Saturday, March 30, 2024

தஞ்சாவூர் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)இராஜ_குருபகவான் திருக்கோயில் வரலாறு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, 
வசிஷ்ட மகரிஷி குருபகவானை ராஜ குருவாக வழிபட்ட தலமான, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, பிரளய காலத்தில் அழியாமல் திட்டாக தோன்றிய இடமான குரு பரிகார தலமான 
திட்டை என்னும் 
#தென்குடித்திட்டை 
#வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)
#உலகநாயகியம்மை (சுகுந்த குந்தளாம்பிகை)
#இராஜ_குருபகவான் திருக்கோயில் வரலாறு:
நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குரு என்று போற்றப்படும் பிரகஸ்பதி, தன் பக்தியாலும் கடும் தவத்தாலும் நவக்கிரகத்தில் ஒரு கிரகமாகவும் சுபக்கிரகமாகவும் வரத்தைப் பெற்றார். அவருக்கு சிவனார் அளித்த வரம் இது என்று போற்றுகின்றன புராணங்கள்.

ஒருவரின் வாழ்க்கையில், குருவின் கடாட்சம் மிக மிக அவசியம். குருவின் பார்வை இருந்தால்தான் வாழ்வில் அடுத்தடுத்த முன்னேற்றம் கிடைக்கும். பார்வதிதேவி, சிவனாரைத் திருமணம் புரிந்துகொள்ள விரும்பினார். ஆனால், நினைத்த மாத்திரத்தில் அது ஈடேறவில்லை. குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்பதை உணர்ந்த உமையவள், குருவை நோக்கி தவமிருந்தாள்; குருவின் அருளைப் பெற்றாள். பிறகு சிவபெருமானை கரம்பற்றினாள் என விவரிக்கிறது சிவபுராணம்.

ஆலங்குடி, திருச்செந்தூர், பட்டம ங்கலம், தக்கோலம், திருவலிதாயம், இலம்பையங்கோட்டூர், கோவிந்தவாடி அகரம், முன்னூர் போன்ற சிறந்த குரு பரிகாரத் தலங்களின் வரிசையில் குரு பகவான் ராஜ குருவாக அருள்பாலிக்கும் தென் குடித்திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருத்தலமும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு பரிகாரத் தலமாகும்.

தஞ்சாவூருக்கு அருகில் திட்டை எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். திட்டை திருத்தலத்தில் தான், உமையவள் குருவின் பேரருளைப் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் முதலான ரிஷிகளும் முனிவர்களும் தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம் இது.

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை.

இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறுப் பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்கலால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

ராஜகுரு என்று போற்றப்படும் குரு பகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்ட தலம் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திட்டை. தென்குடித் திட்டை என்றும் சொல்லுவார்கள்.

திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய திருத்தலம் இது. காமதேனுப் பசு வழிபட்டு வரங்களைப் பெற்ற திருத்தலம் என்றும் ஜமதக்னி முனிவர் முதலானோர் தவமிருந்து பலன் பெற்றனர் என்றும் இந்தத் தலத்தைப் போற்றி சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.

*மூலவர்: வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)

*அம்மன்: சுகுந்த குந்தளாம்பிகை (உலகநாயகியம்மை)

*தல விருட்சம்: முல்லை,வெண் செண்பகம்,செவ்வந்தி 

*தீர்த்தம்:   பசு தீர்த்தம்,சூல தீர்த்தம் (இதற்கு சக்கர தீர்த்தம் என்ற பெயரும் உண்டு)

*புராண பெயர்: திருத்தென்குடித்திட்டை 

*ஊர்: தென்குடித்திட்டை 

*மாவட்டம்: தஞ்சாவூர் 

*பாடியவர்கள்: அப்பர் சுவாமிகள் மற்றும் திருஞானசம்பந்தர் 

*திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்:

"முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே..

ஞானசம்பந்தர் தேவாரம்!

ரிக்,யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஈசனிடம் சென்று தங்களது குறைகளைக் கூறி கலங்கி நின்றன. இந்த வேதங்கள் ஈசனது திருவடிகளைப் பணிந்து வணங்கிய திருத்தலமே தென்குடித்திட்டை என்று தமது தேவாரப் பாடல் மூலம் பாமாலை சூட்டி நெகிழ்ந்துள்ளார் ஞானசம்பந்தப் பெருமான்.

“முன்னைநான் மறையவை முறை முறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.”

பொருள்:-

“நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.”

ஈசனின் திருநாமங்கள்.

காவிரி நதி தீரத்தில் அமைந்த இத்தலத்தில் ராமபிரானின் குல குருவான வசிஷ்ட மகரிஷி குடில் அமைத்து இத்தல ஈசனைக் குறித்து தவம் இயற்றி வழிபாடுகள் செய்துள்ளார். இதனால் இத்தல இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. ஈசன் தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பதால் “ஸ்ரீ சுயம்பூதேஸ்வரர்” என்றும் தேவலோகப் பசுவான காமதேனு வழிபட்டதால் “பசுபதீஸ்வரர்” என்றும் இத்தல இறைவன் வணங்கப்படுகின்றார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரத புரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற திருநாமங்களும் திட்டை ஈசனுக்கு வழங்கப்படுகின்றன.

இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, முருகன், நான்கு வேதங்கள், பைரவர், சூரியன், சனீஸ்வர பகவான், எமன், பரசுராமர், இந்திரன், ஆதிசேஷன், காமதேனு, வசிஷ்ட மகரிஷி, கௌதம மகரிஷி மற்றும் ஜமதக்னி மகரிஷி ஆகியோர் ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.சோழ மன்னன் விஜயன் என்பவன் இந்திரனைப் போன்ற உயர் நிலையினை அடைய அஸ்வமேத யாகத்தைப் போல நூறு மடங்கு பலன் கொண்ட ருத்ர பாசுபத யாகத்தை இத்தலத்தில் செய்துள்ளான்.

*ஈசனின் திருமேனி மீது நீர் சொட்டும் அற்புதம்!

திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்தில் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருக்கும் லிங்கத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது தட்சனின் நட்சத்திரப் பெண்களை மணந்த சந்திரன், தினம் ஒரு கலையாகத் தேய்ந்து அழியும் சாபத்தினை தட்சனிடம் பெற்றான். தன் குறை தீர்க்க திங்களூர் சென்று கயிலாய நாதரை வணங் கிய சந்திரனுக்கு பாப நிவர்த்தி ஏற்பட்டது. ஈசனும் முற்றாமதியைத் தன் தலையில் சூடி பிறை சூடிய பெருமான் ஆனார்.

திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்குத் திட்டையிலும் தன் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றார் சந்திரன். தான் பெற்ற சாப விமோசனத் திற்கு நன்றிக்கடனாக திட்டை ஈசனின் கருவறை மீது சந்திரகாந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றார் சந்திரன். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். இன்றும் ஒரு நாழிகைக்கு ஒரு முறை ஈசனின் திருமேனி மீது நீர் சொட்டும் அற்புதத்தை இத்தலத்தில் காணலாம். உலகின் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அதிசயம் இது.

*ஸ்ரீ மங்களாம்பிகை:

கோயிலின் முன் வலது புறம் தென் திசை நோக்கி அகிலமெல்லாம் அருளாட்சி செய்யும் உலகநாயகி அம்பிகை திருச்சந்நிதி அமைந்துள்ளது.

மகாபிரளய காலத்தில் இப்பூவுலகை காத்தருள ஈசனுடன் அம்பிகை இத்தலத்தில் தோன்றியதால் உலகநாயகி என்ற திருநாமத்துடனும், சகல மங்கலங்களையும் அருள்வதால் மங்களாம்பிகை மற்றும் மங்களேஸ்வரி என்ற திருநாமங்களுடன் அம்பிகை வணங்கப்படுகின்றார். “சுகந்த குந்தளாம்பிகை” என்ற திருநாமமும் அம்பிகைக்கு வழங்கப்படுகின்றது.

இந்த அம்பிகையின் அருள்திறன் குறித்த நிகழ்ச்சி ஒன்று இத்தல மக்களிடையே கூறப்படுகின்றது.

கும்பகோணத்தில் சோமநாதன் என்ற சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவரது இல்லத்திற்கு வந்த ஜோதிடர் ஒருவர் தங்களது மகள் இளம் வயதில் விதவையாகி விடுவாள் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட சோமநாதன் மிகவும் மனம் வருந்தினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு திட்டையில் உள்ள ஒருவருக்கும் சோமநாதன் மகளான மங்களாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வாழ வந்த நாள் முதல் திட்டை ஈசன் மற்றும் அம்பிகையை அனுதினமும் வழிபட்டு வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார் மங்களா. தனது மாங்கல்ய பலம் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே மங்களாவின் ஒரே பிரார்த்தனை.

ஒரு பௌர்ணமி நாளில் மங்களாவின் கணவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. கோயிலுக்குச் சென்ற மங்களா ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டுத் தன் கணவனைக் காத்தருள வேண்டும் எனக் கண்ணீர் மல்கி வேண்டி நின்றாா். மங்களாவின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய அம்பிகை, அவளது முன் தோன்றி பிரசாதத்தை வழங்கி “இதனைக் காலன் வரும்போது அவன் வரும் திசையை நோக்கி எறி! உன் கணவன் காப்பாற்றப்படுவார்; நீயும் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்,” எனக்கூறி மறைந்தார். அம்பிகையின் ஆணைப்படி செய்தாள் மங்களா. காலன் திரும்பி ஓட நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள் மங்களா.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்தலத்தில் அம்பிகை ஈசனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அருட்காட்சி தருகின்றார். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்ற கருத்திற்கு ஏற்ப மாதொரு பாகனுக்கு நிகராக திருக்கோலம் கொண்டுள்ளார் அம்பிகை.அம்பிகை சந்நிதியின் மேல் விதானத்தில் 12 ராசிகளுக்கான கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்களது ராசிக் கட்டத்திற்கு நேராகக் கீழே நின்று அம்பிகையை வணங்கிட சகல தோஷங்களும் நீங்கப் பெறுகின்றது என்பது ஐதீகம்.

*மஹா விஷ்ணு உருவாக்கிய புனித தீர்த்தம்.

ஸ்ரீ மஹா விஷ்ணு அறிதுயிலில் ஆழ்ந்திருந்த போது “மது, கைடபர்” என்ற இரு அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். தேவர்கள் எம்பெரு மானான ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உறங்குவது போல் யோகு செய்த பெருமான் கண் விழித்து அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தார். அப்போது இளைப்பாற தன் சக்ராயுதத்தால் ஒரு புனித தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடி ஈசனை வழிபட்டு அசுரர்களை அழித்தார் ஸ்ரீமஹாவிஷ்ணு. ஸ்ரீ மஹா விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் “சக்கர தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் புனித தீர்த்தத்தோடு “பசு தீர்த்தம்” “சூல தீர்த்தம்” ஆகிய தீர்த்தங்களும் இத்தலத்தில் உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது நமது சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது என்றும் சூல தீர்த்தம் முக்தியைத் தரவல்லது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

*குரு பாா்க்க கோடி நன்மை!

மகத்தான சுபபலம் கொண்ட குரு பகவான், தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பாா்க்கும் இடங்களைத் தன் பாா்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவா். மேலும், ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களைத் தமது பாா்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவா் குருபகவான். எனவே தான் “குரு பாா்க்க கோடி நன்மை” என்ற பழமொழி ஏற்பட்டது.பிரம்ம தேவனின் புதல்வரான குரு பகவான் திட்டை தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனுக்குக் கொன்றை மலா் மாலை அணி வித்து, முல்லை மற்றும் வெள்ளெருக்கு மலரால் அா்ச்சித்து வரம் பெற்றுள்ளாா். ராஜகுருவாக அருள்பாலிக்கும் இவர் சுவாமிக்கும் அம்பிகைக்கும் இடையில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார்.

சிவபெருமானைப் போன்று குருபகவானுக்கும் காளை வாகனம் உண்டு. தன் இரு கரங்களில் ஜப மாலையும் கமண்டலமும் கொண்டு முன் வலது கரத்தில் அபய முத்திரை காட்டியும் இடது கரத்தில் யோக தண்டம் ஏந்தியும் காட்சி தருகின்றார் குரு பகவான்.குரு பகவானுக்கு இத்தலத்தில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி விழாவும், லட்சார்ச்சனையும், குரு பரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தலத்தில் ஈசனையும் அம்பிகையையும் குரு பகவானையும் ஒருசேர வழிபட்டால் கல்விச்செல்வம், பொருட்செல்வம், மழலைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

*கோயில் வரலாறு:

திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்” என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதிகாலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. இறைவன், இறைவியுடன் விரும்பிக் குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் “ஓம்” என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் “ஹம்” என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் “ஞானமேடு” எனவும் “தென்குடி திட்டை” எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் “வசிஷ்டேஸ்வரர்” எனப் பெயர் பெற்றார். அம்பாள் “உலகநாயகியம்மை.”

திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார். சூரியன், ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் இலிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்புகிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரியன் வசிஷ்டேஸ்வர் திருமேனியில் படுகிறான். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும். மூலஸ்தானத்தில், வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். பிரகாரத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து இலிங்கங்கள் உள்ளது.

குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது. பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குருபகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார். இங்கே வந்து தன்னை வேண்டுவோருவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை.
குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு குருபகவானை வழிபடுகின்றனர். குருபகவானை, வசிஷ்டர் ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

*புராணம்:

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ‘ஸ்ரீவயம்பூதேஸ்வரர்’ என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் ‘பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், திட்டை குரு பகவான் ‘ராஜகுரு’வாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர், வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

  உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

  சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

*தொன்மை:

திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

  
 இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷிண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

  
 (இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.)

*சிறப்புக்கள்:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது.
இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்நம்பிக்கை (ஐதிகம்).
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.

*திட்டைத் தல முருகன்.

திட்டை என்பது ஞானமேடு ஆகும். மனித உடலானது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகன் தன்னை வணங்குபவர்களுக்கு இந்த ஆறு ஆதாரங்களையும், அதற்கும் மேலான ஞானமாகிய மெய்யுணர்வையும் அளித்துப் பேரானந்தப் பெருவாழ்வில் நிலைபெற அருளுகின்றார். எனவே திட்டை முருகப்பெருமான் உடலால் தென்குடியாகவும், உயிரால் ஞான மேடு எனப்படும் திட்டையாகவும் அருள்பாலிக்கின்றார்.

*திருக்கோயிலின் பழைமை.

பத்தாம் நூற்றாண்டு மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. குலோத்துங்க சோழ மன்னரால் இத்தலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என இத்தலத்தின் கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகின்றது. 1922 ஆம் ஆண்டில் செட்டி நாட்டைச் சார்ந்த நகரத்தார் குடும்பத்தின் ஸ்ரீ ராமசாமி செட்டியார் அவர்களால் இத்தலம் முழுவதும் கற்றளியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இத்தலம் சிறப்பாக நிர்வாகம் செய்யப் பட்டு வருகின்றது.

*கோவில் அமைப்பு:

இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலாகவும் இது விளங்குகின்றது.

நவக்கிரகங்களில் சூரியன்-ராஜா. சந்திரன்- ராணி. செவ்வாய் கிரகம் - சேனாதிபதி. புதன் - இளவரசர். குரு பகவான் - ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணத்தடை உள்ளவர்களும் இதர கிரக தோஷங்களால் துன்பப் படுபவர்களும் இத்தலத்தில் வழிபாடுகள் செய்ய குருபகவான் அனுக்ரஹம் செய்கின்றார். சஞ்சலத்தோடு வரும் அன்பர்களின் மன இறுக்கங்களை நீக்கி மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றார் இத்தலத்தின் குரு பகவான். அவிட்ட நட்சத்திர நாட்களில் திட்டை குரு பகவானை வணங்குவது மிகவும் சிறப்பாகும்.

தென்குடித்திட்டை திருத்தலம் சென்று ஈசனையும், ராஜ குருவையும் வணங்கி குருவருளும் ஈசனின் திருவருளும் ஒருங்கே பெற அன்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இத்தலம் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12 .30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.மேலும் விபரங்களுக்கு இத்தலத்தின் அா்ச்சகா் திரு கல்யாண குருக்கள் அவா்களை
9894186885 மற்றும் திருக்கோயில் கணக்காளா் திரு மணி அவா்களை 9843965864 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

*திருத்தலம் செல்லும் வழி:

தஞ்சாவூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர் திருத்தலம். தஞ்சையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தஞ்சையிலி ருந்து திருக்கருகாவூர் செல்லும் பேருந்து வழித்தடத்தில் திட்டை உள்ளது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியிலிருந்து திட்டைக்குச் சாலை பிரிந்து செல்கின்றது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆகமங்களின் அடிப்படையில் ஐவகை நந்திகள்...

ஐவகை நந்திகள் ஐவகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர்.  ஆகமத்தில் ஒவ்வொர...