Friday, June 21, 2024

கயாவில் நீத்தார் கடன் செய்தால் முன்னோர்கள் முக்தியடைகிறார்கள்

_காசியிலிருந்து 230 km தொலைவில் கங்கை கரையில் உள்ள  கயா,  அனைத்து மதங்களிலும் மிகப் புனிதமாக கருதப்படுகின்றது. முந்தைய காலத்தில் கயா நகரம், "மகத சாம்ராஜ்ய"த்தின்  ஒரு பகுதியாக இருந்தது. 
இங்குள்ள புனிதமான படித்துறைகள் மற்றும் கோவில்கள் அனைத்தும் இங்குள்ள புனித நதியான "ஃபால்குனா" கரையில் வரிசையாக அமைந்துள்ளன. இந்தி மொழி பிரதானமாக பேசினாலும் மற்ற மொழிகளை அறிந்து கொண்டு பதிலளிகின்றனர். சிலர் தமிழிலும் ஓரளவிற்கு பேசுகின்றனர். "ஃபால்குனா" நதிக்கரையில் விஷ்ணு பகவான் ஆலயம் அமைந்துள்ளது. வைஷ்ணவத் ஸ்தலங்களில் விஷ்ணு பாத கோவில் மிகவும் புனிதமானது.   முன்னோர்களுக்கு பிண்டதானம் அளிக்க முக்கியமான ஸ்தலம்.

கயாவில் நீத்தார் கடன் செய்தால் முன்னோர்கள் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். எப்படி வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரமோ அப்படி தென்னகத்தினருக்கு கயா. கயாவில் வருடம் முழுவதும் 365 நாட்களும் பித்ரு சிரார்த்தம் செய்விக்கப்படுகிறது. கயையில் தங்கள் முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், செல்லப் பிராணிகள், மரம், செடி, கொடிகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். 

பதட்டத்தில் மறக்காதிருக்க  யார் யார் என்று எழுதி   வைத்துக்கொள்வது நல்லது.  அவ்வாறு அளிக்கப்படும் பிண்டத்தால் அவர்கள் நற்கதி பெறுவார்கள். கயா ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் சாந்நித்தியம் உள்ளது.  இங்கு தங்கி நீத்தார் கடன் இயற்ற பல வசதியான தங்குமிடங்கள் விஷ்ணு பாத கோவில் அருகிலேயே உள்ளன. 

கயாபுரி என்கிற கயாவில் ராமர்... சீதை,  லக்ஷ்மனருடன் வந்து தனது தகப்பனார் தசரதருக்கு பிண்ட தானமளித்தது  வரலாறு. 

கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ய பட்டாலும், அதன் நிறைவில், "கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்" என்று பிரார்த்தித்து, அக்ஷய வட ஆலமரம்  இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தம் மிக அதிக நேரம் எடுப்பதாக இருக்கிறது. கிட்டத்தட்ட காலை  9 மணிக்கு ஆரம்பித்தால், பிற்பகல் குறைந்தது மூன்று மணியாவது ஆகும்.

முதலில் "ஃபால்குனா" நதி, பின் விஷ்ணு பாதம், அதன் பின் அக்ஷய வடம் ஆகிய இடங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். "ஃபால்குனா"  நதிக்கரையில் திதி முடிந்ததும், அங்கு  அர்ப்பணிக்கப்பட்ட பிண்டங்களை, ஒரு தாமரை இலையில் எடுத்துக் கொண்டு,  விஷ்ணு பாதக் கோவிலில்  ஸ்ரீவிஷ்ணு பாதம் பதிக்கப்பட்ட சந்நிதியை நோக்கிச் சென்று,  

"ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம்" என துறந்து – விஷ்ணுபாதத்தில் பிண்டம் சமர்பித்து, விஷ்ணுபாத வலம் வந்து,  விஷ்ணு தரிசனம் செய்து அக்ஷய வடம்  சென்று.... 
சிவலிங்க–அக்ஷய வடம் அபிஷேகம் செய்து, 
பிதூர் பிரசாதம் அருந்தி, அன்னதானம், வஸ்தரதானம் செய்து பூஜை முடிக்க வேண்டும்!

வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட தொட்டி போன்ற எண்கோண அமைப்பினுள் விஷ்ணுபாதம் இருக்கிறது. விஷ்ணு பாதத்திற்கு நேராக ஸ்ரீ விஷ்ணுவின் சந்நிதானம் இருக்கிறது. ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சந்நிதிகள் இருக்கின்றன.

கயாவில் "ராம் மந்திர்", "மங்களா கௌரி ஆலயம்" எனும் சக்தி பீடம் ஆகியவைகளும் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள்.  கயாவில் நிலவும் அமைதி மற்றும் தெய்வீக தன்மையானது பரபரப்பான வாழக்கையில் இருந்து இடைவெளியை விரும்பும் அனைவருக்கும் மிக உன்னத விடுமுறையை வழங்குகின்றது. 

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு "ஸ்ரார்தம்" அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம்.  இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது.

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும் சீதையின் சாபமே காரணம் என்கிறார்கள். ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும். இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . 

சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 'தாபசம்', 'இங்குதி' ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேகவைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

"சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார் மாமனாரான தசரதர். "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?'' என்று சீதை தயங்கினாள். "சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை'' என்றார் தசரதர். 

''சரி'' என்று சீதையும்,  பல்குனி நதி,  பசு,  ஒரு பிராமணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும், "உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். 

பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிதுநேரத்தில் ஸ்ரீராம லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். "சீதா, சீக்கிரம் சமையல் செய்'' என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன், "சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர்... என்பது கற்பனை'' என்றார். 

"நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.  பல்குனி நதி, பசு, ஒரு பிரம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்றாள். உடனே ராமர், "சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?'' என்று கேட்க,  அக்ஷயவட ஆலமரம் தவிர மற்றவர்கள் ''நாங்கள் அறியோம்'' என்று சொல்லி விட்டன. 

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்'' என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. "ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியாயுள்ளோம்'' என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். 

ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு, 
"பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது.  தண்ணீர் வற்றியே காணப்படும்'' என்றும், 
''பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன்'' என்றும், 
''இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும்'' என்றும்,
"கயா பிராமணர்கள்" தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள்" என்றும்... 
        சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள்.....

ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து,  யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி,  ''யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார்.  அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும்" என்று அருளினாள். 

மேலும், "கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள். அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும்" என்றும் ஆசிர்வதித்தாள். 

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது...... 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் ... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...