Tuesday, May 21, 2024

இலங்கையில் சீதை அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா.

பல வருடங்களுக்கு பிறகு 
புராண வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான
#இலங்கையில் 
சீதை சிறைபட்டுக்கிடந்த அசோகவனத்தில் அமைக்கப்பட்டுள்ள
#நுவரெலியா 
#சீதாஎலியா 
#சீதை_அம்மன்
திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா  விமரிசையாக நடைபெற்றது. 
ராமாயணத்தின் மிக முக்கிய நோக்கமே கடவுளே அவதாரமாக தோன்றி எந்த ஒரு சவாலான சூழலிலும் அற நெறிகளை பின்பற்றி, இந்த மானுட சமூகம் அறத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அமைந்த ஒரு அற்புத காவியம்.

இந்து தர்மத்தில் ராமாயணம், மகாபாரதம் என இரு காவியங்கள் இருந்தாலும், இதை எல்லாம் செய்தால் அறத்தின் படி வாழலாம் என ராமாயணமும், இவற்றை எல்லாம் செய்யாமல் இருந்தால் அறத்தை கடைப்பிடித்து வாழமுடியும் என உணர்த்துவதாக உள்ளது.
ராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் காட்டுக்குச் சென்ற போது, சீதையை ராவணன் கவர்ந்து இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைபிடித்து வைத்ததாக கூறப்படுகிறது. 

சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற இடம் அசோகவனம். சீதை, பகவான் ராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம் அசோக வனம். தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை அசோகவனத்தில் அருள் வழங்கும் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம், `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்று வழங்கப்படுகிறது. இந்தக் கோயில் இலங்கையில் `நுவரெலியா’ என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 
சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது. 

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கிறது நுவரெலியா மாவட்டம். இங்கிலாந்து நாட்டவரால் `சின்ன இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் இயற்கை வளம் நிறைந்த பகுதி இது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும் தேயிலைத் தோட்டமும் நிறைந்து பார்வைக்கு எட்டிய தொலைவுவரை பச்சைப் பசேல் என்று பசுமையைப் போர்த்தியபடி எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது நுவரெலியா. இலங்கையில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியில் அசோகவனம் அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றதைப் போலவே வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது. இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள்.

அன்று ராவணனால் எந்த இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டாளோ, அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிகிறாள் சீதை. உள்ளூரில் இந்தக் கோயிலை `ஆதிசக்தி சீதையம்மன் கோயில்’ என்றும், ‘நுவரெலியா சீதாஎலியா’ என்றும் அழைக்கிறார்கள். `நுவரெலியா சீதாஎலியா’ என்பது சிங்களப் பெயர். 

புராண வரலாறு:
தண்டகாரண்ய வனத்தில் இளையபெருமாள் லட்சுமணன் மற்றும் சீதாதேவியுடன் ராமபிரான் வனவாசம் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது ராவணன் தனது மந்திர தந்திரத்தின் மூலம் சீதையைப் புஷ்பக விமானம் மூலம் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சீதா தேவி அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டாள். 

அசோக வனத்தில், அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதை தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டியிருக்கிறார்கள். இங்கு அனுமனுக்கு தனிச் சந்நிதி உண்டு. சீதை தேவி ராம லட்சுமணர்களுடன் அருள் பாலிக்கிறார் என்ற போதும், இங்குப் பிரதான வழிபாடு அன்னை சீதா மாதாவுக்கே.
சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையெங்கும் சிவப்பு நிறப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மையாக இருந்த மலர்கள் அனுமனின் கைப்பட்ட காரணத்தால் சிவப்பு நிறத்துக்கு மாறின என்று உள்ளூர் வாசிகள் சொல்கிறார்கள். மலைக்கு மேலே உயரமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ந்த சூழலே நிலவிக்கொண்டிருக்கிறது. மலையைத் தழுவிச் செல்லும் கார்மேகம், மழை, எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்று, அருவி என இயற்கை மாறாத சூழலில் அம்மனைத் தரிசிப்பதே தனி அனுபவமாக இருக்கிறது. 

கோயிலுக்கு வெளியே சிறு அனுமன் சந்நிதி ஒன்று காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிதறு தேங்காயை உடைத்துச் செல்கிறார்கள். அனுமன் சந்நிதிக்குப் பின்னால் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை தேவி ஆகியோரின் விஸ்வரூப மூர்த்தங்கள் காணப்படுகின்றன. மூவரையும் வணங்கும் கோலத்தில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.

கோயிலுக்குள்  நுழைகையில், `ஸ்ரீராமஜெயம்’ எனப் பெயர் பொறிக்கப்பட்ட ராஜகோபுர நுழைவாயில் நம்மை வரவேற்கும். அந்த ராஜகோபுரத்தின் இரண்டு தூண்களிலும் துவார பாலகர்களைப் போன்று கதையுடன் அனுமனே நிற்கிறார். நுழைவாயிலிலிருந்து, கீழிறங்கும் படிக்கட்டு வழியே கோயிலுக்குள் நுழையும்போது ராவண அருவி மலையிலிருந்து விழுந்து காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீதையம்மன் கோயிலுக்குப் பின்பு விழும் `சீதா அருவி’ ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது. இந்த ஆறு எப்போதும் வற்றுவது இல்லை என்று கூறுகிறார்கள். மேலும், அசோகவனத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட காலத்தில் இந்த அருவியில்தான் தினமும் நீராடி, கரையில் காணப்படும் பாறையில் கூந்தலை உலர்த்துவாள் என்கின்றனர். இந்த ஆற்று நீர் எந்தவித சுவையும் இல்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவளது சாபமே காரணம் என்றும் கூறுகிறார்கள். 

எப்போதும் வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையைக் கேட்டபடியே கோயிலுக்குள் நுழைந்தால், கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. வலதுபுற சந்நிதியில் அனுமன் அருள்புரிகிறார். இடது பக்கம் காணப்படும் சந்நிதியில் சீதை தேவி ராமர் மற்றும் லட்சுமணனுடன் அருள்புரிகிறாள். 

இவர்களைத் தரிசித்துவிட்டு கீழே ஆற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டு வழியே சென்றால், ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அவை, அனுமனின் பாதத் தடங்கள் என்று கூறுகிறார்கள். பாறைகளை விடவும் அனுமன் வலிமையானவனாக இருந்தான் என்றும், சீதா தேவியைக் காண அனுமன் வானத்திலிருந்து குதித்தவேளையில் பாறையில் உருவான பள்ளங்களே அவை என்றும் மக்கள் கூறுகிறார்கள். பாறையில் பதிந்த அனுமனின் பாதங்களை, மக்கள் விளக்கேற்றி வணங்குகிறார்கள். அதற்கு அருகில் பாறைகளில் காணப்படும் பள்ளங்கள் சீதாதேவியின் கண்ணீர் தேங்கியவை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்கு சீதையம்மனின் பழைமையான சிலை ஒன்று கிடைத்ததாம், அதன் பிறகுதான், தற்போது காணப்படும் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 

ராமாயணத்தை முதன்முதலில் வால்மீகி எழுதியதும் அதற்கு `சீதாயாணம்’ என்றே பெயரிடவிரும்பினார். ஆனால், அன்னை சீதையே வால்மீகியிடம் வேண்டிக்கொண்டு அதை `ராமாயணம்’ என்று பெயரிட்டு வழங்குமாறு கூறினாள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குத் தாய் சீதை ராமாயணக் காவியத்திலும் வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறாள். 

இராவணனின் யானையின் கால்தடங்கள்:

இந்த பகுதியில் காணப்படும் பல வட்டமான தடங்கள், இராவணனின் யானையின் கால்தடம் என கூறப்படுகிறது. சீதா தேவியைப் பார்க்க யானையில் இராவணன் வந்ததாக தெரிகிறது.

வரம் தரும் மரம்:

இந்த கோயிலில் ஒரு மரம் இருக்கின்றது. இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை வைத்து ஒரு துணியில் காசுகளை கட்டி வைத்து வணங்கி செல்கின்றனர். இப்படி செய்வதால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக கூறுகின்றனர்.

ஜெய் ஸ்ரீ ராம் 🙏படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...