*அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்,
வலிவலம் 610207, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
*மூலவர்:
மனத்துணை நாதர், இருதய கமல நாதேசுவரர்.
*தாயார்:
அங்கயற்கண்ணி, மழையொண்கண்ணி, வாளையங்கண்ணி
*தல விருட்சம்:புன்னை
*தீர்த்தம்:
சக்கர தீர்த்தம், காரணர் கங்கை.
*தேவாரம்
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்.
*இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்
"பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே" என திருஞானசம்பந்தப் பெருமானால்பாடப்பட்ட திருத்தலம் வலிவலம்.
*சூரியன், வருணன், வலியன், காரணமாமுனிவர் என தேவர்களும், முனிவர்களும், மன்னர்கள் பலரும் வழிபட்ட தலம் இத்தலம்.
*மூன்றாம் குலோத்துங்கச் சோழன், ராஜராஜசோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னன் சடாவர்மன் திரிபுன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கால கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
*சூரியனால் உருவான அகழி:
சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் அளிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்ற தேவர்கள் அனைவரும், சிவபெருமானில் இருந்து தோன்றிய அகோரவீரபத்திர சுவாமியால் தண்டிக்கப்பட்டனர்.
இதில், சூரியன் தன் ஒளியை இழந்தார். தன் தவற்றை உணர்ந்த சூரியன் வலிவலத்தில் மனத்துணைநாதரை வணங்கி, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார். சூரியனின் தேர் சக்கரம் அழுந்திய தடத்தில் உருவானதே அருள்மிகு மனத்துணைநாதர் கோயிலைச் சுற்றியுள்ள அகழி. இதனால், இந்த அகழி சக்கர புஷ்கரணி என்றே குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒரே சக்கரத்துடைய தேரைக் கொண்ட சூரியன் வலம் வந்த ஊர் என்பதால் இத்தலத்துக்கு "ஏகசக்கரபுரம்" என்ற பெயரும் விளங்குகிறது.
*வலியான் வலம் வந்த தலம்:
ஒரு நாள், கரிக்குருவியொன்றை அதனைவிட பெரிய பறவைகள் தாக்கி காயப்படுத்தின.
அதனால் பலத்த காயங்களும், பெரும் சோர்வும் அடைந்த அந்தக் கரிக்குருவி, வேதனையுடன் ஒரு மரத்தை அடைந்தது. அப்போது, அந்த மரத்தடியில் ஒரு சிவயோகி, மதுரையம்பதியின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்புகளை அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசத்தை கரிக்குருவி, ஊன்றிக் கேட்டது. உடனடியாக, அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்த கரிக் குருவி, பொற்றாமரை குளத்தில் தீர்த்தமாடி, சொக்கநாதப்பெருமானை வலம் வந்து வழிபட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை அந்தக் கரிக்குருவி மேற்கொண்டது. இந்த வழிபாட்டால் மகிழ்ந்த சொக்கநாதப் பெருமான், அந்தக் குருவிக்கு மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். கரிக்குருவி பேரறிவு பெற்றது.
மேலும் அவர் கரிக்குருவி வேண்டியபடி
"மற்ற பறவைகளைவிட நீயும் உன் மரபினர் அனைவரும் வலிமையாவீர்கள்" என அருளினார். கரிக்குருவி, அன்று முதல் "வலியான்" என்ற பெயரைப் பெற்று, தன்னைவிடப் பெரிய பறவைகளையும் வெல்லும் ஆற்றலைப் பெற்றது.
அந்த மரபில் தோன்றிய ஒரு வலியான் கரிக்குருவி, அருள்மிகு மனத்துணைநாதப் பெருமானை வலம் வந்து வணங்கி நற்பேறு அடைந்ததால், இத்தலத்துக்கு வலிவலம் எனப் பெயர் ஏற்பட்டது.
*முனிவர் தவம்:
காரணமாமுனிவர், தவமியற்றிய தலம் இது. அபலைகளாக ஆதரவின்றி வாழ்வோரும், வசதிகள் இருந்தும் பலரது பழிக்கண்களுக்கு ஆளாவோரும், அதற்கான காரணங்களை அறிந்து பரிகாரம் பெற, தனது தவப்பலன்கள் அனைத்தையும் காரணமாமுனிவர் இச்சிவாலயத்தில் அர்ப்பணித்துள்ளதார்.
*இத்தலத்தில் அருள்மிகு மனத்துணைநாதப் பெருமானுக்கு வலம்புரிச் சங்கினால் கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால், மனக்கலக்கங்கள் தீரும், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையும், நிர்கதியற்று இருப்போருக்கும் நல்வழி கிட்டும் என்பது உறுதி.
*இத்தலத்தில் பகாசூரனை பீமன் வீழ்த்தி மக்களைக் காத்தான் என்ற தகவல் இவ்வூரின் பழம் பெருமைக்குச் சான்றாகக் கூறப்படுகிறது.
*இத்தலத்து இறைவனையும், இறைவியையும் சிறப்பித்துக் கூறும் 'வலிவல மும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால் வெளிடப்பட்டுள்ளது.
*இத்தலத்தை திருவாரூர் - நாகபட்டினம் சாலையில் உள்ள கீவளூர் (கீழ்வேளூர்) வழியாக சென்றடையலாம். *திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment