Monday, March 4, 2024

சீர்காழி சட்டநாதர் என்றால் தன்னை அண்டிவருவோரை காப்பவர்.

தென்னக ஆலயங்களில் மிக மிக பழமையான ஆலயம் சீர்காழி, காழி என்றால் மகா உறுதியானது அசைக்கமுடியாது எனும் பொருளில் வரும்
அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, சீர்காழி என சொல்லபட்டாலும் ஏகபட்ட புராண சம்பவம், சிவனும் அன்னையும் வந்து நடத்திய நாடகங்கள் என பல நடந்திருப்பதால் அந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு

பிரமன் வழிபட்டதால்  அது பிரமபுரம். மூங்கில் வடிவில் இறைவன் வந்ததால் அது வேணுபுரம்

சூரபத்மனுக்கு அஞ்சி தேவர்கள் புகலிடம் பெற்றதால் அது புகலி , குரு பகவான் ஞானம் பெற்றதால் அது வெங்குரு

பிரளய காலத்தில் சிவனும் பார்வதியும் தோணியில் வந்து காத்ததால் அது தோணிபுரம்

இரணியாக்கன் எனும் அசுரன் பூமியினை பிளந்து சென்றபோது திருமால் அவனை அழித்த இடம் அதனால் பூந்தராய்

பராசரரின் அவமானம் தீர்ந்த இடம் என்பதால் கொச்சை வயம், உரோமச முனிக்கு மும்ம்மலமு நீக்கிய இடமென்பதால் கழுமலம்

இப்படி ஏகபட்ட விஷயங்களை காணமுடியும்

இன்னும் மங்கா அடையாளமாக திருஞானசம்பந்தர்க்கு அன்னை ஞானப்பால் கொடுத்து சைவம் காக்க வழிசெய்த இடம் இதுதான்

கணநாத நாயனார் வாழ்ந்த இடம் இதுதான்

இங்கிருகும் சட்டநாதரின் அடையாளமாக சட்டமுனி வாழ்ந்த இடமும் இதுதான்

சட்டநாதர் அங்கு முக்கியமான தெய்வம், நரசிம்ம அவதாரமாக மூர்த்தி வந்தபோது அதன் அகங்கார ஆக்ரோஷம் தீரவில்லை அந்த ஆகோர்ஷத்தை அகங்காரத்தை அழிக்க அதனை பிடித்து உரித்து தன் தோலை சட்டையாக சிவன் அணிந்ததால் சட்டநாதர் என்றானார் என்பது புராணம்

அந்த சட்டநாதர் அங்கே பைரவர் வடிவம், அப்படியே காசிக்கு அடுத்தபடி எட்டு பைரவரும் உண்டு

அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்கார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.

இதனாலே "காழியில் பாதி காசி" என்பார்கள்

இந்த தலத்தில்தான் சம்பந்தர் தன் தேவாரத்தை அன்னை கொடுத்த ஞானப்பாலில் இருந்து பாடினார்

"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே"

எனும் சம்பந்த பெருமான் இங்கிருந்துதான் பாடினார்

இந்த தலம்தான் பஞ்ச மயான தலங்களில் இரண்டாம் தலம், பஞ்ச பூத தலங்களில் இது நீர் தலம்

இங்கே ஒரு கேள்வி நிச்சயம் எழும், மயான தலம் என்றால் மயானம் இருக்கவேண்டும் ஆனால் இங்கு மயானம் இல்லையே பின் எங்கிருந்து இது மயான தலம் என்றால் விஷயத்தை கொஞ்சம் தத்துவமாக நோக்குதல் வேண்டும்

பஞ்சபூத தத்துவபடி இத்தலம் நீர் தத்துவத்தை கொண்டது

நீர்தான் உயிர்களை காப்பது வாழவைப்பது, நீர் இன்றி எதுவும் வாழமுடியாது எதையும் காப்பாற்றி தொடர் முடியாது

"நீரின்றி அமையாது உலகு" என்பது ஒருவரியில் கடந்து செல்ல கூடியது அல்ல, உயிர்களின் தோற்றமும் வாழ்வும் நீரில்தான் இருக்கின்றது

அதனாலே காக்கும் தெய்வம் என சொல்லபடும் பெருமாளை பாற்கடலில் மிதக்கும்படி காட்சிபடுத்தினார்கள் இந்துக்கள், சிவன் கங்கையினை தலையில் தாங்குகின்றான் என்றார்கள்

நீர்மை எனும் அந்த தன்மைதான் இங்கு உயிரை காக்கும், ஏன் எல்லா வகை உயிர்களும் நீர்வடிவில்தான் மூலத்தை கொண்டிருக்கும், நீர் வடிவம்தான் எல்லாவற்றையும் தாங்கி நிற்கும்

