Saturday, March 9, 2024

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய மாசிஅமாவாசையும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரிஅம்மன்.

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய 
#மாசிஅமாவாசையும் #மேல்மலையனூர் #அங்காளபரமேஸ்வரிஅம்மன் திருக்கோயில் 
#மயானகொள்ளையும்:
சக்தி வழிபாடனது நம் தமிழர்களின் பழமையான வழிபாடாகும். கொற்றவை (காளி) பாலை நில கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கருதப்பட்டு வழிப்பட்டு வந்தனர்.இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாளே எங்கு பார்ப்பினும் விண் அதிர பம்பை மற்றும் உடுக்கை ஓசையும், பாடல்களும் ஒலித்து கொண்டு இருக்கும்.அஷ்ட திக்கினையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் ஆகும்.

சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசை தினம் தந்து தமிழ்நாடு முழுவதும் அங்காள பரமேஸ்வரி கோயில்களில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேல்மலையனூர் திருக்கோயிலில் கொண்டாடப்படும் இந்த மயான கொள்ளை திருவிழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#மயான_கொள்ளை:

மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.

#புராண_வரலாறு:

துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, பிரம்மனின் ஐந்து தலையைப் பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்குப் பார்வதியே காரணமெனக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை "கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாகக் கொண்டு வாழ்வாய்!' எனச் சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசுனுக்கு உரிமையான ஒரு நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றைக் கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.

இந்தக் கோவிலிற்குச் சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போலக் கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது; பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளை திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

#மயான_கொள்ளை விழா தோற்றம்:

அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின.அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார்.அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

#மாசி_அமாவாசை மயான கொள்ளை வரலாறு :

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது  நடைபெறுகிறது.அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதாள். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர்.அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.

#மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில்:

காசி அன்னபூரணி அங்காளியம்மனின் அம்சமே. மேல்மலையனூரில் உற்சவ தேவியும் அன்னபூரணியே. அங்கத்தில் கோர ரூபமாக இருப்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பட்டாள் அன்னை. சிவனின் கரத்திலிருந்த கபாலத்தை அடித்து நொறுக்கி ஆவேச நடனமிட்ட இடம் மேல்மலையனூர் எனப்படுகிறது.

ஆண்டுதோறும் வெகு விமர்சையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. பல்வேறு விதமான வேண்டுதல்களுடன் அங்காள பரமேஸ்வரியை அனுகிய பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இந்த மாசி மாதம் மயான கொள்ளை திருவிழாவிற்கு வருகை தருவார்கள். இந்த நேரத்தில் மேல்மலையனூர் ஸ்தம்பித்து நிற்கும் அளவிற்கு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரி மீது ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை வர வைப்பார்கள்.

மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு, தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல், கொழுக்கொட்டை, தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவாகியது.

சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

மாசி அமாவாசையில் அம்பிகை முழு சக்தி பலத்தோடு வீற்றிருப்பாள். அன்றைய தினம் சென்று அகில உலக நாயகியான அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வேண்டிய நலன்களைப் பெறுவோம்.

"அங்காளியே ஆடி வரவேணுமம்மா..

ஆதிபராசக்தியே ஓடி வரவேணுமம்மா..

மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்

ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்

ஏழு கரகமம்மா எடுத்தாடும் விற்கரகம்

பத்துக் கரகமம்மா பதிந்தாடும் பசுங்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளையாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா..."

சதுர்யுகங்களுக்கும் முற்பட்ட யுகமான மணியுகத்திற்கும் முன்பே தோன்றிய அங்காளியம்மனின் அருளால், நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லாத் தீமைகளும் விலகி, நாளும் நலமே சூழ பிரார்த்திப்போம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...