Saturday, June 29, 2024

ஐந்து சபைகள் கொண்ட அந்த ஆலயத்தில் கனகசபை எனும் பொன்னம்பல சபை...

பஞ்ச சபைகள் 05 : சிதம்பரம்
பார்த்தாலே முக்தி தரும் தலம் சிதம்பரம். அவ்வகையில் இந்த தத்துவத்தில் இருந்துதான் அந்த தங்க சபையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள முடியும்.

தங்க சபை, கனக சபை, ருக்மாதீப் எனப்படும் அந்த சிதம்பரம் பொற்சபையினை காணுமுன் அந்த சிதம்பர ஆலயத்தின் தாத்பரியத்தை உணர்ந்தால் இந்த தத்துவம் எளிதில் புரியும்.

அந்த ஆலயம் சங்க காலம் அல்ல வேத காலத்திலே தொடங்கிற்று. எந்த அளவு மிக மிகத் தொன்மையான ஆலயம் என்றால் புராணங்களிலும் இன்னும் வேத உபநிஷதங்களிலும் சொல்லப்பட்ட வெகு சில ஆலங்களில் அதுவும் ஒன்று.

“சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஜாபால தரிசனம், வராஹ உபநிஷதங்களில் அது சொல்லப்படுகின்றது.

அப்படியே ஸ்காந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சிவ புராணம், லிங்கபுராணம் என்றும், உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலும் அது குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அதன் குறிப்புகளை பெறமுடியும்.

நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அதன் தொன்மையினை அறியலாம்.

இப்படியெல்லாம் எந்த ஆலயத்துக்குமில்லா பெரும் சிறப்புகளைக் கொண்ட அந்த ஞான ஆலயம் வசிஷ்டர் காலத்தில் இருந்தே வழிபாடுகள் கொண்ட ஆலயமாக அறியப்படுகின்றது.

அவரைத் தொடர்ந்துதான் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் வந்தார்கள். பின் திருமூலர் வந்தார், பெரும் பெரும் ஞானியர் வந்து வணங்கினார்கள்.

அது பின்னாளில் கணக்கற்று பெருகி வானத்து நட்சத்திரக் கூட்டம் போல எண்ணமுடியாத அளவு அதிசயங்களும் அவதாரங்களும் நிரம்பிய ஆலயமாயிற்று.

இன்று 51 ஏக்கர் பரப்பில் பெரும் கோபுரத்துடன் நிற்கும் அந்த ஆலயம், அன்று சுயம்பு லிங்கமாக தில்லை மரங்களிடைத் தொடங்கி இன்று மாபெரும் ஆலயமாக‌ பரந்து நிற்கின்றது.

ஹிரண்ய வர்மன் எனும் மன்னன் முதல், முற்கால சோழர்கள் பாண்டியர்கள் தொடங்கி நாயக்க மன்னர்கள் மராட்டியர்கள் வரை அங்கு திருப்பணி செய்த நீண்ட வரலாற்றை கொண்டது.

வசிஷ்டர் தொடங்கி வியாக்ர பாதர், பதஞ்சலி முனிவர் தொடங்கி மாணிக்கவாசகர், நந்தனார் வரை பெரும் பெரும் அவதாரங்கள் வந்து வணங்கி முக்திபெற்ற தலம் அது.

அதன் அருமையும் பெருமையும் பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு நீளமானது.

சிவனின் நடராஜகோலத்தை தாங்கி நிற்கும் அந்த ஆலயமே பராந்தக சோழன் அமைத்த பொற்கூரையினை தாங்கி நின்றது. பின் மாலிக்காபூர் காலத்தில் அந்த பொற்கூடை கொள்ளை போனாலும் சாம்பாஜி மன்னன் காலத்தில் அவ்வாலயம் தன் பொற்கூரையினை திரும்ப‌ பெற்றுக்கொண்டது.

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அந்த சபையினை மட்டும் பொன்னால் மூடினார்கள்?

ஏன் எந்த ஆலயத்திலும் இல்லா அளவு அங்கு மட்டும் ஆகாய தத்துவம் விளக்கப்படுகின்றது? சிதம்பர ரகசியம் என ஒன்றுமில்லாத ஒரு வெளி மட்டும் காட்டப்படுகின்றது?

நடராஜ கோலத்தில் அதாவது இடையறா நடனம் என சிவன் ஏன் அங்கு ஆடிய கோலத்தில் காட்சியருள வேண்டும்?

