திருவையாறு ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும் . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.
அப்பர் தேவாரம்:
"மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் திருவையாறு அருள்மிகு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் திருக்கோயிலில் கார்த்திகை மாத காலாஷ்டமியில் கால சம்ஹாரமூர்த்தி நல்கும் தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இங்கு தென்திசை பாகத்தில் யம பயம் நீக்கும் அருள் மூர்த்தியாய் ஆட்கொண்டார் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் சிறப்பைப் பற்றி ஒரு புராண வரலாறு உண்டு.
தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும் வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. இவர்கள் தான் நுழைவாசலில் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.
சுசரிதன் எனும் சிறுவன், தன் பெற்றோரை இழந்த துக்கம் தாளாமால் தான் வசித்து வந்த ஊரை நீங்கி பல்வேறு தலங்களை தரிசிக்கும்பொருட்டு தலயாத்திரை புறப்பட்டான். அப்படி தலங்களை தரிசித்து வந்த சிறுவன் ஒரு நாள் திருப்பழனம் வந்து சேர்ந்தான். சுவாமியை வழிபட்டான். இரவு தங்கினான். திடீரென்று யாரோ தட்டுவது போலிருந்தது. எழுந்து பார்த்தால், கன்னங் கறுத்த உருவம்; மடித்த உதடுகள்; நெருப்பைக் கக்கும் விழிகள்; பரிகாசம் கொட்டும் புன் சிரிப்பு! - யார் இவர்?
‘சுசரிதா!- அவர் கூப்பிட்ட விதமே குலை நடுங்கச் செய்தது. “நான்தான் காலதேவன்- எமன். உனது அந்திமக் காலம் நெருங்கி விட்டது சுசரிதா. தயாராகி விடு. இன்றிலிருந்து சரியாக ஐந்தாவது இரவு வருவேன். எனது பாசக் கயிற்றில் நீ அப்போது கட்டுப்படுவாய்!” _ வேகமாகச் சொன்ன எமன், புயலாக அகன்றான்.
இறப்பது குறித்து சுசரிதனுக்கு பயம் இல்லை. ஆனால், அவன் மடியில் தலை வைத்து மரணித்த தாயார், ‘இனி, சிவபெருமானே உனக்குத் தாயும் தந்தையும் ஆவார். அவரது திருத்தலங்களை தரிசித்து வா, மகனே!’ என்று சொல்லி உயிரை விட்டார். சிவத்தல தரிசனத்தைத் தொடங்கி ஒரு சுற்றுகூட வரவில்லை; அதற்குள்ளாக அவனுக்கும் முடிவா? எந்தப் பிறவியில் குனித்த புருவத்தையும் கொவ்வைச் செவ்வாயையும் தரிசிப்பது? எந்த ஜென்மத்தில் குஞ்சிதபாதத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைவது?
வருத்தத்தில் ஆழ்ந்த சுசரிதன், மறு நாள் அதிகாலையிலேயே திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரிடம் வந்தான். ‘பழனத்துப் பழையவரே! உம் பாதமே கதி!’ என்று பரமனார் அடி பணிந்தான். உயிர்களுக்கெல்லாம் தாயுமாகித் தந்தையுமாகித் தாங்குபவராயிற்றே! அந்தத் தனிச் சிறுவனை விட்டு விடுவாரா? அதுவும் கள்ளமற்ற பாலகனாயிற்றே, கைவிடுவாரா? சுசரிதனை தன் மகனாகவே (எல்லா உயிர்களும் அவரின் மக்கள்தாமே) ஏற்றுக் கொண்டார். தமது அருளையே அவனுக்குக் கவசமாக்கி திருவையாறுக்கு அனுப்பி வைத்தார். வேண்டிய பொழுதில் அங்கு வருவதாக வாக்கும் கொடுத்தார்.
திருவையாற்றுக்குச் சென்ற சுசரிதன், தெற்குக் கோபுர வாயிலிலேயே சிவநாமத்தை ஓதிக் கொண்டு உட்கார்ந்தான். ஐந்தாவது மாலையில் எமன் வந்தான். மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலில் இட்டு உதைத்தது போலவே, சுசரிதனுக்காகவும், எமனை காலின் அடியில் இட்டு நசுக்கிய சிவனார், சுசரிதனுக்கு இல்லற வாழ்க்கையும் மகவு சுகமும் அருளினார். பல்லாண்டு காலம் பற்பல தலங்களுக்குச் செல்லும் பேற்றையும் வழங்கினார்.
சுசரிதனுக்காக, திருவையாற்றுத் தெற்குக் கோபுர வாயிலில் எமனோடு போரிட்ட மூர்த்திக்கு, ‘ஆட்கொண்டார்’ என்று திருநாமம். திருப்பழனத்தில் அவனுக்கு அருள் வழங்கி, அவனது ஆபத்து நீங்க வழிசெய்த பழனத்தாருக்கு ‘ஆபத்சகாயர்’ என்று திருநாமம். பழனத்து ஆபத்சகாயர் தாம், ஐயாற்றில் ஆட்கொண்டாராக எழுந்தருளியிருக்கிறார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் உள்ளார். சன்னதியில் சுவாமிக்கு எதிரில் நந்தியம் பெருமானும் அமர்ந்திருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு யமபயம் கிடையாது. எனவே இது மோட்ச தலமாக போற்றப்படுகின்றது.
ஆட்கொண்டார் சன்னிதியில் எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டுமாம். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக கூறுகிறார்கள். இங்கு ஆட்கொண்டேசரே திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும் இரவு எம வாகனத்தில் ஆட்கொண்டார் உற்ஸவர் திருவீதி உலாவும் நடைபெறும்.
இந்த காரணங்கள் கொண்டே, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.
சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றார். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார். அத்துடன் நில்லாது, ஐயாற்றெம்பெருமான் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.
திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை, கபிஸ்தலம் வழியாக திருவையாறு வரலாம். அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வழியாகவும் திருவையாறு வரலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment