Friday, May 31, 2024

தஞ்சாவூர் கபிஸ்தலம் மற்றும் கோவிலூர் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன்.

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் காத்தாயி அம்மன் சிறப்பாக வழிபடப்படும் தெய்வம். காத்தாயி அம்மனோடு பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன் மற்றும் சப்த முனீசுவரர்களையும் காணலாம். வெட்ட வெளியில், தென்னை மரங்களின் பின்னணியில் அவர்களைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. வாள் ஏந்தி மிக உயர்ந்த உருவாக நிற்பதும், அவரது கால்களுக்கிடையே பாதாள, நரகலோக அரக்கன் ஒருவனின் தலை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார் வாள்முனி.
அவரோடு, லலாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி ஆகிய அறுவரும் சேர்த்து, அன்னை பராசக்தியான காத்தாயியின் ஏழு புதல்வர்கள் ஆவர். இவர்களை ஆறுமுகப் பெருமானின் அம்சம் என்றும் கூறுவர். வீரமும் கருணையும் கொண்ட காவல் தெய்வங்கள் அவர்கள். தவக்கோலத்துடன், வீரவேற்கோலமும் கொண்டு, அன்னையின் ஏவலை ஏற்று, பக்தர்களின் தீமைகளை அகற்றி, நன்மையை சேர்க்கும் அந்த அருளாளர்கள், வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

வேத முதல்வனாகிய சிவபெருமானின் திருமேனியில் இடப்பாகத்தில் இடம் பெறுவதற்காக கச்சி ஏகம்பரைப் பணிந்து வணங்கி வழிபட வந்தாள், உமையம்மை. அந்தப் பரம்பொருளை அடைந்திட, காஞ்சி மாநகரில் அவள் காமாட்சியாக ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்றபடி தவமிருந்தாள். கம்பா நதிக்கரையில் நீராடி, திருநீறணிந்து ருத்திராட்சக் கண்டிகையும் அணிந்து அவள் தவமிருக்கையில், வெள்ளம் பெருக்கெடுத்தது.

அப்போது தான் வழிபட்டு வரும் சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்ற அச்சம் கொண்ட அன்னை, ஏகம்பநாதராகிய ஏகநாயகனை, தனது இரு கரங்களாலும் மார்போடு சேர அணைத்துக் கட்டிக் கொண்டாள். இறைவனுக்கு, ‘தழுவக் குழைந்த ஈசன்’ என்ற திருநாமத்தையும் பெற்றுத் தந்தாள்.

சிவ புராணத்திலும், காஞ்சி புராணத்திலும் விரிவாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிகள், காலப்போக்கில் கிராமங்களில் சற்றே உருமாறி காத்தாயி அம்மன் தவம், மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்று வழங்கப்பட்டு வருகிறது. அதுவே காலப்போக்கில் விரிவாக்கம் பெற்று, காத்தாயி அம்மனுக்கும் அவளது பரிவார தேவதைகளுக்கும் தனிக்கோயில் எழுப்பி, குலதெய்வமாகக் கொண்டாடிடும் மரபினையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமங்களில் எண்ணற்ற காத்தாயி அம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் மற்றும் கோவிலூர் காத்தாயி அம்மன், அவர்களில் தனிச் சிறப்பு பெறுகிறாள்.

தஞ்சாவூர் கபிஸ்தலம் மற்றும்
 கோவிலூர் கிராமத்தில்  குடிகொண்டுள்ளாள் காத்தாயி அம்மன். 

காத்தாயி அம்மனோடு, பச்சையம்மன், பூங்குறத்தி, வேங்கையம்மன், விநாயகர், லவ-குசர், முருகப் பெருமான், மகாவிஷ்ணு ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள பெரிய கோயில் இது. கோயில் முன்னே வண்ணமிகு மகாமண்டபம் அமையப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சண்டி ஹோமம்’ இங்கே மிகவும் பிரசித்தம்.

உலக வாழ்க்கையை வெறுத்திட்ட இளம் பெண்ணொருத்தி, தனது குழந்தையோடு தீயில் இறங்க முற்பட்டபோது, அவளது குழந்தையைக் காப்பாற்றினாள் காத்தாயி. அதனை நினைவுபடுத்திடவே, தனது இடது கரத்தில் குழந்தையை வைத்தபடி காட்சி தருகிறாள். தீயில் பாய்ந்திட்ட அந்தப் பேதைப் பெண்ணை காத்தாயி ஏன் காப்பாற்றவில்லை? காரணம், தீப்பாய்ந்த அம்மனாக அவளை உலகோர் வழிபட வேண்டும் என்பதற்காகவே!