இந்த கேள்விகளோடு சிந்தித்தால் அந்த ஆலயத்தின் பெருமையும் அருமையும் தெரியும். அதை விஞ்ஞானத்தோடு பொருத்தினால் இன்னும் பல அதிசயமான ரகசியங்களும் புரியும், தங்க சபையின் தாத்பரியமும் விளங்கும்.

அதனை சூரியனின் தலம் எனச் சொன்னார்களே ஏன்?

சூரியனே உலகுக்கும் அதன் உயிருக்கும் மையம். பூமி முதலான கோள்கள் அதை சுற்றித்தான் வருகின்றன, அது இல்லாமல் உலகம் இல்லை எதுவுமில்லை, அது இல்லாவிட்டால் எல்லாமே இருள்.

அதுதான் ஜாதக கட்டம் முதல் எல்லா இயக்கத்துக்கும் பிரதானம்.

இந்துக்கள் அண்டத்தில் இருப்பதையெல்லாம் பிண்டத்திலும் கண்டவர்கள்.  அதனால் ஆத்மாவினை சூரியனின் வடிவமாகக் கண்டார்கள்.

மானுட ஆத்மாவினை சூரியனின் சாயலாக கண்டார்கள், சுருக்கமாகச் சொன்னால் உயிர்சக்தி ஆத்ம சக்தி என சரியாக சொன்னார்கள்.

சூரியனை ஆத்மகாரகன் என அவர்கள் சொன்னதிலே எல்லா ரகசியமும் அடங்கிப் போயிற்று.  அதுவும் அந்த தலம் சூரியனுக்கானது என்பதிலே ஆத்மபலம் தரும் ஆலயம் அது என்பது இன்னும் தெளிவாயிற்று.

சிவனுக்குரிய அந்த தலத்தில் ஆத்மபலம் அதிகரிப்பதும், சூரிய ஒளியில் உண்மை தெரிவதைப் போல இருள் நீங்கி எல்லாம் சரியாக பார்க்க முடிவதைப் போல அந்த தலத்தில் கிடைக்கும் சக்தியால் ஆத்மஞானம் ஒளிரும் என்பதை ரிஷிகள் உணர்ந்தார்கள்.

ரிஷிகளுக்கு அதனை தெரியப்படுத்திய சிவன், தன் அடியார்கள் ஞானியர் மூலமாக எல்லா மக்களுக்கும் அதை தெரியப்படுத்தவே புலிக்கால் முனிவர், பதஞ்சலி இன்னும் பலரை அழைத்து தன்னை வெளிப்படுத்தினார்.

இந்த பிரபஞ்சத்தின் இயக்கு சக்தியினை அண்டவெளி முதல் அணுசக்திவரை இயங்கும் சூட்சுமத்தை தன் தாண்டவம் எனும் ஆடலில் தெரியப்படுத்தினார்.

அது நடராஜ கோலமாயிற்று.

அந்த கோலத்தை கண்ட ரிஷிகள் அதனை ஒவ்வொருவரும் ஆத்மத்தால் உணர உண்மையினைக் கண்டு தெளிய அங்கே ஒரு ஆலயம் எப்படி வடிவமைக்கபட வேன்டும் என்பதை சொன்னார்கள்.

அது ஆத்ம ரகசியத்தை, ஆத்ம இயக்க தத்துவத்தை, உடலில் உயிர் ஆடும் தத்துவத்தை அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு, ஆகாய தத்துவம் உடலிலும் உண்டு என்பதை சொன்னார்கள்.

சிதம்பரம் ஆலயம் ஆகாய தத்துவமாய், இன்றும் அங்கு சன்னதியில் ஒரு வெளி மட்டும் இருப்பதாய் இருப்பதன் தத்துவத்திலே முழு உண்மையும் அடங்கிவிடுகின்றது.

சித் + அம்பரம் என்பதே சிதம்பரம் என்றாயிற்று.

அம்பரம் என்றால் ஆகாயம் என பொருள், சித் என்றால் மனம் அல்லது அறிவு.

ஆகாய தத்துவத்தை அறிந்துகொள்ளுமிடம் அதை உணருமிடம் என்பது பொருள், அதனாலே அதற்கு அம்பரம், சிதம்பரம் என பெயரிட்டார்கள்.

