Monday, May 20, 2024

உத்தர சுவாமிநாத சுவாமி, மலாய் மந்திர் புதுடெல்லி...



உத்தர சுவாமிநாத சுவாமி, மலாய் மந்திர்
உத்தர சுவாமிநாத சுவாமி கோயில், மலாய் மந்திர்
(2 கோணங்கள்)

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.
1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள். இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். ‘ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?' என்று குறிப்பிட்டார்.
1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் "உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். " என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன. அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், "ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்"என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, "பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ," என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து," ‘சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்' என்றார். ' அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். "ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்' உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

சிற்ப கலா மண்டபம்

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்
மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள். பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து kakaகலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன. 
S. Pattabhiraman
சித்ரா மூர்த்தி
சித்ரா மூர்த்தி
கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ. எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். "பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது. விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது." என்று ஆசி அருளினார். அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.

தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்' என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்' என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...