#கன்னியாகுமரி_பகவதி_அம்மன் #மூக்குத்தி_வரலாறு
திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆட்சியில் கன்னியாகுமரி பகுதி இருந்த காலம். அந்த காலத்தில் பனையேறி ஒருவன் இருந்தான். அவனுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும் போதும் அவனுக்கு பெண் குழந்தை மட்டுமே பிறந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள் தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியை சொல்லுவாள்.
இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்து விட்டன. இதனால் மனம் வருந்திய அவன் இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும் போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.
இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம் போல் அவனது முதல் பெண் ஓடி வந்து அப்பா அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு தங்கை பிறந்துருக்கா என்று சொன்னாள். ஆனால் அந்த நேரம் இவன் பனையில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை.
7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள். இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்து போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும் நாம் உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் அம்பாளின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டது போல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும் போது அவன் கையில் ஏதோ ஒன்று தக தகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது.
அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே கொட்டாரத்திற்கு (அரண்மனைக்கு) கொண்டு சென்றான். அதை மஹாராஜாவிடம் கொடுத்தான். உடனே அதை பெற்று கொண்ட மகாராஜா அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்க சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்று கொண்டு வீட்டுக்கு சென்றான்.
அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் சென்று மன்னா ! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே அதை நீ வாங்கி வைத்து கொண்டாயே ! அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து தர கூடாதா? என்று கேட்டு விட்டு மறைந்து விட்டாள்.
திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவை கூறி அந்த சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டு பிடிக்கும் படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும் போது அது வேறு யாரும் அல்ல கன்னியாகுமரி பகவதி அம்மன் தான் என்பது தெரிய வந்தது.
நம்பூதிரிகள் கூறியதை கேட்ட மன்னர் உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், பில்லாக்கும் செய்து கொடுத்தார். அது தான் இன்றும் அன்னை அணிந்து கொண்டு இருக்கிறாள். நாகரத்தினம் என்பதால் அது தக தகவென ஜொலிக்கும். கப்பலோட்டிகள் அம்பாளின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்க ஒளி என்று எண்ணியதால் கப்பல் திசை மாறி வந்த காரணத்தால் கோவிலின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தான் தேவியை தரிசனம் செய்ய முடியும். அம்பாளின் கருணை முகத்தை கண்டால் நம்மால் அவள் சந்நிதியில் இருந்து திரும்பி வர மனம் வராது.
விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் எனது இஷ்ட தெய்வம் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். அவள் கருணையினால் உலகம் இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வரட்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment