Tuesday, May 21, 2024

வேதபுரி என்னும் புதுச்சேரி சைவத் தலமான வில்லியனூர் (வில்லியநல்லூர் )திருக்காமீஸ்வரர்

வேதபுரி என்னும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற சைவத் தலமான 
#வில்லியனூர் (வில்லியநல்லூர் )
#திருக்காமீஸ்வரர்
#கோகிலாம்பிகை திருக்கோயில் 
#வைகாசி_விசாக பிரம்மோற்சவம் #திருத்தேரோட்டம் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது 🙏🏻 🙇❤️
*சோழர் காலத்தில் கட்டப்பட்ட  #புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற #வில்லியனூர் என்ற #வில்லியநல்லூர்
#திருக்காமீச்சரம்
#திருக்காமீஸ்வரர்
திருக்கோயில் வரலாறு:

புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.

மூலவர் : திருக்காமீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்மன்: கோகிலாம்பிகை

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்

தல விருட்சம் : வில்வம்

புராண பெயர்: வில்வநல்லூர் ( வில்லிய நல்லூர்) 

ஊர் : வில்லியனூர்

மாநிலம் : புதுச்சேரி

தல சிறப்பு :
பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் - சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் - பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் - வில்லைப்புராணம் கொண்ட கோவில் - ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும் தலம்- பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம் -புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.

இக்கோயிலின் உள்ளே வடபுறத்தில் பிரம்ம தேவரால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் மிகப்பிரம்மாண்டமாக நடுவில் மஞ்சள் நிறத்தில் தக தகவென்று காட்சி தரும் நீராழி மண்டபத்துடன் காட்சி தருவதும் காண்கிறோம்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

சிவன் தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்குச் சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தைப் போக்கும் படி வேண்டினார்.

சிவனும் தொண்டை நாட்டில் முத்தார நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும் எனக் கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவபூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார்.

பின்னர் பிரம்ம தேவர் வழிபட்ட சிவலிங்கம் மண்மூடி மறைந்த அந்த இடம் முழுவதும் வில்வ வனமாக மாறிவிட்டது. உரியக் காலத்தில் தன்னை வெளிப்படுத்திக்
கொள்ளத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.

ஒரு காலத்தில் வில்வமரக் காடாக விளங்கிய இத்தலத்தில் இறைவன் வெளிப்பட்டது ஒரு சுவையான கதை. உழவார் கரை பண்ணையார் வளர்த்த பசு ஒன்று சிவலிங்கம் மறைந்துள்ள புற்றின் மீது பால் சுரப்பதைக் கண்ட மக்கள், தங்கள் மன்னனிடம் கூற, மன்னனும் அங்கு வர, அங்கே மறைந் திருந்த சுயம்புலிங்கம் வெளிப்பட்டது. இம்மன்னன் இறைவனுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பினான் என தலபுராணம் கூறுகிறது. இது போன்று மற்றொரு புராணக் கதையும் உண்டு. இச்செய்தி வீரராகவக்கவி இயற்றிய வில்லைப் புராணத்தில் காணப்படுகிறது. சோழவள நாட்டைச்சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குட்ட நோய் தாக்கியது. மனம் நொந்து இருந்த மன்னனிடம் புண்ணியகீர்த்தி என்ற அந்தணர் வந்தார். அவரின் ஆலோசனைப்படி தொண்டை வள நாட்டில் வில்வவனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமீஸ்வரர் ஆலயம் சென்று பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபடச் சென்னார்.

அவ்வாறே மன்னன் தருமபாலனும் செய்ய, அவனது நோய் அனைத்தும் நீங்கியது.

அப்போது அந்த குளத்திலிருந்து அம்பிகையின் திருவுருவம் கிடைக்கவே அந்த திரு உருவத்தை எடுத்து கோகிலாம்பிகை என்ற திருப்பெயருடன் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

 பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தம் இது. ஹிருத்தாபநாசினி, பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தினி எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி என்று பட்டியல் நீள்கிறது.வில்லைப் புராணம் : இக்கோவிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் வில்லைப்புராணம் ஆகும். 495 பாடல்களைக் கொண்ட இதனை இயற்றியவர் வீரராகவக்கவி என்ற புலவர். இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையே சாரும். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் பேராசிரியராக இருந்த ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர் தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து சாமிநாத அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940-ம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

கோயில் கட்டமைப்பு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் சேர்க்கைகள் இடைக்கால சோழர்கள் மற்றும் விஜயநகர் பேரரசால் கட்டப்பட்டவை என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் தற்போதைய அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ராஜா நாராயண சம்புவராயர் (1339-63) என்பவர் சுமார் 850 ஏக்கர்கள் (340 ha) நிலம் நன்கொடை அளித்ததாக கல்வெட்டுகள் உள்ளன. 

பிரசவ நந்தி : 

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள சுகப்பிரசவ நந்தி  அம்மன் சன்னிதியை நோக்கியவாறு இது அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும் இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி திருப்பி வைத்துவிட வேண்டும். நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். இதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து அதற்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அம்மனை நோக்கிய வடக்கி திசையில் அந்த நந்தியை இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே நன்றிக்கடனும், பரிகாரமும் ஆகும்.

இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன. இறைவிக்கு கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை எனப் பல பெயர்கள் உள்ளன. திருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். முருகன் பெயர் முத்துக்குமரன் என்பதாகும். இவ்வாலயம் அரிய கலைநயம் கொண்ட சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபத்தின் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் காட்சி தத்ரூபமாக காட்சியளிக்கிறது. குழந்தை வெளியே வருவது, இரண்டு பெண்கள் தாங்கிப் பிடிப்பது என உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தின் ஒரு நமக்கு வலதுபுறத்தில் அதிகார நந்தி மற்றும் சுயசாம்பிகை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் சமயக் குறவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரையும், சந்தான குறவர்களான மெய் கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார், பொள்ளாப்பிள்ளையார் ஆகியோருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை சரி செய்யப்பட்டு உள்ளது.

ஈசனின் கருவறை பின்புற கோஷ்டத்தில் பெருமான் காட்சி தருகிறார் பிராகாரம் வலம் வரும்போது பிரம்மா துர்க்கை ஆகியோர் காணலாம். கருவறையில் அம்பிகை அருள் மிகு கோகிலாம்பாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார்.

சிவபெருமானின் சன்னதியைப் பார்த்தபடி ஒரு நந்தியும் அம்பிகையின் சன்னதியைப் பார்த்தபடி மற்றொரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அம்பிகை சன்னதியில் பார்த்தபடி உள்ள நந்திக்கு முன்பாக மற்றொரு சிறிய நந்தி அஷ்டபந்தனம் சாத்தாமல் உள்ளது.

அந்த நந்தியைச் சுகப்பிரசவ நந்தி என்று கூறுகின்றனர். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து சுகப்பிரசவ நந்திக்கு அபிஷேகம் செய்து, பிறகு அந்த நந்தியின் முகத்தை தெற்குப் பக்கமாக இருக்கும்படி திருப்பி வைத்து விட்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவிலின் கண்டாமணி, கி.பி. 1812-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள புரோக்ஸ் போர்னிபரி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இங்குள்ள திருத்தேர் மிகவும் பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இத்தேரின் பழைய அச்சு நீக்கப்பட்டு, இரும்பாலான புதிய அச்சு பொருத்தப்பட்டது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை கவர்னரும் முதல்வரும் வடம் பிடித்துத் தொடங்கி வைப்பது, பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதல் இன்றும் தொடர்கிறது. இத்திருக்கோவிலுக்கு மூன்று தேர்கள் உள்ளன. தேரோட்டத்தில் இம்மூன்றும் உலா வரும்.

இங்கே சூரிய பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. பங்குனி மாதத்தில் 9,10,11 ஆகிய மூன்று தினங்களில் இப்பகுதி வாழ் மக்கள் பலரும் அறிந்திராத செய்தி.விழாக்கள் : இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது. ஆலய தீர்த்தம் ஹிருத்தாபநாசினி. தலவிருட்சம், வில்வமரம். இந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் : விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வில்லியனூர் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியனூர் திருக்காமீசுவரன் கோவில். 


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...