அண்டவெளியின் ஆகாயம் எனும் வெளி மானிட உடலிலும் உண்டு என்பதையும் அங்கேதான் ஆத்மா உணர்வாக வசிக்கின்றது சூரிய பிம்பமாக வசிக்கின்றது என்பதை சொன்னார்கள்.

அந்த சிதம்பரம் ஆலயத்தின் அமைப்பே உடலின் அமைப்பினை ஒத்திருக்கும்.

ஐந்து சபைகள் கொண்ட அந்த ஆலயத்தில் கனகசபை எனும் பொன்னம்பல சபை பிரசித்தியானது.

இக்கோவிலின் சிறப்பே மானிட உடல் இயக்கத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது.

அந்த தங்க கூரையில் 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உண்டு. அவை மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாச மூச்சுகளின் எண்ணிக்கையைக் குறித்தது.

அங்கே 72 ஆயிரம் ஆணிகள் தங்கத்தில் உண்டு. அவை மனிதனின் நாடி நரம்புகளைக் குறிப்பது.  கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கும். 

இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

இங்கு எல்லாமே ஒரு கணக்கு, மானிட உடல் முதல் இறைவனின் ஆகமங்களைச் சொல்லும் கணக்கு. அன்றே ரிஷிகளும் ஞானியரும் மானிட உடலை பிரபஞ்சத்தை இணைத்து உருவாக்கிய கோவில் இது.

அன்றே எல்லாவற்றையும் ஞானத்தால் உணர்ந்த இந்து ரிஷிகள் அந்த தத்துவப்படியே அதனை அமைத்தார்கள்.

மானிட உடலில் இதயம் அருகே ஒரு வெளி இருப்பதையும் ஆகாய வெளியோடு அது பொருந்துவதையும் அங்கேதான் ஆத்ம உணர்ச்சி இருப்பதையும் அறிந்து இந்த கோவிலில் அதை உருவமாக வைத்தார்கள்.

சிதம்பர சன்னதியில் வெளி என்பது ஆகாய தத்துவமாக காட்டப்படுவது, மானிட மனதினுள் ஒரு வெளி உண்டு அங்கேதான் ஆத்ம வடிவமாக இறைவன் உண்டு என்பது.

சூரியன் போல அந்த ஆத்மா சுடர்விடக் கூடியது. அதை ஞானத்தால் அடையலாம் தெளியலாம் என்பது ஞானியர் போதனை.

சூரியன் இருளை அகற்றுவது போல இந்த ஆலயத்தில் வழிபடுவோர்க்கு ஆத்ம தெளிவு எற்படும் என்பது நம்பிக்கை.

ஆத்ம தெளிவு என்பது எது நிஜம், எது மாயை என்பதை உணர்த்துவது, எது நிலையானது எனும் தெளிவினைக் கொடுப்பது.

இது ஏன் தங்கசபை என அழைக்கப்பட்டது என்றால் அங்கேதான் சிவனின் ஒரு தொழிலைச் சொல்லி அதனை குறித்தார்கள்.

இத்தலம் சூரிய தலம், சூரியன் என்றால் அக்னி, சிவன் அக்னி வடிவம் இங்கே சிவபெருமானே அக்னிவடிவில் நிற்கின்றார்.

இத்தலத்தில் அவர் அருளல் தொழிலை செய்கின்றார், அது அவரின் ஈசான முகம் என அழைக்கப்படுகின்றது.

இங்கு சூரியனாக அக்னி வடிவமாக இருக்கும் சிவனே, அருளல் அதாவது முக்தி அருளும் குருவாகவும் விளங்குகின்றார்.

இந்த தலம் சூரியனும் குருவும் சேர்ந்த மங்கலத் தலம், அதாவது தெய்வீக ஞானம், உயர்நிலை ஞானம் இங்கு அருளப்படும்.

அருளல் தொழிலை செய்யும் சிவபெருமான் இங்கே குருவாக, ஞான குருவாக நின்று முக்தி அருள்கின்றார், ஞானத்தின் கடை நிலையினை அருள்கின்றார்.

இந்த நிலையினைத்தான் இந்த ஞானக் கடைநிலையினைத்தான் ஈசான முகம் அருளும் என்பார்கள்.  ஈஷா என்பது அந்த பொருளை சொல்வது.

பரந்த வெளியில் ஆத்மா கலந்துவிடும் மாபெரும் கடை நிலை அது. இதற்கு மேல் எதுவுமில்லை. எல்லாம் கடந்த நிலை. எல்லாமே ஒன்றான நிலை என்பதில் ஆத்மா கரைந்து போவது.