அப்படி இந்த சீர்காழி எனும் ஆலயம் தோணியப்பர் என நீரோடு சம்பந்தபடுத்தி சொல்லும்போது அதன் மூலம் சரியாகின்றது

இந்த ஆலயத்தில் ஞானப்பால் எனும் நீர்வடிவ சக்தியினை சம்பந்தருக்கு கொடுத்து அன்னை அவரை கொண்டு சைவம் காத்தாள் என்பது காக்கும் தலத்துக்கு இன்னும் வலுவாகின்றது

இந்த தலம் சிவனின் காத்தல் தொழிலை செய்யும் தலம்

இங்கே யாரெல்லாம் வந்து வணங்கினார்களோ அவர்களெல்லாம் காக்கபடுவார்கள், அவர்கள் எல்லா வகை சிக்கலில் இருந்து ஆபத்தில் இருந்தும் காக்கபட்டு காவல் பெறுவார்கள்

சரி, ஒரு விஷயத்தில் இருந்து ஒருவரை காக்கவேண்டும் என்றால் அவரின் ஆபத்தினை களையவேண்டும் அல்லவா?

அப்படி அவர்களின் சிக்கல்களெல்லாம் எரிந்துபோகும் இடம் இந்த தலம், அதனால் மயானம். அவர்களின் சிக்கல்கள் பிரச்சினைகள் ஆபத்துக்களை எல்லாம் எரித்து அகற்றி அவர்களை புதிய பரிணாமத்தில் புதிய வடிவில் வெளிவரசெய்யும் சக்தி இந்த ஆலயம் கொண்டிருக்கும்

அதனால்தான் இது சீர்காழி மயானம் என அழைக்கபடுகின்றது

அதன் தலபுராணங்களை கவனமாக பாருங்கள், ஒவ்வொரு இடத்திலும் பழையன கழிந்து அழிந்து புதிதாக அது உருமாறியிருப்பதை கவனிக்கலாம்

அதில்தான் இந்த ஆலயத்தின் தாத்பரியம் விளங்குகின்றது

பிரம்மன் படைப்பு கடவுள், சக்தியினை இழந்த அவன் இங்கே வழிபாடுகளை செய்து மறுபடி தன் சக்தியினை பெற்றான், அவன் வாழ்வு மறுபடி காக்கபட்டது

அந்த வரத்தை அருளியவர் பிரம்மபுரீஸ்வரர்

ஊழிகாலம் என்பது எல்லாம் அழிந்த நிலை, அந்த அழிவுக்கு பின் தோணியில் வந்த சிவனும் அன்னையும் மீண்டும் உலகை உருவாக்கினார்கள், உலகம் மீள வந்தது மறுபடி காக்கபட்டது

அதனால் அவர் தோணியப்பர்

இன்னும் புறா வடிவில் வந்த தேவரை காத்த சிபி சக்கர்வர்த்தி கதை உண்டு, அப்புறா இங்கே காக்கபட்டது

ராகு பகவானும் குரு பகவானும்  இங்கேதான் மீண்டு வந்தார்கள், உரோமச முனி மறுவாழ்வு பெற்றார்

இப்படி ஏகபட்டோரை காத்த இந்த ஆலயத்தின் சிவன் இங்கு காத்தல் தொழிலை செய்கின்றார், அப்படி அவர் காத்த ஒரு விஷயம்தான் அந்த சட்டநாத வடிவம்

நரசிம்மத்தின் ஆவேசம் எல்லையில்லா நிலையில் அதனை ஒடுக்கி அதனை உரித்து சட்டையாக அணிந்தார் என்பதால் அவர் சட்டநாதர் என்றானார்

ஆனால் சட்ட, அல்லது சட்டை என்பதன் மூல பொருள் காப்பது, எல்லையிட்டு முழுக்க காப்பது எனது

சட்டம் என்றால் காவல் விதி, சட்டை என்றால் மானம் காக்கும் ஆடை என பொருள்

அசட்டை என்றால் கவனமில்லாத, ஒரு ஆர்வமில்லாத, அலட்சியமான என்பது பொருள், அசட்டையின் எதிர்பதமனா சட்டை என்பது கவனமும் காவலும் கொண்டது என பொருள்

அப்படி நரசிம்மத்தை காத்தவர் , சட்டை செய்தவர் என்பதே சட்டநாதர் ஆயிற்று

ஆம், சட்டநாதர் என்றால் தன்னை அண்டிவருவோரை கவனத்தில் எடுத்து காப்பவர் அவர்கள் இன்னல்களை அகற்றுபவர் என பொருள்

அப்படி இங்கு சட்டநாதராக இங்கே அமர்ந்திருக்கின்றார் சிவபெருமான்

இந்த ஆலயம் மூன்று அடுக்குகளை கொண்டது அடியில் பிரம்ம புரீஸ்வரர், இடையில் தோணியப்பர், மேலே ச்ட்டநாதர் என மூன்று அடுக்குகளாக சிவன் அருள்பாலிக்கின்றார்

மூன்று நிலைகளாக இருந்தாலும் இந்த மூன்றுமே காக்கும் கடமையினை  செய்வதை கவனிக்கலாம், பிரபஞ்ச காவல் இந்த உலக காவல் உயிர்களின் காவல் என எல்லாவற்றுக்குமான காவலை சட்டநாதர் வழங்குகின்றார்

இந்த ஆலயத்தின் மகா சிறப்பு அந்த சட்டநாதரின் அம்சமாக அஷ்ட பைரவர்கள் அமர்ந்திருப்பது

காசியினை காப்பது அஷ்ட பைரவர்கள் என்பது எல்லோரும் அறிந்தது, அதே அஷ்ட பைரவர்கள் இங்கும் உண்டு

பைரவர்கள் என்றால் வேண்டாதவற்றை அழித்துநிற்பவர்கள் அவர்கள்தான் பைரவர்கள், காசியின் எட்டு திக்கிலும் எட்டு பைரவர்கள் அப்படி காவல் இருப்பார்கள்

அப்படி இங்கும் எட்டு அதே பைரவர்கள் உண்டு

அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், சம்கார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.

இந்த பைரவர்கள்தான் எட்டுவகை அகங்காரங்களை அழிப்பார்கல்

பிறப்பு, குலம், வலிமை,செல்வம், அழகு, பெருமை, தவம், அறிவு எனும் எட்டுவகை செருக்குகளை அகங்காரங்களை அழிப்பவர்கள் இந்த பைரவர்கள்

அதாவது எட்டுவகை மாயையினை அழிப்பவர்கள் இவர்கள், அழித்து அஷ்டமா சித்து எனும் எட்டுவகை காவலையும் அருள்பவர்கள்

இந்த அகங்காரத்தை அழிக்கும் தலம்தான் இந்த அகங்காரத்தை களையுமிடம்தான் சீர்காழி மயானம்

இங்கே அந்த சட்டநாதர் சன்னதி முக்கியமானது , அவர் உயரத்தில் இருப்பதால் அவர் பார்வைபடும் இடத்தில் புனுகுசாற்றி அர்ச்சனை செய்யபடும்

அங்கேதான் ஒருவனின் அகங்காரமெல்லாம் எரிந்துபோகும், அதனை அடுத்த அஷ்ட பைரவர் சன்னதிகளில் எல்லா துர்குணங்களும் அழிக்கபட்டு பின் புது மனிதனாய் வெளிவருவார்கள்

அந்த தலத்தின் வரலாறுகளெல்லாம் அதை சொல்கின்றன‌

அங்கே நரசிம்மரின் அகங்காரம் அகன்றது இன்னும் பலரின் அகங்காரம் அகன்று காவலும் புதுவாழ்வும் பெற்றார்கள்

நீர் என்பது ஒருவனை வாழவைக்கும் காக்கும் என்பதுமட்டுமல்ல அதுதான் சுத்தபடுததும், அவ்வகையில் ஞானநீராட்டு வழங்கி ஒருவனுக்கு ஆத்ம சுத்தம் வழங்கும் தலம் இது

இங்கே அகங்காரம் எரியும் ஆணவம் அற்றுபோகும் அவன் புது மனிதனாய் காக்கபடுவான்

பஞ்ச மயான ஆலயங்களில் கச்சி முதல் மயானம் அங்கே ஒருவன் புதிதாய் படைக்கபடுகின்றான், இரணடாம் மயானம் இந்த சீர்காழி

இங்கே ஒருவனுக்கு காவல் கிடைக்கின்றது அவன் புதுகாவலும் புதுபலமும் புதுவாழ்வும் பெறுகின்றான் அவன் வாழ்வு காக்கபட சட்டநாதர் அருள்புரிகின்றார்

சட்ட என்றால் எல்லையிட்ட காவல் என பொருள், அவ்வகையில் அந்த சிவன் அங்கே காத்தல் தொழிலை செய்கின்றார்

சட்டநாதர் சன்னதிதான் சீர்காழி மயானம், அங்கே எல்லா துர்குணங்களும் சாபங்களும் அகங்காரமும் எரிந்துபோகும் அவன் அடுத்த படிநிலைக்கு உயர்த்தபடுகின்றான்

நீர் தத்துவ அலயம் என்பதால் நீர் எவ்வளவு வாழ்வில் அவசியமோ அத்தனை அவசியமான வரங்களையும் வரமாக இந்த ஆலயம் வழங்கும்

தன்னை காத்து தன் கர்மத்தையும் காக்கும் வரத்தை அந்த ஆலயம் அருளும், அப்படி ஒரு காவலை செய்யும்

திருஞானசம்பந்தர் எனும் மகான் அதற்கு மாபெரும் உதாரணம் ஐந்துவயதிலே அந்த ஆலயம் ஞானப்பால் எனும் நீர்மூலம் அவரின் கர்மாவினை சரியாக செய்யவைத்தது

குழந்தை எனும் நிலையில் இருந்து ஞானி மகா ஞானி எனும் வகைக்கு அவரின் நிலையினை மாற்றியது, அவர் அக்கணம் மறுபிறப்பு அடைந்தார்

அந்த மறுபிறப்பு நிலை சீர்காழி சட்டநாதர் சன்னதி முன்னால்தான் நடந்தது

கணநாத நாயனார் அங்குதான் மானிடர் எனும் நிலையில் இருந்து நாயனார் எனும் அளவு மறுபிறப்பினை மறுபெரும் நிலையினை அடைந்தார்

சாதாரண மனிதனாக அங்கே வந்த ஒருவர், சட்டநாதன் அருளால் மாயை நீங்கபெற்று ஞானியாகி சட்டமுனி எனும் பெயரில் அழியா ஞானபாடல்களை வழங்கி அங்கே சமாதியும் கொன்டார்

பிரம்மனும் சிபி சோழனும், ராகும், குருவும் இன்னும் பலரும் அங்குதான் இன்னொரு நிலை அடைந்தார்கள்

மகாபாரத கண்ணனே தன் அவதாரம் முடிக்கும்போது இந்த சிவனிடம் வேண்டித்தான் தன் நிலை மறுபடி எய்தினான், தன் நிலை அடைந்தான் என்கின்றது சில குறிப்புகள்

அத்தலம் மறுவாழ்வு தரும் தலம், மறுவாழ்வு தந்து காவலையும் தரும் தலம்

"காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி
கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா
ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தா னென்பார்
அவளுக்குள் மவுனமுண் டறிவாய் பாராய்
ஊணிந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய்
ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ
தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை
சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே."

காணிந்த வுலகத்தில் மாயக் கூத்தும்
கண்மூக்குச் செவியோடிந் திரியக் கூத்தும்
பூணந்த வாசியினால் வறுமைக் கூத்தும்
புகழான செனனமொடு மானக் கூத்தும்
ஆணிந்த அண்டமெல்லாம் படைத்த கூத்தும்
ஆங்காரம் மனம்புத்தி யான கூத்தும்
தோணிந்தப் படிபடைத்த பாமே யையா!
சொற்பெரிய பூரணமே யென்று கூவே."

என சட்டமுனி அங்கு பாடியபடி எல்லா நலமும் கிடைக்கும்

வாழ்வில் சில சாபம் உண்டு, எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்கவோ இல்லை அதன்படி நடக்கவோ முடியாத தடங்கலும் சாபமும் மாயையும் சிலரை பிடித்திருக்கும்

காரணமில்லா சண்டைகள், அவசியமில்லா வம்புகள், பெரும் பெரும் அபாயங்கள் தொடர்ந்து வரும்

அனாவசியற்ற சண்டைகள், வறட்டு சிந்தனை குழப்பங்கள், அறியாமையின் சர்ச்சைகள் என நிம்மதியறு போயிருக்கும் நிலை வரும்

எப்போதும், அச்சம் பயம் பதற்றம் அழுகை கண்ணீர், அகோர கொபம், அதிகமான குழப்பங்கள் என சிலருக்கு வாழ்வே அச்சமும் பயமும் நிறைந்ததாய் இருக்கும்

அவர்கள் இந்த தலத்துக்கு வந்தால் அவர்களின் பல மாயைகள் அறியமைகள் எல்லாம் எரிக்கபடும், சட்டநாதன் அருலிலும் அந்த அஷ்ட பைரவ அருளிலும் எல்லா காவலும் கிடைக்கும்

அங்கு சென்று வழிபட்ட நேரத்தில் புது பலமும், புது வாழ்வும் புது காவலும் உங்களை சூழும் , புதுபுணல் கண்ட நிலம்போல் உங்கள் வாழ்வும் செழிக்கும், அது செழிப்பாகவே இருக்க அந்த சட்டநாதர் அருள்புரிவார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...