*மங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்*🌹
_வேதசத்சங்கம்_
சிவபெருமானின் கட்டளைப்படி பூலோக மக்களை காத்திடும் பொருட்டு, அன்னை பார்வதி தேவி, பத்ரகாளியாய் அவதரித்து பூலோகம் முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள், அரபிக்கடல் அருகில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் இருந்து 'ஓம்சக்தி பகவதி காளி சூலினி' என்ற மந்திர ஒலி தொடர்ச்சியாக காற்றில் மிதந்து வந்தது. அந்த மந்திர ஒலி அம்பாளை கட்டி இழுத்தது. பைரவர் என்ற சித்தர் ஸ்ரீசக்கரம் அமைத்து, அதில் அமர்ந்து கொண்டு தேவியின் நாமங்களைக் கூறியபடியே பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அவ்வாறு இருந்த காரணத்தால் அவரது உடல் முழுவதும் மண் புற்று வளர்ந்து, அவரை மூடி மறைத்து, ஸ்ரீசக்கரம் புற்றாக காட்சியளித்தது.
பைரவ சித்தரது தவத்தின் வலிமையையும், சக்தியையும் உணர்ந்த அன்னை, அந்த சித்தருக்கு நேரில் காட்சி கொடுத்தாள். அன்னையின் திருக்காட்சியை காணப்பெற்ற சித்தர் பூரிப்படைந்தார். பின்னர், 'தாயே! நான் பூஜித்த ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்' என்று வரம் கேட்டார். அன்னையும் அவ்வாறே வரமளித்து அந்த ஸ்ரீசக்கரத்தில் ஐக்கியமாகி விட்டார்.
ஸ்ரீசக்கரத்தின் மேல் மணல் புற்று வளர்ந்தது. ஒரு நாள் மணல் மேடாகிப் போன அந்த புற்றில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் இதுபற்றி பிரசன்னம் பார்த்தபோது அங்கு பத்ரகாளித் தாய், பகவதியாக வீற்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு பகவதி அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. புற்று ரூபத்திலேயே பகவதி அம்மன் அருள்புரிந்து வருகிறார். புற்றின் தலைப்பகுதியில் அம்மன் உருவம் உள்ளது.
இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகள் போன்று மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள். உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும்.
பகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும்.
மேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப் போல, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கும் இருமுடி கட்டி மாசி மாதத்தில் செல்கின்றனர். குறிப்பாக இங்கு பெண்கள்தான் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர். இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இங்குள்ள அம்மன் புற்று வடிவம். புற்று, மணலால் ஆனது. மண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வீடு கட்டுவது, தடைபட்ட வீட்டு பணிகள் தொடர, நிலம் வாங்க, வாஸ்து கோளாறுகள் நீங்க இந்த தலத்தில் செவ்வாய் அன்று 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிறிது மண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில்தான் பகவதி அம்மன் அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அன்றைய தினம் அம்மனுக்கு அளப்பரிய பூஜை ஒன்று நடத்தி, குத்தியோட்டம், பூமாலை, துலாபாரம், பிடிப்பணம் போன்றவை நடத்தப்படுகிறது. மாசித் திருவிழாவே இந்த கோவிலில் நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.
மாசித் திருவிழாவின் 10-ம் நாள் விழாவின்போது, நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி, ஒரு பனை ஓலைபெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் சூழ 'ஒடுக்கு பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் நடைபெறும் ஊர்வலத்தின்போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும். பறையொலி மட்டுமே கேட்கும்.
ஒடுக்கு பூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாத குழந்தைகளுக்கு கொடுத்தால் பேசாத, அவர்களுக்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை. நேர்த்திக் கடனாக ஆண் குழந்தைகளுக்கு உடலில் அலகு குத்தும் குத்தியோட்டம் நிகழ்ச்சியும், பெண் குழந்தைகள் மாவிளக்கு ஏந்தி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நாகதோஷம் நிவர்த்தியாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் ராகு காலங்களில் இந்த தலத்திற்கு வந்து இரண்டு நெய் தீபம் ஏற்றி, 3 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு வைத்து தொடர்ந்து மூன்று வாரங்கள் வழிபட்டால் திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.
நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
பகவதி அம்மனை புற்று வடிவில் வழிபட்ட பக்தர்கள், அன்னையிடம், 'உன் மண்டையைக் (தலை) காட்டம்மா' என்று வேண்டினர். 'புற்றின் சிரசே தனது சிரசு' என்று கூறி புற்றாகவே அன்று முதல் இன்று வரை பகவதி அருள்புரிந்து வருகிறாள். 'மண்டையைக் காட்டம்மா' என்று பக்தர்கள் பகவதியிடம் இத்தலத்தில் வேண்டியதால் இத்தலம் 'மண்டைக்காடு' என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் மற்றொரு பெயர்க்காரணமும் தெரிவிக்கப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாக கேரளா பண்பாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது ஆலயம் இருக்கும் இடம் முன்பு காடாக இருந்துள்ளது. இதனால் சுற்றியுள்ள மக்கள் இந்த பகுதியில் ஆட்டு மந்தைகளை மேய்த்து வந்துள்ளனர். அதனால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி, 'மண்டைக்காடு' என்றானதாக அறியப்படுகிறது.🌹
No comments:
Post a Comment