Tuesday, May 7, 2024

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன ?

உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே. 1
தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே 2

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே 3

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே. 4

வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே 5

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே. 6

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே. 7

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே. 8

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே. 9

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே.
வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன ?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... 

ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... 

என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். 

வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...