ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ, அது, சிவராத்திரி’ இரவு ஆகும். இதை, மாத சிவராத்திரி’ என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால், அது, மகா சிவராத்திரி’ எனப்படுகிறது.
திருமாலை, மகாவிஷ்ணு’ என்பது போல சிவனை, மகாசிவன்’ என்பதில்லை. ஆனால், அவருக்கு விருப்பமான இரவு பொழுதுக்கு, மகா’ என்ற அடைமொழி சேர்த்துள்ளனர்.
இதற்கு காரணம் உண்டு.
சிவனுக்கு பல திருநாமங்கள் உண்டு. அதில் எட்டு மிக உயர்ந்தது. அதில் ஒன்று, மகான்’ என்பதாகும். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன் ஆகியவை மற்ற பெயர்கள்.
கோவில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடக்கும் போது, அஷ்டோத்திரம் எனும், 108 நாமங்களால் அர்ச்சிப்பர். இதில், கடைசி நாமம், மஹதே தேவாய நமஹ!’ இதையே, மகாதேவன்’ என்கின்றனர்.
பெரும்பாலான கோவில்களின் மூலஸ்தானத்தில் சிவன், லிங்க வடிவமாக இருக்கிறார். இந்த லிங்கத்தைக் கூட, மகா லிங்கம்’ என்பர். சிவனுக்கு ஏன் லிங்க வடிவம் தரப்பட்டது என்பதற்கும் காரணம் உண்டு.
லிங்கம்’ என்னும் சொல்லுக்கு, அடையாளம்’ அல்லது அறிகுறி’ என்று பொருள். விஷ்ணு, அம்பாள், முருகன் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கு கண், காது, மூக்கு, வாய் என, எல்லா உறுப்புகளும், மனிதர்களைப் போலவே இருக்கிறது.
ஆனால், லிங்கம் ஒரு நீள் வட்ட வடிவமாக இருக்கிறது. நாம் வானத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதன் நான்கு மூலைகளையும் பார்த்தால் ஒரு வளைவு இருப்பதைப் பார்க்கலாம். இந்த பிரபஞ்சம் வளைந்திருப்பது போல,
லிங்கமும் வளைந்துள்ளது. ஆக, பிரபஞ்சமே சிவனின் வடிவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் தான் அவரை, மகேஸ்வரன்’ என்றும் சொல்வர்.
மகேஸ்வரன் என்ற சொல்லுக்கு, ஆட்சி செலுத்து பவன், திமான் தலைவன் என்ற அர்த்தங்கள் உண்டு. ஈஸ்வரனை, ஈச்வரன்’ என்றே உச்சரிக்க வேண்டும். ஈச்’ என்றால், உரிமை’ என்று அர்த்தம். ஆக,ஈஸ்வரன்’ என்ற சொல்லுக்கு, உரிமையாளர்’ என்று பொருள்.
இந்த உலகத்துக்கே உரிமையாளராக இருக்கிறார் சிவன். அந்த ஈஸ்வரனுக்கு, மகா’ என்னும் அடைமொழி சூட்டி, மகேஸ்வரன்’ என்று பெருமைப்படுத்தியுள்ளனர்.
சிவனை, மகாசிவன்’ என்று அழைப்பதற்கு பதிலாக, சதாசிவன்’ என்ற பெயரால் அழைப்பர். இந்த சொல்லுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. மகா கணபதி, மகாலட்சுமி, மகாசாஸ்தா, முருகனுக்கு கூட, மகாசேனன்’ என்ற பெயர்களெல்லாம் உண்டு.
ஆனால், சிவனுக்கு மட்டுமே, சதா’ என்ற சிறப்புச் சொல் உண்டு. வேறு எந்த தெய்வத்தின் பெயரிலும், சதா’வைப் பயன்படுத்து வதில்லை. சதா’ என்றால், எங்கும், எப்போதும்’ என்று பொருள் கொள்ளலாம்.
எங்கும் சிவம், எதிலும் சிவம், எப்போதும் சிவம்’ என்று சதாசிவத்தைப் பொருள்படுத்தலாம். 11 மற்றும் 25 தலைகள் கொண்ட சதா சிவத்தை, சில கோவில் கோபுரங்களில் பார்க்கலாம்.
சிவன் என்பது மிகப் பழமையான சொல்லாகும்.
உலகின் முதல் நூல் என புகழப்படும் ரிக் வேதத்தில், சிவ’ நாமம் வருகிறது. அமரகோசம் என்ற சமஸ்கிருத அகராதியில், சிவம்’ என்றால் கல்யாணம், மங்களம், பத்ரம்(சுபம்) என்ற அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த வார்த்தைகளை <உற்று நோக்கினால் நன்மை, மகிழ்ச்சி, சவுக்கியம், லட்சுமிகரம் என்றே பொருள் கொள்ளலாம். இவை அனைத்துக்கும் அடிப்படை அன்பு. அன்பிருக்கும் இடத்தில் தான் இவை அனைத்தும் இருக்கும். இதனால் தான், அன்பே சிவம்’ என்கின்றனர்.
கலியுகத்திற்கு மிகவும் தேவையானது அன்பு. சிவனை வணங்கினால் அன்பு ஊற்றெடுக்கும். சிவராத்திரி நன்னாளில், பிறர் மீது அன்பு செலுத்த உறுதியெடுப்போம்.
நமசிவாய வாழ்க
No comments:
Post a Comment