Tuesday, March 12, 2024

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் சுவாமி ஆலயதரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி வட்டம்
கொள்ளிடம் இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 10 கிமீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரி வடகரை தலங்களில் 6 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  276 தலங்களில் 6 வது தலமாவும் உள்ளது திருமேனியழகர் ஆலயம்.

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரது உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

 இத்தலத்து ஆலயம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளை உடைய சிறிய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோவில் எதிரே மயேந்திர தீர்த்தம் உள்ளது. இராஜகோபுரம் வழியே உள்ளே சென்று வெளிப் பிரகாரம் வலம் வந்தால் விநாயகர், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால், சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். பிரகார வலம் முடித்து அடுத்துள்ள வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. 

மேலும் உள்ளே சென்றால் வலதுபுறம் நடராசசபையில் நடராஜருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் உடன் காட்சியளிக்கின்றனர். நேரே சிவலிங்கத் திருமேனியாக மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஆலயத்தில் நவக்கிரக சன்னதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளன

இத்தல இறைவனை சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோர் வழிபட்டுள்ளனர். இதை சம்பந்தரின் பதிகத்திலுள்ள 6-வது பாடலிலுள்ள "சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும் இந்திரன் வழிபட" என்னும் பதிக அடிகள் புலப்படுத்தும். ஆலயத்தின் தீர்த்தம் இந்திர திர்த்தம் என்கிற மகேந்திர தீர்த்தம். இது கோபுர வாயிலுக்கு எதிரே வெளியே உள்ளது. இந்த தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி இறைவனை வழிபடுவேர் தீராத நோயும் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். தலமரம் வில்வம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஓரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலனாக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நீன்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
சிவாலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை அனைவரும் பெருக.
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...