எம பயம் நீக்கும் நான்கு யுகம் கண்ட திருவிசநல்லூர்!
அருள்மிகு
சவுந்தரநாயகி, சாந்த நாயகி உடனுறை யோகநந்தீஸ்வரர், சவயோகிநாதர் சுவாமி
திருக்கோவில்
திருவிசநல்லூர்.
தஞ்சாவூர் மாவட்டம்.
படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார்.
சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார்.
எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன.
ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,”அழைப்பது யார்?” என கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது).
அவன் அப்படி அழைத்தது “பிரதோஷ தினம்’ ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது.
அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது.
நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.
இத்தலம் நான்கு யுகம் கண்ட தலமாகும் எனப் புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார்.
திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது.
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதி:
மற்ற சிவாலயங்களில் விஷ்ணு பகவான் தனியே காணப்படுவார். ஆனால் இங்குள்ள ஆலயத்திலோ தனி சன்னதியில் பகவான் லட்சுமி நாராயணன் எனும் பெயரில் அவர் தனது மனைவியான மஹாலஷ்மி தேவியுடன் சேர்ந்து காட்சி தருகிறார்
விஞ்ஞானம் அடிப்படையில் சூரிய கடிகாரம் கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது.
காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும்.
தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார்.
கும்பகோணத்திற்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது. திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது. திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றும் அழைக்கின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment