Wednesday, March 27, 2024

பாண்டியநாட்டு_தேவாரப்_பாடல் பெற்ற திருத்தலமான திருப்பூவணம் (திருப்புவனம்)பூவணநாதசுவாமி :



#பாண்டியநாட்டு_தேவாரப்_பாடல் பெற்ற திருத்தலமான #திருப்பூவணம் (திருப்புவனம்)
#பூவணநாதசுவாமி :
பொன்னனையாள் என்ற பக்தைக்காக இறைவர் சித்தராக வந்து இரசவாதம் செய்து(64-திருவிளையாடல்_ஒன்று)  #இரசவாதம்_செய்த_படலம் 

திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.

அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.

இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.

அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்.

பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்,

கிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ! அழகிய பிரனோ இவன்!! என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

*தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 
#திருப்புவனம் (திருப்பூவணம்)
#பூவணநாதசுவாமி 
(புஷ்பவனேஸ்வரர் )
#செளந்தர_நாயகி (அழகிய நாயகி) திருக்கோயில் வரலாறு:

புஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். 
இங்கு அழகியநாயகி உடனுறை பூவணர் கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் புஷ்பவனேஸ்வரர் எனவும் இறைவியை சௌந்தரநாயகி எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.

 278 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் பெற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

*மூலவர் :புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்

*அம்மன் : சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

*தல விருட்சம்: பலா

*தீர்த்தம் :வைகை, மணிறகர்ணிகை
*ஆகமம்/பூஜை  :இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது
*புராண
பெயர்: திருப்பூவணம் 
*ஊர் : திருப்புவனம்
*மாவட்டம் : சிவகங்கை

*வழிபட்டோர்:

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

#திருஞானசம்பந்தர் பாடிய திருப்பூவணம் தேவாரப் பாடல்:

"அறையார்புனலு மாமலரும் 
  ஆடர வார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் 
  கூறுடை யானிடமாம்
முறையால்1 முடிசேர் தென்னர்சேரர் 
  சோழர்கள் தாம்வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் 
  தென்திருப் பூவணமே.

மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே-இத்தலத்தை மிதிக்க அஞ்சி-வணங்க, இறைவன்அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார். இதனால் நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.

திருப்புவனம் என்பது உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம். எலும்பு பூவாக மாறிய தலம், காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்.

*மதுரையின் கிழக்கு வாயில்:

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள மதுரை செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய திருப்பூவணத்தை வந்து அடைந்தார்.பிற்கால பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.. பின்னர் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கரால் அர்த்த மண்டபம் மகாமண்டபம் இராஜ கோபுரம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

*பார்வதி தேவியார் தவம் செய்த இடம்:

வைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.

*திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்:

எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தென்திருப்பூவணமேஎன்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.

இவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர்.

இது "36ஆவது திருவிளையாடல்" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம் என்ற பெருமை உடையது இத் திருத்தலம்.

*கோவில் அமைப்பு: 

ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.

திருவிழா: 

வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

எப்படிப் போவது  :   

மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...