இந்த ஈஷா அல்லது ஈசா எனும் தெய்வீக நிலை, பிரபஞ்ச வெளியில் ஆத்மா கலந்துவிடும் அருளை பாக்கியத்தை தருவது இந்த சபை.

குருவின் உலோகம் தங்கம். குரு நிலையில் இன்றும் என்றும் அழியாத என்றும் மங்காத ஞானமுக்தியினை சிவன் அருள்வதால் இச்சபை தங்க சபை என்றாயிற்று.

புடமிடப் புடமிட பொன் துலங்கும்.  அப்படி சிவபக்தியிலும் தேடலிலும் இறங்கும் ஆன்மா பொன்போல் சுடர ஆரம்பிக்கும்.  அப்படிப்பட்ட வரம் தரும் இடத்தையே பொன் அம்பலம் என்றார்கள், பொற் கூரையிட்டு காத்தார்கள்.

சிவனில் கலக்கும் ஆன்மா சிவன் போல் ஜொலிக்கும் அதனாலே பொன்னார் மேனியனே எனப் பாடினார் சம்பந்தர்.

சிதம்பரம் ஆலயம் ஞானம் தருமிடம். ஞான முக்தி தருமிடம்.  மாணிகவாசகர் நந்தனார் போன்றோர் அப்படி முக்தி பெற்றார்கள்.

வெளி எனும் பரவெளியில் ஆத்மா கரைவதே ஞானக் கடைநிலை என்பதைச் சொல்லி அம்பல வெளி வைத்த ஞானியர், தங்கம் எப்போதும் தங்கமாக இருப்பது போல் உயர்நிலை ஞானம் அடைந்த ஆன்மா அதுவாகவே நிலைக்கும் என்பதைச் சொன்னார்கள்.

சிதம்பர ரகசியம் புரிந்துகொள்ள முடியாதது என்பதெல்லாம் விஷயம் அல்ல, அது உண்மையில் ரகசியமும் அல்ல, புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்தான் முக்கியம். அதைத்தான் ரகசியம் என்றார்கள்.

மனதில் இருக்கும் வெளியில் அதாவது இதயம் அருகே இருக்கும் சக்கர வெளியில் ஆகாய தத்துவமாக ஒரு வெளி இருக்கின்றது, அங்கே ஆத்மா சூரியன் தத்துவத்தில் இருக்கின்றது.

மனதை ஒருமுகப்படுத்தி இந்த வெளியினை பரவெளியுடன் கலந்தால், யோகத்தில் பக்தியில் இறங்கி மிக வைராக்கியமாய் சாதித்தால் மனிதன் தெய்வ நிலை அடைவான்.

அதுதான் சமாதி நிலை. அதுதான் எல்லாம் கடந்த ஞானயோக நிலை.

இதைச் சொல்வதுதான், எல்லாம் கடந்த நிலையில் அந்த சமாதி நிலை எனும் பரவெளி நிலைக்கு ஆத்மாவினை அழைத்து செல்வதுதான் அந்த ரகசியம்.

எல்லாம் கரைந்த நிலை அது, தான் எனும் அகந்தை நினைவு எல்லாம் கரைந்து, தானும் இறையும் ஒன்று என்பதை உணரும் நிலை அது.

குருவாக நின்று சிவபெருமான் முக்தி அருள்வார், அருளல் தொழிலை செய்யும் பெருமான் அங்கே ஞானமுக்தி தருவார்.

அப்படி பரவெளியில் இறைசக்தியுடன் கலந்து விடுவதைத்தான் அதுதான் நித்தியம் அதுதான் நிலையானது என்பதைத்தான் சிதம்பர ஆலயம் போதிக்கின்றது.

எல்லாம் கடந்துவிடு, அப்படிக் கடந்துவிட்டால் “தான்” இல்லா நிலை வரும். அந்த நிலைதான் இறைநிலை ஞானநிலை அதுதான் நிஜம். மற்ற எல்லாம் மாயை என போதிப்பதே அந்த ஆலய தத்துவம்.

அந்த ஆலயம் பாரதத் தனிப் பெருமை. பாரதத் தனி ஞான அடையாளம். இந்துக்களின் தனிப்பெரும் சொத்து.  தத்துவக் குவியல்.

பொன் வடிவில் ஆத்மா சுடர்விடும்போது அது சிவநிலை அடைகின்றது என்பதைத்தான் பொன்னம்பலமாகச் சொன்னார்கள்.

