Saturday, June 29, 2024

வடசேரி தழுவிய மகாதேவர் ஆவுடையம்மன் திருக்கோயில் கன்னியாகுமரி...



உமையம்மை 
(பார்வதி தேவி)
எம்பெருமான் ஈசனை தழுவிய தலமான,
நாஞ்சில் நாடான #கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
சிவத் தலங்களில் ஒன்றான 
#நாகர்கோவிலில் உள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமையான ,
பழையாற்றின் கரையோரம் அமைந்துள்ள 
#வடசேரி 
#தழுவிய_மகாதேவர் (#சுயம்பு_ருத்ராட்ச_திருமேனி)
#ஆவுடையம்மன் 
திருக்கோயில் வரலாறு:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ளது தழுவிய மகாதேவர் ஆலயம்.

மூலவர்: தழுவிய மகாதேவர் (சுயம்பு ருத்ராட்ச திருமேனி)

அம்மன்: ஆவுடையம்மன் 

தல விருட்சம்: வில்வம் 

ஊர்: வடசேரி (நாகர்கோவில்) 

மாவட்டம்: கன்னியாகுமரி 
நாகர்கோவில் நகரின் பிரதான வணிக பகுதியான வடசேரியில் பிரசித்தி பெற்ற கனகமூலம் சந்தை உள்ளது. இந்த சந்தையால் மட்டுமல்ல வடசேரிக்கு பெருமை. இந்த சந்தையில் இருந்து சுமார் அரைமைல் தொலைவில் அமைந்துள்ள தடிமார் கோயில் என்று அழைக்கப்படும் தழுவிய மகாதேவர் கோயிலும் வடசேரிக்கு பெருமை சேர்க்கிறது. தாணுலிங்கம், தழுவியலிங்கம், பூதலிங்கம் இவர்களது ஆலயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களாகும்.

 சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த திருக்கோயில். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கும் முந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாக இக்கோயில் திகழ்ந்து வருகின்றது.

நெருக்கடியான சந்தையின் அருகே அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது வடசேரி தழுவிய மகாதேவர் கோயில். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் இரண்டு பிரகாரத்தை உடையது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோயில், வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் பழயாற்றின் கரையோரம் அமைந்ததால் இவர்கள் மூவரும் சகோதரர்கள் போன்று கருதப்பட்டு வந்தனர்.

உட்கோயில் வாசலின் இருபக்க சுவர்களில் விநாயகரும், சுப்பிமணியரும் உள்ளனர். உட்பிரகாரத்தில் கன்னிவிநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், சுரதேவர் சன்னதிகள் உள்ளது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. சுரதேவர் சம்ஹார மூர்த்தியின் ஒரு அரிய அம்சமாகும். மிக சில கோயில்களில்தான் இந்த திருஉருவத்தை காணமுடியும். இந்த உருவத்தை சிவபெருமான் எடுத்ததற்கு கூறப்படும் காரணம் சுவையானது. சிவனும், திருமாலும் ஒருமுறை விளையாட்டாக சண்டையிட்டனர். அப்போது திருமால் கொடியசுரத்தை உருவாக்கும் ஒரு அம்பை சிவபெருமான் மீது எய்தார். அதை தாங்கி நிற்க சிவபெருமான் மூன்று தலைகள், ஒன்பது கண்கள், நான்கு கைகள், மூன்று கால்கள் கொண்ட திருஉருவமாக மாறினர்.
இக்கோயிலில் உள்ள சிலையில் மூன்று தலை, ஆறு கண்கள், மூன்று கை, கால்களை தெளிவாக காணமுடியும். வலதுபக்கம் இரண்டு கைகள் மற்றும் கால்கள் தெளிவாகதெரியும். இடதுபக்கம் ஒருகையும், காலும் இருப்பதை காணமுடியும். இடது கையில் ஒரு ஓலைச்சுவடியும், உள்வலது கையில் ஒரு மருந்து தெளிக்கும், வெளி வலது கையில் திரிசூலமும் உள்ளது. உட்பக்கமுள்ள வலது கால் தூக்கிய நிலையில் உள்ளது. சுரதேவ மூர்த்தியை வணங்கினால் எந்த காய்ச்சலும் மாறிவிடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். பக்தர்கள் இவரது தலையில் நல்லமிளகு அரைத்து பூசுவர்.இங்கு மூலவர் தழுவியமகாதேவர். பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார். அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் மகாதேவர் அவரை அப்படியே தழுவி தன்னுடன் அழைத்துக் கொண்டார். அது முதல் இக்கோயிலின் மூலவர், தழுவிய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்றருளுகிறார்.

தழுவிய மகாதேவர் திருமேனி ருத்ராட்சம் அம்சம் கொண்டது என்பதால் சித்தர்களால் பூஜிக்கப்பட்ட ஆலயம் எனவும் பெயர் பெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகளும் திருவிழாக்களும் நடத்தப்பட்டன.

இந்த கோயிலின் பின்பக்கம் ஒரு நீராவி போன்ற தெப்பக்குளம் போன்று உள்ளது. இந்த குளத்தில் இருந்து பெண் ஒருவர் தினமும் குவளையில் தண்ணீர் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யும் முயற்சி செய்யும்போது எல்லாம் அந்த குவளையோ உடைந்து விடுவதாகவும், அதனை தொடர்ந்து அக்குவளை உடைந்து விடுவதால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்ய முடிவெடுத்து அந்த குளத்தில் குதிக்கும் போது, மகாதேவர் அந்தப் பெண்ணை தழுவி அவருக்கு முக்தி கொடுத்தமையால் தழுவிய மகாதேவர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஆலயத்தின் மகாதேவருக்கு எதிரே ஒருபுறம் ஆவுடை நாயகி அம்மனும் சுற்றுப்புறங்களில் நோய் தீர்க்கும் ஜீரா தேவர், முருகன், பூதத்தான், சனீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி போன்ற கடவுள்களும் உள்ளன. மார்கழி மாதம் 10 நாட்கள் விசேஷமும், ஐப்பசி மாதம் பௌர்ணமி விசேஷமும், அன்னாபிஷேகம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போன்றவை இக்கோயிலின் முக்கிய நாட்களாகும்.

நோய் தீர்க்கும் கோயில் என்பதாக வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

நாட்பட்ட காய்ச்சல்,  மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இவரிடம் முறையிட்டால் நிவர்த்தியாகும்.  இந்த ஜுரதேவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நேர்த்திக்கடனாக மிளகினை அரைத்து ஜுரதேவர் தலையில் பூசுவது இங்கு வழக்கமாம். ஜுரம் வந்தவர்களுக்காக அவர்களவது உறவினர்கள் பாலில் மிளகு போட்டு அரைத்து ஜுரதேவரின் நெற்றியில் சந்தனம் போல் அப்பிவிடுவார்களாம் அதை எடுத்து மறுநாள் ஜுரம் வந்தவர்கள் கஷாயமிட்டு சாப்பிட்டால் நோய் ஓடிப்போய்விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இவரது சந்நிதியில் மிளகுப் பால் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது ..

ஜுரதேவர் அருகில் குரு தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பக்தர்கள் இவருக்கு மஞ்சள் ஆடையும் கொண்டைக்கடலை மாலையும் அணிவித்து வழிபாடு செய்கினறனர். இங்கிருக்கும் சனிபகவான் வித்தியாசமான அமைப்புடன் பாலசனியாக, சாந்தமாகக் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். காகத்தை கையிலும் ஏந்தியிருக்கிறார். இவரை வணங்கினால் பாலாரிஷ்டம், குழந்தைகளுக்கு வரும் தீராத நோய்கள் போன்றவை குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்திருத்தலத்தில் உள்ள  மூலவர் தழுவிய மகாதேவர் சுயம்பு லிங்கமாகும். அருகில் இருக்கும் அம்பாள் அழகோ அழகு, ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்ற கோலத்தில் பக்தருக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த மூலவருக்கு தழுவிய மகாதேவர் என்ற  பெயர்வர காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார் என்றும், அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கன்னிப்பெண் ஆவுடையம்மாள் தவறாமல் இந்தச் சிவனைக் காண வருவாள். ஈசன்மேல் அளவில்லாத காதல் அவளுக்கு. ஆண்டாள் அந்த ஸ்ரீரங்கநாதனிடம் எத்தனை அன்பு வைத்திருந்தாளோ அதுப்போல் இவளும் ஆடலரசனின் மேல் அளவில்லாத காதல் கொண்டு தினமும் காலையும் மாலையும் பூஜை செய்து இறைவனை கண்ணார கண்டு பிறகு வீடுபோவது இவளது தினசரி வழக்கமாக இருந்ததாம்.  

