Tuesday, May 14, 2024

குளத்து நீரில் விளக்கு ஏற்றி சிவத்தொண்டுகள் பல புரிந்த நமிநந்தியடிகள் நாயனார்.

*63 நாயன்மார்களில் ஒருவரான , சிவபெருமானுக்கு விளக்கு ஏற்ற நெய் கிடைக்காமல் போக,
குளத்து நீரில் விளக்கு ஏற்றி சிவத்தொண்டுகள் பல புரிந்த நாயனாரான
#நமிநந்தியடிகள்_நாயனார் குருபூஜை: (#வைகாசி_பூசம்)
* 63 நாயன்மார்களின் வரலாற்றை ஆராய்ந்து தொகுத்து பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தை சைவர்களுக்கு வழங்கிய #தெய்வச்சேக்கிழார்_பெருமான் குருபூஜை:
(#வைகாசி_பூசம்)
1.#நமிநந்தியடிகள்_நாயனார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்தனர். நமிநந்தியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். நமிநந்தியடிகள் நாயனார் இறைவனுக்கு விளக்கேற்ற பெரும் போராட்டமே நடத்தினார். நமிநந்தியடிகள் நாயனார் நெய்க்குப் பதிலாகக் குளத்துத் தண்ணீரைக் கொண்டு கோவில் முழுவதும் விளக்கு ஏற்றி, அதில் அற்புதம் செய்து இறைவன் அருள் பெற்றார்.
சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.
சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், 'தொண்டர்களுக்கு ஆணிப்பொன்' என்று, திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார்.
“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்கிறது திருத்தொண்டத் தொகை.

#ஏமப்பேரூர் என்ற ஸ்தலத்தில் அவதரித்த நமிநந்தியடிகள் நாயனார்:

சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர்(தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படுகிறது)
என்ற ஸ்தலத்தில் அந்தணர் குலத்திலே, அவதரித்தவர் நமிநந்தியடிகள் நாயனார். அந்தணர் குலம் தழைத்தோங்க அவதரித்த இந்த நாயனார், சிவபெருமானிடம் மாறாத பக்தியும் சிவகைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக விளங்கினார். வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். (இங்கு மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்)
#குளத்து நீரால் விளக்கு ஏற்றுதல்:

நமிநந்தியடிகள் நாயனார் தினமும் தன்னுடைய வீட்டில் சிவ வழிபாட்டினை முடித்து விட்டு, அருகிலிருந்த திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கி, பகலில் சிவாலயத்தில் தொண்டுகள் செய்து, இரவு வீடு திரும்பி சிவவழிபாடு மேற்கொண்டு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். அங்கு அழகாக விளக்குகள் ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். அப்போது நமிநந்தியடிகள் நாயனார் அரநெறியப்பருக்கு திருவிளக்குகள் ஏற்ற எண்ணி விருப்பம் கொண்டார். அவர் கையில் நெய் இல்லை. அவரின் இருப்பிடமோ தொலைவில் இருந்தது. ஆதலால் திருக்கோவிலின் அருகே உள்ள வீட்டில் நெய்யைப் பெற்று அறநெறியப்பருக்கு திருவிளக்கு ஏற்ற எண்ணம் கொண்டார். அச்சமயத்தில் சமணர்கள் பலர் திருவாரூரில் வாழ்ந்து வந்தனர். நமிநந்தியடிகள் திருவாரூர் திருக்கோவிலின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று அறநெறியப்பருக்கு விளக்கு ஏற்ற நெய் கொடுத்துதவுமாறு வேண்டினார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன்தான் கையில் தீயை வைத்துள்ளாரே. அவருக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் நெய்க்குப் பதிலாகத் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்.” என்று ஏளனம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த நாயனார், அறநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்த முற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது சிவனார் அசரீரியாக, நமிநந்தி! கவலை வேண்டாம். உன்னைக் கேலி செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.
பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வியந்தார்கள். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

#தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளரானார் :

இறையருளால் பல நாட்களாக நமிநந்தியடிகள் நாயனார் நீரால் விளக்கு ஏற்றி, திருவாரூர் கோயிலை ஒளியூட்டினார்.
இதனைக் கேள்வியுற்ற சோழ மன்னன், அகமகிழ்ந்து அவரைத் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளராக நியமித்தார். அத்தோடு கோயில் திருப்பணி நடைபெறுவதற்காக வேண்டி பொன்னும் பொருளும் கொடுத்து உதவினார். அடிகளார் எம்பெருமானுக்குப் பெருவிழாக்கள் பல நடத்தி பெருமிதம் கொண்டார்.

#திருவிளையாடலைக் காட்டிய பங்குனி உத்திரத் திருவிழா:

ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை நமிநந்தியடிகள் நாயனார் முன் நின்று மிக்கச் சிறப்பாக நடத்தி வந்தார். திருவிழாவின் போது, தியாகராஜர் 'மணலி' என்ற ஊருக்கு எழுந்தருளுவது வழக்கம். அப்போது அவரை வழிபடத் தொண்டர்களும், அன்பர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்து கொண்டனர். அவர்களுடன் நமிநந்தியடிகள் நாயனாரும் இவ்விழாவில் கலந்து கொண்டு தியாகராஜரை வழிபட்டார். பின்பு மாலையில் தியாகராஜர் முன்போல திருவாரூர் கோயிலில் எழுந்தருளினார். நமிநந்தியடிகள் நாயனார் நள்ளிருளில், தமது ஊரை அடைந்து, வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தார். மனைவியை அழைத்து, "தண்ணீர் எடுத்து வா. பல தரப் பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத் தான் பூஜை செய்ய வேண்டும்" என்றார். மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் சோர்வின் காரணமாகத் திண்ணையில் சற்றுக் கண் அயர்ந்து உறங்கிவிட்டார். அப்போது கனவில் பேரொளி பொங்கத் தோன்றிய சிவபெருமான், "நமிநந்தியாரே! திருவாரூரில் பிறந்த அனைவருமே சிவகணங்கள் ஆவர். நீங்கள் நினைப்பது போல் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். நீங்களே உங்கள் கண்களால் காண்பீர்!" என்று கூறி மறைந்தார். கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். உடனே வீட்டில் பூஜை செய்யலானர். மறுநாள் பொழுது புலர்ந்தும், எழுந்து வீட்டில் வழிபாடு மேற்கொண்டுவிட்டு திருவாரூர் சென்றார். அப்போது அங்கியிருந்தோர் எல்லோரும் சிவகணங்களாகத் தெரிந்தனர். உடனே நமிநந்தியடிகள் நாயனார் அவர்களை நமஸ்கரித்தார். சில நிமிடங்களில், அவர்கள் சுய உருவம் பெற்றனர். சிவபெருமானின் திருவிளையாடலை நினைந்து மனமுருகினார். சிவபெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கும் பொருட்டு எனக்கு இவ்வாறு காட்சியளிக்கச் செய்தான்’ என்று எண்ணியபடி திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

"தொண்டர்களுக்கு ஆணிப்பொன்":
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நமிநந்தியடிகள் நாயனாருக்குத் திருவாரூரை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. தியாகேசர் பெருமானின் திருவடி கமலங்களிலேயே காலத்தைக் கடத்த எண்ணினார். நாயனார் மனைவியாருடன் ஏமப்பேரூரை விடுத்துத் திருவாரூரிலே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், "தொண்டர்களுக்கு ஆணிப்பொன்" என்று, திருநாவுக்கரச நாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவ்வாறு திருவாரூரிலே வாழ்ந்து வந்த நமிநந்தியடிகள் நாயனார் திருப்பணிகள் பல செய்து திருவாரூர் தியாகேசர் திருவடி நிழலையடைந்தார்.

#குருபூஜை நாள்:

சிவபெருமானுக்குத் திருவிளக்குத் தொண்டு உள்ளிட்ட பல தொண்டுகளைச் செய்த நமிநந்தியடிகள் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் (திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 15-கி.மீ.தூரம் சென்றால் இத்தலத்தையடையலாம்)அ/மி வன்மீகநாதர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் கோயிலும் (இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் இரண்டாம் (தெற்கு) பிரகாரத்தில் இக்கோயில் உள்ளது) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. திருநெய்ப்பேர் வன்மீகநாதர் திருக்கோயிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தியடிகள் நாயனாரின் உருவச் சிலை உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

2.#தெய்வச்சேக்கிழார்:

*அவதார தலம்-குன்றத்தூர் 
*முக்தி தலம்    -தில்லை     
*குருபூசை திருநட்சத்திரம்- வைகாசி பூசம்

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி.

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். 

தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார்பெருமான் . அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது இளைய சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் சமண சிற்றிலக்கிய காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார்.சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதி ஆகியவற்றை விளக்கினார்.பொள்ளாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டத்  திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார்.அடிக்கடி திருத்தொண்டர் புராணம் எந்த அளவு முடிந்துள்ளது என்று ஆவல் மேலிட விசாரித்து கொண்டேயிருந்தான் சோழன் .ஒரு சித்திரை திருவாதிரை நாளில் தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரை திருவாதிரை நாளில் முடித்தார்   எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதூகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம்நடந்தேறியது  

சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது.அதில் 4286பாடல்கள் உள்ளன . விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

தெய்வச் சேக்கிழார்:

சேக்கிழார் என்பவர் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

சேக்கிழார் நாயனார்
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டர் சீர் பரவுவார், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளது.

*பெயர்க்காரணம்:

சே என்பதற்குக் காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.

*வரலாறு:

கீழ்வருகின்ற சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம் எனும் உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்ற நூலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்நூலில் வருகின்ற சில செய்திகளையும், இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்பதையும், மா. இராசமாணிக்கனார் எனும் ஆய்வாளர் மறுத்துள்ளார்.

*பிறப்பு:

பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாகச் சேக்கிழார் பிறந்தார்.இவருக்குப் பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்குப் பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.

*இளமைப் பருவம்:

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்குக் கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? மலையினும் பெரியது எது? என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புப் பட்டத்தினைத் தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.

*அமைச்சர் பணி:

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தியதாகவும், அதன் காரணமாகச் சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலைப் படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணிச் சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.

மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபது சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை சடையனார்,தாயார் இசைஞானியார் வரலாற்றையும் ஊர் ஊராகச் சென்று அதிக தகவல்களைத் திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

*திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்:

புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

*மன்னன் சிறப்பு செய்தமை:

சேக்கிழார் பெரியபுராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினைச் சிவபெருமானாகக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.

*இராசமாணிக்கனார் ஆய்வு:

சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். மா. இராசமாணிக்கனார் அவரது பெரியபுராண ஆய்வு நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.
மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியைப் படித்ததும், அதற்குச் சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளைப் பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார்.

சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார். இக்காலம் பொ.ஊ. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.

முத்திப் பேறு:

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...