அதனாலே அந்த அலயம் பொற்சபை என்றாயிற்று.

இன்றும் வடமொழியில் அதற்கு “ருக்மா தீப்” அதாவது பொன் சபை என்றே பெயர், அனைத்து இந்து மக்களும் தேடிவரும் ஆலயம் அது.

அங்கே நடராஜ கோலத்தில் சிவன் நிற்பதும் இந்த ஆகாய தத்துவமும் இன்றைய விஞ்ஞானத்தையும் போதிக்கின்றன‌.

ஐன்ஸ்டீன் அதைத்தான் போதித்தான். அவன் தன் இயற்பியலில் புதுப் பாதையினை ஆராய்ச்சிக்காகத் திறந்தான்.  இன்றைய உலகம் அந்த வழியில்தான் விஞ்ஞானத்தைத் தேடுகின்றது.

அவன் காலம், வெளி, பொருள் என மூவகையினை அடிப்படையாகக் கொண்ட இயற்பியலை பிரபஞ்ச விதியாகச் சொன்னான்.

காலம், வெளி, பருபொருள் மூன்றுக்குமான தொடர்பை வரையறுத்தான்.  நவீன பவுதியியல் இதனை ஏற்று ஆய்வினைத் தொடர்கின்றது.

இந்த ஆலயமும் அதற்கான தொடர்பைச் சொல்கின்றது.  இன்றைய இயற்பியல் சொல்வதை என்றோ சொன்ன ஆலயம்தான் சிதம்பர ஆலயம்.

அது காலத்தை சிவன், வெளி எனும் ஆகாயத்தை விஷ்ணு, பருபொருளை பிரம்மன் எனப் பிரதிபலித்து நிற்கின்றது.

இங்கே பிரம்மனும் விஷ்ணுவும் வருவார்களா என்றால் வருவார்கள், தொடக்கத்தில் அபப்டித்தான் இருந்திருக்கின்றது.

விஷ்ணுவுக்கு இங்கே சன்னதியெல்லாம் இருந்து பின் அறியாமை குழப்பத்தால் அகற்றப்பட்டு பின் மீண்டும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது.

புலிக்கால் முனிவரிடமும் பதஞ்சலியிடமும் சிவனே திருவரங்கம் சென்று உண்மையினை உணருமாறுதான் நவபுலியூர் யாத்திரையினைத் தொடங்கி வைக்கின்றார்.

கடைசியில் பிரம்மனின் ஆலயத்தில்தான் அவர்கள் ஜீவசமாதி அடைகின்றார்கள்.

இந்த ஆலயம் காலம், வெளி, பொருள் எனும் மூன்று தத்துவங்களை நடராஜ கோலத்திலும், ஆகாய சபையிலும் இன்னும் பிரம்மனுக்குரிய தன்மையிலும் போதிக்கும் ஆலயம்.

படைத்தல், காத்தல், அழித்தல் என எல்லாமும் மறுபடி மறுபடி வரும் என்பதை போதிக்கும் ஆலயம்.  பரம்பொருளின் தன்மையினை இயல்பை அழகாய்ச் சொல்லும் ஆலயம்.

அதாவது எல்லாமே மூல சக்தி, ஒரே சக்தி. அது வேறு வேறு வடிவில் இயங்குகின்றதே தவிர மூலம் ஒன்றே எனச் சொல்லும் ஆலயம்.

அந்த மூல சக்தி, காலம் வெளி படைக்கபட்ட பொருள் என மூன்றிலும் இருப்பது போல் மூன்றிலும் ஒரு தொடர்பாய் இருப்பது போல் ஆத்மாவிலும் உண்டு.  இதயம் அருகே இருக்கும் வெளியின் ஒளியில் உண்டு.

அந்த ஒளியினை துலங்கவைத்து அதை உணர்ந்துகொள் என்பதே சிதம்பர ஆலய தத்துவம் அல்லது ரகசியம்.

யோகத்தால் ஆத்மாவினை பொன்போல் சுடர்விடச் செய்தால் அந்நிலையினை யோகத்திலும் தியானத்திலும் எட்டினால் மனதிலே இறைவனைக் காணலாம்.  இறை நிலை அடையலாம் என்பதே பொன் அம்பலம் என்பதன் பொருள்.

இதனாலே பொன்வண்ணக் கயிலாயம் போல இதனை தென்னகக் கயிலாயம் என்றார்கள்.

பொன்னார் மேனியனே என்பது சிவனின் சிவந்த ஜொலிப்பான வடிவினைச் சொல்லும் வரி, அந்த பொன்சுடரை ஆத்ம தரிசனத்தினிலே காணலாம்.  யோக வழிபாட்டில் காணலாம் என்பதை போதிப்பதே அந்த சபை கொண்ட ஆலயம்.

எவ்வளவோ வேதாந்தம், ரகசியம், சூட்சமம் ஏகப்பட்ட விழாக்கள் கொண்டாட்டங்கள் மகா பிரமாண்டமான அதிசயிக்க வைக்கும் வரலாறுகள் என ஏகப்பட்டது அந்த ஆலயத்தில் உண்டு எனினும் அதன் சுருக்கமான தாத்பரியம் இதுதான்.

அங்கு சென்று வணங்கினால் தெளிவுவரும் ஞானம் வரும், முக்தி நிலை வாய்க்கும்.

சூரியனின் தலமான அந்த ஆலயம் ஆத்ம சுடரை துலங்கச் செய்யும். அதனால் நல்ல பலன்கள் உண்டாகும். குருவாக சிவன் நிற்பதால் ஞானம் அருளப்படும்.

வாழ்க்கைக்கும் பூலோக இயக்கத்துக்கும் அடிப்படையானது சக்தி. அதைத் தருவது சூரியன். பூமியில் நேரத்தை காலத்தை வயதை இன்னும் பலவற்றை நிர்ணயம் செய்வதும் சூரியன்.

சூரியன் என்பது சிவனின் அம்சங்களில் ஒன்று, அதன் ஒளி, வெப்பம், காலநேர நிர்ணயமெல்லாம் அதை அழகாகச் சொல்லும்.

அந்த சூரியனின் ஆதிக்கத் தலமே சிதம்பரம். அது பல உண்மைகளை போதிக்கின்றது.  ஜாதக ரீதியாகவும் இந்த ஆலயம் தனி பலன்களை சூரிய அம்சமாகத் தருகின்றது.

ஆன்மீகத்தில் நாட்டமிருந்தால் அது யோக சூத்திரத்தை கற்றுத் தரும். பல ஞானங்களைத் தரும்.  அதனை நன்முறையில் பழக்கினால் அந்த ஆனந்த நடன கோலத்தையும் காட்டும்.

லவுகீக சிக்கலில் இருந்து நீங்கள் அந்த ஆலயம் சென்று வேண்டினால் மனம் தெளியும்; ஆத்மா தெளியும்; எது கர்மாவோ எது அவசியமோ அதை மட்டும் செய்வீர்கள். வீண் கவலையும் குழப்பமும் பயமும் அகலும்.

அதன்பின் நீங்கள் தொட்டதெல்லாம் வாய்க்கும்.

சிதம்பர ஆலயம் என்பதும் பொற்சபை என்பதும் ஆத்ம பயணத்தின் கடைநிலையினைக் குறிக்கும்.

சித்திரமாக உடலில் மண் தத்துவமாக இருக்கும் ஆத்மா, தாமிரமாக வலுப்பெற்று, வெள்ளியாக சுத்தமாகி, ரத்தினம் போல் ஜொலித்து, தங்கம் போல் எப்போதும் ஒளிவீசி முக்தி நிலை எய்தவேண்டும் என்பதுதான் பஞ்ச சபையின் தத்துவம்.

சிவனின் ஐந்தொழிலை சொல்லும் தத்துவம்.

இந்த ஐந்தாம் நிலையினை, மகா உன்னத நிலையினைச் சொல்லி தன்னிடம் வருவோர்க்கெல்லாம் ஞானமும் முக்தியும் அளிக்க சிவன் சிதம்பரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றார். அதைத் தேடிச் சென்று பெறும் ஆத்மா பாக்கியம் செய்தது.

சிதம்பரத்தை கன்டாலே முக்தி என்பது, இந்த பொற்சபையின் தாத்பரியத்தில் இருந்து வந்தது.

"மோக்ச மூலம் குரு கிருபா" என்பது ஸலோகம்,அதாவது மோட்சபாக்கியம் குருவருளால் மட்டும் கிடைக்கும் என்பது பொருள்

அதைத்தான் இங்கே சிவன் அருள்கின்றார் என்பதை தங்க சபையாக சொல்கின்றது இந்த ஆலய தத்துவம்

"உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.... 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...