அதற்காகவே, அவளது குழந்தையைக் காப்பாற்றி தனது கரத்தில் வைத்துக் கொண்டாள். அவளைத் தெய்வமாக்கி, தனது அருகிலேயே இருத்திக் கொண்டாள். காத்தாயி அம்மனின் கரத்தில் அமர்ந்துள்ள குழந்தை குமரனின் அம்சமாகவே கருதப்படுகிறது.

தெய்வமான பெண்கள் அனைவரையுமே மக்கள் பச்சையம்மனின் சகோதரிகளாகவே வணங்குகின்றனர். அவர்களையே தங்கள் குலதெய்வமாகவும், துணைத் தெய்வங்களாகவும் வழிபடுவது தமிழரின் பண்டைய மரபு. தமிழகத்தில் பல இடங்களில் தீப்பாய்ந்த அம்மனுக்கு தனிக் கோயில்கள் உள்ளன. “சிதக்னி குண்டசம்பூதாயை நம” என்று லலிதா சகஸ்ர நாமத்திலும் இடம் பெற்றுள்ளாள் அவள்.

காத்தாயி அம்மனுக்கு இடதுபுறம் காட்சி தருகிறாள் பச்சையம்மன். பச்சை நிற முகத்தை உடையவளாக, மரகதமேனி மருக்கொழுந்தாக, மார்பில் முத்தாரம், கழுத்தணி, காதணியோடு, கையில் வளையலும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். பச்சை நிறத்தாலான பாவாடை, தாவணி. பார்க்கின்ற கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் பச்சை நிறம் கொண்டு, தனது எல்லைக்குட்பட்ட மக்களையும் கால்நடைகளையும் காத்து நிற்பவள் அவள். கங்கையின் அம்சமாக உருவெடுத்தவள்தான் பச்சையம்மன்.

வள்ளியம்மையின் அவதாரமாகக் கருதப்படுபவள் பூங்குறத்தி. நடந்தவை, நடக்க விருப்பவை என அனைத்தையும் குறி சொல்லி, அருள்வாக்கு கூறுகிறாள் இவள்.

புலி போல காவல் ஆற்றல் உடைய பெண் தெய்வமே வேங்கையம்மன். அன்னை பராசக்தி பயணம் செய்யும்போது, உடன் காவலாக வருபவள். பகைவர்களை எல்லைக்கு அப்பால் விரட்டி, அரணாக நிற்கும் வீரத் தாய்தான் வேங்கையம்மன்.

அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியான ஆதிநாராயணன், மகாலட்சுமியோடு இத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

அகிலம் போற்றும் புராணங்கள் புகழும் சப்த முனீசுவரர்கள், காத்தாயி அம்மன் கோயில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். இருளைப் போக்கிடும் செந்நிறத் திருமேனி கொண்டவராக செம்முனி, தீமைக்குக் காரணமான மருளை நீக்கும் அருளை உடைய வாழ்முனி, குறையாத செல்வங்களை அருளும் கும்ப முனி, ஞானத்தையும், அறிவாற்றலையும் தந்திடும் லலாடமுனி, யோகத்தின் பயனைத் தரும் ஜடாமுனி, நாதமாய் நிலவி நயமாய் அருள் செய்திடும் நாதமுனி மற்றும் முத்து மாலைகள் அணிந்து யோகியரில் முத்தாக விளங்கும் முத்துமுனி ஆகியோர்களே இவர்கள். சங்கடம் தீர்க்கும் சங்கிலிக் கருப்பனோடு, வினை தீர்க்கும் வில்லாளனாக பாம்பாட்டி வீரன், காட்டு வெளி செல்லும்போது காக்கின்ற கருமுனியும், காத்தாயி அம்மன் கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

அடியார்களின் நெஞ்சில் குடிகொண்டுள்ள செங்கமலத் திருவடியும், சிலம்பு அணிந்த சிற்றடி, அருமறை சிரமதில் சுடர் ஒளியும், முடிகொண்ட படர் அரவும், மதிநிகர் முகமும், அருள்சோதி புன்முறுவலும், முக்கண் நோக்கும், நெற்றியில் சுட்ட வெண்ணீறும், கரிகுழலும் மிளிர, செம்பட்டு உடையில், செங்கமலத்தை வலக்கரத்தில் ஏந்தி, அஞ்சேல் என அபயமளித்தபடி கொலுவீற்றிருக்கும் காத்தாயி அம்மன், தன்னை நாடி வந்தோர்க்கெல் லாம் தாயாகவே விளங்குகிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...