பூஜையுடன் . மணிக்கணக்காய் பாடல்களும் பாட, அவளது பக்தி அங்கு பிரதிபலிக்குமாம். ஒருநாள் ஈசன்மேல் நெஞ்சுருகிப் பாடிக்கொண்டிருக்கும்போது அந்த பரம்பொருளான ஆதிசிவன் ஆவுடையம்மனின் அன்பில் தன்னை மறந்து அவள் முன்தோன்றி, அப்படியே அவளை அணைத்தபடி மறைந்தார். இதனால், அன்றைய தினத்திலிருந்து இந்த தலத்து மூலவரை  ‘தழுவிய மகாதேவர்’  என மக்கள் அழைக்கின்றனர். இங்கு ஈசன் ஆவுடையம்மாளை அன்புடன் தழுவியபடிக் காட்சி அளிப்பதால் இந்த மகாதேவரைத் தொழுதால் இல்லறம் சுகம் பெறும். இனிமை கூடும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் தழுவியமகாதேவர், ஆவுடையம்பாள் சன்னதிகளும், ஜீரதேவர், தட்ஷிணாமூர்த்தி, முருகர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீசாஸ்தா, பிள்ளையார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் மார்கழி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். அதுவும் மிக அபூர்வமாக, இந்த வில்வ மரத்தின் இலை இருபத்தொரு தளங்கள்(இலைகள்) கொண்டதாக இருக்கிறது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் காந்தி பார்க் என்னும் பூங்கா உள்ளது முன்பு எல்லாம் இது திறந்துதான் இருக்குமாம். ஸ்கூல்க்கு கட்டடித்து வரும் பசங்க இங்கதான் பொழுது போக்குவார்கள் என்பதால் இப்பொழுது பூட்டுப்போட்டு குறிப்பிட்ட சிலசமயங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு திறந்துவிடுகிறார்களாம். பக்கத்தில் உள்ள மலையாள ஸ்கூல் மற்றும் எஸ் எம் ஆர் வி பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம் மதியம் சாப்பாட்டுநேரம் இங்கே வந்து சாப்பிட்டு செல்வார்களாம்.

அந்த பார்க்கினை  தாண்டி வடக்குப்பக்கமாக ஒரு நீண்ட பாதை செல்கிறது .அந்த பாதை வழியே சென்றால் ’தந்தநதி’ ஓடுகிறது. தேவேந்திரனுடைய யானை தனது தந்தத்தால் தண்ணீருக்காகப் பூமியைக் கீறியதில் உண்டான நதி என்பதால் இந்தப் பெயராம். சிலர் இதை கோட்டாறு என்றும் சொல்வார்கள், அதாவது கோடு என்றால் யானை, தேவேந்திரனுடைய யானை தேவேந்திரன் பூஜை செய்ய நீர்கொண்டுவர தன் தந்தத்தை கொண்டு கோடு கிழித்து ஒரு நதியை உருவாக்கியது என்றும், கோடு-கீறிய நதி ஆதலால் கோட்டாறு என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. அதேசமயம் கோட்டாறு என்ற இடம்தான் முன்பு நாகர்கோயிலில் பெரிய வாணிகத்தலமாக இருந்திருக்கிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...