Monday, March 4, 2024

மஹா சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

மஹா சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றிய பதிவுகள் :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

'சிவ' என்ற சொல்லே 'மங்களம்' என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூசனையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப்  பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும்.

மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால்  பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேக பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம், மந்திரப்பூர்வமாக செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிந்து, இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிக சிறப்பு.

மறுநாள் காலை தீபாரதனை செய்து விரதம் நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புணர்பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

*சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்*

யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தை தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜுனன் சிவராத்திரி விரதத்தை கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே, சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றுதான்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...