்க இட்ட கட்டளையை நிறைவேற்றும் காலம் வந்தது.
சிவனின் ஆணைக்கு இணங்க அவர் கூறிய வழியாக அந்த குறிப்பிட்ட காலத்தில் சனி புறப்பட்டு சென்றார்.
சனி தேவலோகத்தை நோக்கி போனார். இதை கண்ட தேவர்கள் அனைவரும், அய்யய்யோ! சனி அல்லவா நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.
இன்று நம் கூட்டத்தில் யாரோ ஒருவர் கதை முடிந்தது என்று பதறியபடி கிடைத்த மறைவிடங்களில் பதுங்க ஆரம்பித்தனர்.
சிலர் தேவலோகத்தை காலி செய்து பல வேடங்களில் பூலோ கம், பாதாள லோகம் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஆனால் சனியோ தேவலோகத்தை கடந்து சென்று கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் அனைவரும் மன நிம்மதி அடைந்து, அப்பாடா! தப்பித்தோம்டா சாமி! என்று பெருமூச்சு விட்டனர்.
பின்னர், சரி சனி எங்குதான் செல்கிறார் என்று தேவர்களுக்கு எண்ணம் தோன்றியது.
அதனை பார்க்கும் ஆவலில் சனியை அனைவரும் பின் தொடர்ந்தனர். அப்போது நேராக கயிலாயத்தை அடைந்தார் சனி.
அங்கு அமர்ந்திருந்த சிவபெருமானை பிடிக்க முயன்றார். அதனை கண்டதும் சிவபெருமான் ஓட தொடங்கினார்.
தேவர்கள் அனைவரும் உடல் நடுங்கிப் போனார்கள். அனைவரது புருவமும் மேல் நோக்கி வில்லாக வளைந்தது.
இங்கு என்ன நடக்கிறது. சிவன் ஓடுகிறார், சனி அவரை துரத்திக் கொண்டு செல்கிறார். சனியிடம் இருந்து சிவன் தப்பிக்க, விஷ்ணுவும் சனி பார்வை படாத இடம் காண்பித்து உதவி புரிகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சனி பகவான் சிவ பெருமானை பிடித்து விட்டார்.
தேவர்களுக்கு மூர்ச்சையே ஏற்பட்டு விடும் போல் ஆகி விட்டது. ஏற்கனவே சனியின் பலம் அனைவரும் அறிந்ததுதான்.
இப்போது சிவனையே பிடித்து விட்டார். இனி சனியிடம் வைத்துக் கொண்டால் அவ்வளவுதான் என்று சனியிடம் தேவர்கள் அனைவரும் சரணாகதி அடைந்தனர்.
மேலும் சிவபெருமானை, சனி பிடித்த செய்தி அனைத்து லோகத்திற்கும் சென்று சேர்ந்தது. அதே சமயம், உன் கடமை தவறாமல், என்னையே பிடித்தமையால் உன் பொறுப்பை பாராட்டி என் பெயரையே உனக்கு பட்டமாக தருகிறேன்.
இனி நீ எல்லோராலும் சனி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுவாய் என்று சனியை வாழ்த்தி மறைந்தார் சிவபெருமான்.
இதே மாதிரி வேறு ஒரு கதையும் உண்டு. கைலாயம் சென்றார் சனி பகவான். சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.
'பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.'
'எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா விளையாடுகிறாயா? கிரகங்களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.
''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.
ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது.
அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.
ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.
சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.
''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.
'சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment